"திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்"– திருத்தொண்டத்தொகை
ஆதியும் அந்தமும் இல்லா ஆனந்தக் கூத்தர் திருநடம்புரியும் மூதூர் தில்லை ஆகும். அவ்வூரில் குயவர் குலத்தில் தோன்றியவர் திருநீலகண்டர். அடியார்களுக்குத் திருவோடு அளிக்கும் திருப்பணி புரிந்தார். இளமைத் தன்மை காரணமாகச் சிற்றின்பத் துறையில் எளியவர் ஆனார். பரத்தை இல்லம் சென்றுவந்த அவரை மனைவியார் கடிந்தார். எம்மைத் தீண்டுதல் கூடாது எனத் திருநீலகண்டப் பெருமான் மீது ஆணையிட்டார். எம்மை என அம்மை பன்மையால் கூறியமையால் மாதரார் யாவரையும் மனதாலும் தீண்டேன் என உடல்தொடர்பின்றி வாழ்ந்தார். இளமை கழிந்து மூப்பு வந்தது. இத்தகு நாளில் சிவயோகியார் ஒருவர் வந்தார். அவர் நாயனாரிடம் திருவோடு ஒன்றைத் தந்து கேட்கும் போது கொடு எனக்கூறிச் சென்றார். நாயனார் அதனை பத்திரப்படுத்தினார்.

பன்னாட்களுக்குப் பின்னர் சிவயோகி வந்து ஓட்டினைக் கேட்டார். வைத்திருந்த ஓட்டினை காணவில்லை. நீலகண்டர் திகைத்தார். வேறு ஓடு தருவதாகக் கூறினார். தந்த மண்ணோடு அன்றி பொன்னோடு தந்தாலும் வேண்டா எனச் சிவயோகி சினந்து மறுத்தார். பலமுறை கூறியும் சிவயோகி ஒத்துக் கொள்ளவில்லை. நீ திருடவில்லை என்றால் உன் அன்பு மகனின் கையைப் பற்றிக் குளத்தில் மூழ்கிச் சத்தியம் செய் என்றார். வழக்குத் தில்லை வாழந்தணரிடம் சென்றது. சிவயோகியார் கூறியதே சரி எனக் கூறினர். திருப்புலீச்சரம் கோயில் குளத்தில் மூங்கில் குச்சியைப் பற்றிக் கொண்டு இருவரும் மூழ்கினர். கைபற்றி மூழ்கும் படி சிவயோகி கூற தமது சபதத்தை அனைவரும் அறியும்படி கூறினார். மூழ்கி எழுந்தவுடன் இருவரும் இளமையாய் இருந்தனர். இறைவன் காட்சி தந்து எம் உலகை அடைக என வரமளித்தார்.