Guru poosai: கார்த்திகை - உத்திரம்
"வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்" – திருத்தொண்டத்தொகை
சேதிநாட்டின் தலைநகரம் திருக்கோவலூர். மலையமான் மரபில் வந்தவர். மெய்ப் பொருள் நாயனார். தமது செல்வம் அனைத்தும் அடியவர்களுக்காகவே என நினைத்தார். மகிழ்ச்சிப் பொங்க அவர்க்குக் கொடுத்து வந்தார். இத்தகு நாளில் முத்தநாதன் என்னும் மாற்றரசன் நாயனாரிடத்துப் பகைமை கொண்டான். பலமுறை படையெடுத்துத் தோற்றுப் போனான். சிவனடியார் வேடம் கொண்டே மெய்ப்பொருளாரை வெல்ல முடியும் என எண்ணினான். உடம்பெங்கும் திருநீறு பூசினான். சடைமுடிகள் புனைந்தான். கையில் ஓலைச் சுவடி ஏந்தி அதனுள் ஒரு கத்தியை மறைத்து வைத்துக் கட்டிக் கொண்டான். பொய்த்தவ வேடங்கொண்டு மெய்ப்பொருளார் அரண்மனைக்குள் புகுந்தான்.

தடை பல கடந்து உள் புகுந்தான். மெய்க்காவலன் தத்தன் தடுத்தான். அரசர் துயில் கொள்ளும் அறையில் நுழைந்தான். உங்கள் நாயகனார் உரைத்த ஆகமநூல் உமக்குக் கூற வந்தேன் என்றான். நாயனார் ஆசனத்தில் அவனை அமர்த்தித் தாம் கீழிருந்து வணங்கினார். அப்போது முத்தநாதன் அவரைக் கத்தியால் குத்தினான். பகைவனை வெட்ட வந்த தத்தனை நாயனார் தடுத்துத் தத்தா நமர் என்றார். அவருக்குத் துன்பம் ஏதும் வாராமல் எல்லையில் கொண்டு போய்விட்டு வா என ஆணையிட்டார். அரசர் ஆணையைத் தத்தன் நிறைவேற்றினான். ஐயந் செய்தது யார்செய்யவல்லார் என அரசர் மகிழ்ந்தார். அரசியலாரையும் அரசியாரையும் அழைத்துப் பரவிய திருநீற்று அன்பு பாதுகாத்து உய்ப்பீர் என ஆணையிட்டார். இறைவன் நாயனாருக்குத் திருக்காட்சி நல்கினான்.