சைவ சித்தாந்த தத்துவ ஞானம்

சைவம்

– முனைவர் ர. வையாபுரி

முன்னுரை:
சைவ சித்தாந்த தத்துவ ஞானத்தைச் சுருக்கமாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் முதலில் இத்தொடர் மொழியில் உள்ள சைவம் என்னும் சொல்லின் பொருளை அறிந்து கொள்ளுதல் வேண்டும். அதன்பின் சித்தாந்தம், தத்துவம், ஞானம் என்பவற்றின் பொருளை அறிந்து கொள்ளலாம். இந்த கட்டுரையில் “சைவம்” என்னும் சொல்லின் பொருள் சுருக்கமாக எழுதப்படுகிறது.

சைவம் – பொதுப்பொருள்:
சைவம் என்பது ஒரு சமயத்தின் பெயர். இச்சமயத்தவர் வழிபடும் கவுளின் பெயர் சிவம் என்பது. சிவத்தை வழிபடும் நெறியை – சிவமாக ஆவதற்குரிய நெறியை – உணர்த்துவது சைவ சமயம். சிவன் என்னும் செம்பொருளை வழிபடுபவன் சைவன். இவை சைவம், சைவன் என்னும் சொற்களுக்குரிய பொதுப் பொருள்.

சைவம் – சிறப்புப் பொருள்:
சிவம் என்ற சொல்லுக்கு மங்கல குணங்கள் உடைமை, மலக்குற்றம் இன்மை என்பன சிறப்புப் பொருள். இதனை,
“குறைவிலா மங்கலக் குணத்தன் ஆதலின்
நிறைமலம் அநாதியே நீங்கி நிற்றலின்
அறைகுவர் சிவன்என அருளின் மேலவர்”
எனவரும் மாதவச் சிவஞானமுனிவர் திருவாக்கினால் உணரலாம். (காஞ்சிப்புராணம் – திருநெறிக்காரைக் காட்டுப்படலம் – 230)

பொருளுக்கும் குற்றம் அமங்கலம். குணம் மங்கலம். சிவன் – மங்கலக் குணம் உடையவன். குற்றம் மலச்சார்பினால் வருவது. குணம் மலச்சார்பு இன்மையால் வருவது. மலச்சார்புடைய பொருள் அசைவம்.

சிவம் இயல்பாகவே மலச்சார்பு என்னும் குற்றம் இல்லாதது. ஆதலின் முற்றும் உணர்தல் (சர்வஞ்ஞத்துவம்) முதலிய மங்கல குணங்களை உடையது. உயிர் இயல்பாகவே மலச்சார்பு என்னும் குற்றம் உடையது. ஆதலின் சிற்றறிவு (கிஞ்சிஞ்ஞத்துவம்) முதலிய அமங்கலங்களை உடையது.

சைவன் என்னும் பெயர்:
சைவ சமய நெறியில் நிற்பவன் சைவன். அவன் வழிபடும் கடவுளுக்கும் (சிவபரம் பொருள்) சைவன் என்பதே பெயர். “சதுர நடம் ஆட்டுகந்த சைவர் போலும்” என்பது திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளின் திருவாக்கு. (திருமுறை 1 – திருமுதுகுன்றம்) “தாள் செய்ய தாமரைச் சைவனுக்கு” என்பது மணிவாசகப் பெருமான் திருவாக்கு. (திருவாசகம் – குலாப்பத்து – 9) எனவே சிவம் – சைவம் – சைவன் என்னும் பெயர்கள் மங்கலகுணம், மலச்சார்பின்மை என்னும் காரணங்களால் வழங்கும் பெயர்கள் எனலாம். அமங்கலகுணம், மலச்சார்பு ஆகிய குற்றங்களை உடையவர் அசைவர் எனப்படுவர். குற்றம் உடைய புலால் உணவு அசைவ உணவு எனப்படுகிறது.

சிவநெறி:
அமங்கலம் – மலக்குற்றம் உடையதாய் இருக்கும் ஆன்மா அந்நிலையிலிருந்து நீங்கி மங்கலமாய் மலக்குற்றம் அற்றதாய் உள்ள சிவம் என்னும் செம்பொருளை அடைந்து சிவமாக நிற்றற்குரிய வழியை உணர்த்துவது சிவநெறி. இவ்வகையில் ஆன்மா தன் குற்றத்தை உணர்ந்து அதனின் நீங்கிச்சிவத்தைச் சார்ந்தால் (சிவசம்பந்தம் பெற்றால்) அவ்வான்மா சைவன் எனப்படும். “சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல்” என்பது திருமூலதேவ நாயனார் திருவாக்கு. (தந்திரம் 5 சாயுச்சியம் – 1)

