Guru poosai: சித்திரை - திருவாதிரை
"விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன்"– திருத்தொண்டத்தொகை
மணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவன் இறைவன். அவன் திருவடிகளை வேண்டிப் பரசு என்னும் ஆயுதம் பெற்றவன் பரசுராமன். அவனது நாடு மலைநாடு எனப்படும் சேரநாடு. கடலில் விளைந்த முத்து, கரும்பில் விளைந்த முத்து, மூங்கிலில் விளைந்த முத்து, யானைத் தந்தத்தில் விளைந்த முத்து, இவற்றை முத்துப் போன்ற சிரிப்பினை உடைய மகளிர் கோத்தனர். அத்தகு வளமுடைய சேரநாட்டு ஊர்களில் சிறந்ததும், தொன்மையானதுமான ஊர் செங்குன்றூர். அவ்வூரில் வேளாண் குலத்தில் தோன்றியவர் விறன்மிண்டர். சிவபெருமானின் கழல்களைப் பற்றிக் கொண்டவர். வேறு பற்றுக்களைப் பற்றாதவர். பல்வேறு தலங்களையும் சென்று வழிபட்டார்.

முதிரும் அன்பில் பெருந்தொண்டர் முறைமைநீடு திருக்கூட்டத்தாராகிய அடியார்களையும் தொழுதார். அருவி வீழும் மலைநாடு கடந்து சோழநாட்டுத் திருவாரூர் சேர்ந்தார். திருவாரூர்ப் பூங்கோயில் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார் பலர் கூடியிருந்தனர். இறைவனை வழிபட வந்த சுந்தரர் அடியவர்களைத் தொழாமல் உள்புகுந்தார். அதனைக் கண்ட விறன்மிண்டர் சுந்தரரைப் புறகு (புறம்பானவர்) என்றார். அடியார்கள் தம்பிரான் தோழர் இவர் என்றனர். பிறைசூடிய பெருமானுக்கும் புறகு என்றார். அதனைக் கேட்ட சுந்தரர் உலகம் உய்யவும், நாம் உய்யவும், சைவ நன்நெறியின் ஒழுக்கம் உய்யவும் திருத்தொண்டத்தொகை பாடி அருளினார். விறன்மிண்டர் நெடுநாட்கள் இவ்வுலகில் வாழ்ந்து சைவநெறி போற்றித் தொண்டு புரிந்தார். இறைவனது கணங்களுக்குத் தலைவராகும் பேற்றினை இறுதியில் பெற்றார்.