முடிவுரை:
இதுவரை சைவம் என்பது ஒரு சமயத்தின் பெயர். அச்சமயத்துக் கடவுளின் பெயர் சிவம். அச்சமய நெறியைப் பின்பற்றுபவன் சைவன். மங்ககுணம் உடைமை சைவம். மங்கலகுணம் உடையவன் சைவன். சிவநெறியில் நிற்கும் ஆன்மாவுக்கும் சைவன் என்பது பெயர். அவன் வழிபடும் கடவுளுக்கும் சைவன் என்பது பெயர். மலச்சார்பின் நீங்கிச் சிவச்சார்பினை அடைதலே மங்கலம், சைவம் எனப்படும் என்பன ஒருவாறு விளக்கப்பட்டன.

அடிக்குறிப்பு:
பொதுவாகச் சமயங்களெல்லாம் அச்சமய நெறியை வகுத்துக் கொடுத்தவர் பெயராலோ, அந்நெறியினரால் வழிபடப் பெறும் கடவுளர்களின் பெயர்களாலோ கூறப்படும். சாருவாகம் (உலகாயத சமயம்) ஆருகதம் (சமண சமயம்), பௌத்தம், வைணவம், காணாபத்தியம், கௌமாரம், சாக்தம் என வருவன காண்க. இங்ஙனம் அமையும் பெயர்களைத் தத்திதாந்த நாமம் எனவடமொழி இலக்கண நூலார் கூறுவர். தமிழில் “வலைஞன்” முதலிய காரணப் பெயர்கள் (வலையால் தொழில் செய்து வாழ்பவன்) இத்தகையன என்பர்.

சித்தாந்தம்

முன்னுரை:
சைவ சித்தாந்தத் தத்துவ ஞானம் என்னும் தொடர்மொழியில் உள்ள சித்தாந்தம் என்னும் சொல்லின் பொருள் இந்தக்கட்டுரையில் சிறிது எழுதப்படுகிறது.

சொல் அமைப்பு:
இது சித்த+அந்தம் = சித்தாந்தம் என வந்தது. சித்தி என்பதற்கு அடையப்பட்டது, பெறப்பட்டது என்பது பொருள். எனவே சித்த என்பதற்குப் பெறப்பட்ட அடையப்பட்ட என்பது பொருள். அந்தம் என்பதற்கு முடிவு என்பது பொருள். ஆகச் சித்தாந்தம் என்பதற்குப் பெறப்பட்ட முடிவு என்பது பொருள்.

முடிவு:
ஒருவர் ஒரு பொருளைப் பற்றி ஆராய்கிறார். ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவு கிடைக்கிறது. அதனை அவர் பிறர் அறிய வெளிப்படுத்துகிறார். இது அவருடைய சித்தாந்தம் எனப்படுகிறது. இங்குச் சித்தாந்தம் என்பது கொள்கை முடிவு என்னும் பொருளைத் தருவதாக அமைகிறது.

ஐயம்:
அவர்கண்ட முடிவே முடிவாக அமைந்து விடுவதில்லை. அதன்மேல் சிலர் ஐயம் எழுப்பலாம். ஐயம் எழுப்பியவர் வேறொரு கொள்கை முடிவினையும் முன் வைக்கலாம். இவர் முன் வைக்கும் முடிவு பூர்வ பட்சம் எனப்படும்.

துணிவு:
இங்ஙனம் எழுந்த ஐயத்தையும் இதன்படி முன் வைக்கப்பட்ட கொள்கையினையும் தகுந்த காரணம் கூறி உதாரணமும் காட்டி மறுத்து ஒருவர்தம் கொள்கையை மேலும் ஐயம் எழுவதற்கு இடமின்றி நிலைநாட்டலாம். இங்ஙனம் துணிந்து நிலைநாட்டப்பட்ட கொள்கை பூர்வ பட்சத்தை மறுத்துத் துணிந்து கூறப்பட்ட சித்தாந்தம் எனப்படும்.

முடிந்த முடிவு:
இங்ஙனம் கொள்கை, அதனை மறுத்துரைக்கும் கொள்கை என விரித்து – பரந்து – செல்கின்ற பொழுது இனி யாராலும் மறுத்துக்கூற இயலாது என்ற வகையில் ஐயத்துக்கு இடமின்றித் துணிவாக நிலைநாட்டப்படும் கொள்கையே முடிந்த முடிவு – அந்தாந்தம் – எனப்படும். இங்ஙனம் நிலைநாட்டப்பட்ட கொள்கையே சைவ சித்தாந்தம். இந்தக் கொள்கை யாராலும் பூர்வபட்சம் செய்யப்படாத கொள்கை. எனவே இது பரம சித்தாந்தம் எனப்படும்.

சித்தாந்தம் – சிவாகமம்:
சைவ சித்தாந்தம் என்பது குறையறிவுடைய மனிதர்களால் மாயாகாரியமான மனம், சித்தம், ஆங்காரம், புத்தி என்பவற்றைத் துணையாகக் கொண்டு ஆராய்ந்து காணப்பட்ட முடிவன்று. பக்குவமுடைய ஆன்மாக்களுக்காக முற்றறிவுடைய இறைவனால் அறிவிக்கப்பட்ட முடிவு. இம்முடிவினை வெளிப்படுத்தும் நூல் சிவாகமம். இதற்குச் சைவநூல் என்றிரண்டே நூல்கள்”, “சிவாகமங்கள் சித்தாந்தமாகும்” என்பன அருள்நந்தி சிவத்தின் வாக்கு.(சிவஞான சித்தியார் – சுபக்கம் 267)

வேதாந்தமும் சித்தாந்தமும்:
தத்துவ ஞானத்தைத் துணிந்து கூறும் அந்தங்கள் ஆறு என்பர். அவை வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம், போதாந்தம், யோகாந்தம், கலாந்தம் என்பன. (திருமந்திரம் – தந்திரம் 8 – ஆறந்தம்) இவற்றுள் வேதாந்தம் என்பது வேதத்தின் அந்தமாகிய உபநிடதம். சித்தாந்தம் என்பது சிவாகமங்களின் அந்தமாகிய ஞானபாதம். ஆதலின் சைவசித்தாந்தம் என்பது ஆகமாந்தம் எனப்படும். இவ்விரண்டுமே தலைமையான அந்தங்கள்.

சித்தாந்தம் வேதாந்தத்தை மறுக்கிறதா?
வேதம், ஆகமம் இரண்டும் இறைவனால் அறிவிக்கப்பட்டவை. எனவே ஒன்றை ஒன்று மறுப்பதன்று. உபநிடதத்தில் தத்துவஞானம் சுருக்கமாக உரைக்கப்பட்டது. இச் சுருக்கம் பல முரண்பாடுகள் தோன்றுவதற்கு இடமாயிற்று. ஆகமத்தின் ஞானபாதம் அம்முரண்பாடுகளைக் களைந்து துணிந்தமுடிவு இதுதான் என்று கூறுகிறது. எனவே இவ்விரண்டும் பொதுநூலும், சிறப்பு நூலும் போல சூத்திரமும் பேருரையும் (பாடியம்) போலக் கொள்ளத் தக்கன. ஆரணநூல் பொது, சைவம் அருஞ்சிறப்பு நூலாம்” என்பது சிவஞானசித்தியார் (சுபக்கம் 267)

இக்காலத்தவர் கூறும் விளக்கம்:
சிலர் சித்தர் + அந்தம் = சித்தாந்தம். சித்தர்கள் கண்டு கூறிய முடிவு என்கின்றனர். சித்தர்கள் காலம் வேறு. அவர்களுடைய பக்குவமும் போக்கும் வேறு. அவர்களுடைய பக்குவமும் போக்கும் வேறு. இன்னும் சிலர் சித்தம் + அந்தம் = சித்தாந்தம். மனிதன் சித்தத்தால் சிந்தித்துக் கண்ட முடிவு சித்தாந்தம் என்கின்றனர்.

சித்தம் பிரகிருதி மாயா காரியம். இதை வைத்துக் கொண்டு உண்மைகண்டு கூறுதல் இயலாது. எனவே இக்காலத்தவர் கூறும் விளக்கம் பொருந்துவதாகத் தெரியவில்லை.

முடிவுரை:
இதுவரை சித்தாந்தம் எவ்வாறு உருவாகிறது என்பதும், முடிந்த முடிவாக உள்ள சித்தாந்தம் எது என்பதும், வேதாந்தமும் சித்தாந்தமும் சித்தாந்தமும் ஒன்றை ஒன்று மறுப்பதன்று என்பதும் சிவாகமங்களுக்குச் சித்தாந்தம் என்பது பெயர் என்பது சித்தாந்தம் என்னும் சொல்லை இக்காலத்தவர் பிரித்துப் பொருள்கூறும் முறை பொருந்துவதன்று என்பது ஒருவாறு விளக்கப்பட்டன.

 

Back to Top