கருவறை இருட்டாக இருப்பது ஏன்?

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

தமிழகத்தில் தெய்வ வழிபாடு மிகத் தொன்மை வாய்ந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டுத் தெய்வ வழிபாடு நடைப்பெற்றுள்ளது. தொல்காப்பியத்தில் கோயிலில் கந்தழி வழிபாடு செய்த சான்றுகள் காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் கோயில் அமைப்பு, வழிபடும் முறை முதலியன ஆங்காங்கு உள்ளன.

பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் என்ற புலவர் பாடும்போது ‘முனிவர்கள் வணங்கும் மூன்று கண்களையுடைய சிவபெருமான் கோயிலை வலம் வரும்போது, உன்னுடைய கொற்றக்குடை பணிவதாக’ என்ற பொருளில்

      “பணி இயர் அத்தை நின்குடையே முனிவர்
      முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே”

எனப் புறநானூற்றில் பாடியுள்ளார்.

எனவே, சங்க காலத்தில் கோயில் வலம் வரும் முறையும், நாடாளும் மன்னனாக இருந்தாலும் கோயிலுள் குடைபிடித்துச் செல்லக்கூடாது என்பதும் தெரிய வருகின்றன.

புகார் நகரில் - கற்பகத்தரு, ஐராவதம் பலராமன், சூரியன், சம்பாதி, வேல், மாசாத்தன், அருகன், சந்திரன் முதலியோர்க்குக் கோயில் இருந்ததாகச் சிலப்பதிகாரத்தில் காண முடிகிறது.

பெருங்கோயில், கரக்கோயில், ஞாலக்கோயில், கொகுடிக்கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் ஆகிய கோயில்களைத் திருநாவுக்கரசர் தேவாரத்தில் குறிப்பிட்டுள்ளார். தொடக்க காலத்தில் மண், செங்கல், மரம் முதலியவற்றால் கோயில்கள் கட்டப்பெற்றன.

பல்லவர் காலம் முதல் கற்கோயில்கள் தோன்றின. கோயில் அமைப்பில் கோபுரம், பிரகாரங்கள், கொடிமரம், பலிபீடம், வாகனம், மண்டபங்கள், கருவறை முதலியன இடம்பெறுகின்றன. அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவையாகும்.

கோயில் அமைப்பு மனித உடலோடு ஒத்தது. கோபுரம் மனிதனின் பாதம் போன்றது. மல்லாந்து படுத்திருக்கும் மனிதனின் பாதம் மேல் நோக்கியிருப்பது போல் நுழைவாயிலில் உள்ள கோபுரம் உயர்ந்து காணப்படுகிறது. கொடிமரம் மனிதனின் முதுகுத் தண்டு போன்றது. துவார பாலகர் மனிதனின் தோள்கள் போன்றவர். மகாமண்டபம், அர்த்த மண்டபம் உடம்பு போன்றவை. அந்தராளம் கழுத்து போன்றது. கருவறை தலை போன்றது.

‘என்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம்’ என்பதற்கு ஏற்பக் கருவறை, கோயில் அமைப்பில் மிக முக்கியமானது.

கருவறைக்கு மூலஸ்தானம், உண்ணாழி எனப் பலபெயர்கள் வழங்கப் பெறுகின்றன. “கருவொடு பெயரிய காண்பின் நல்லில்” என்று சங்க இலக்கியமான நெடுநல்வாடை கருவறையைக் குறிப்பிடுகின்றது. கருவறையில் கோயிலுக்குரிய மூலமூர்த்தி அமைந்திருக்கும். இயற்கையாக அமைந்த கோயில் அல்லாமல் கட்டுகின்ற கோயில்களில் அளவுக்குத்தக்கபடி பக்கத்திற்கு எட்டு எட்டாக 64 சதுரங்கள் அல்லது ஒன்பது ஒன்பதாக 9 × 9 = 81 சதுரங்களில் கருவறை அமைக்கப்படும். சுற்றிலும் உள்ள சதுரங்களில் சுற்றுப்புற தெய்வங்கள், திருச்சுற்று இருக்க வேண்டும்.

சதுரங்கள் அமைப்பதற்குப் பதவின்யாசம் என்றும் சதுரங்களுக்கு மர்மத் தானங்கள் என்றும் வழங்கப்படும். கருவறை சதுரம், நீள்சதுரம், வட்டம், அறுகோணம், எண்கோணம் என்ற ஏதாவது ஓர் அமைப்பில் இருக்கும். கருவறையில் அமைந்திருக்கும்; ஏனைய உருவங்களுக்கேற்பப் பிற்பகுதியில் தள்ளி அமைக்கும் முறை உண்டு.

கருவறையில் பின்சுவர் முதல் மையம் வரையில் பத்துப் பாகம் செய்து நடுவில் 10-வது பாகத்தில் சிவலிங்கம் அமைக்கப்படும். 9-வது பாகத்தில் பிரம்மாவை வைக்க வேண்டும். 8-வது பாகத்தில் விஷ்ணுமூர்த்தி வைத்தல் வேண்டும். 7-வது பாகத்தில் சுப்பிரமணியர் வைத்தல் வேண்டும். 6-வது பாகத்தில் சங்கரி, சரஸ்வதி, இலக்குமி முதலிய உருவங்கள் அமைத்தல் வேண்டும். 5-வது பாகத்தில் ஏனைய பெண் தெய்வங்கள், 4-வது பாகத்தில் கணபதி, 3-வது பாகத்தில் பைரவர், 2-வது பாகத்தில் துர்க்கை, பிடாரி என்ற முறையில் உருவங்களை அமைத்தல் வேண்டும்.

வைணவக் கோயில்களில் கருவறையை மூன்று பாகம் செய்து, பின்சுவர் முதல் பாகத்தில் மூல மூர்த்தியையும், இரண்டாவது பாகத்தில் உற்சவமூர்த்தியையும் வைப்பது மரபாக உள்ளது. எல்லாக் கோவில்களிலும் கருவறை இருண்டேயிருக்கும்.

பண்டைய ஆலயங்களில் உள்ள கர்ப்பகிரகங்கள் மிகவும் இருண்டு தொழுவோர் மனதில் ஒரு வகை அச்சத்தையும், அதிசயத்தையும், வியப்பையும், திகைப்பையும் உண்டு பண்ணுமாறு அமைந்திருக்கும். அதற்குச் சூட்சுமான மறைபொருள் ஒன்று அறைக்குள் நிறைந்து மிதப்பாக வாக்குக் கெட்டாத உணர்ச்சியொன்று அடியார் மனத்துள் உண்டாகும். அஃது அவர்கள் பக்தியைப் பெருக்கும். அறிவின் சிறுமையை உணர்த்தும். தம்மை மறக்கச் செய்யும். உண்மை அன்பர்களைப் பரவசப்படுத்தும் என்று இலஞ்சி-சொக்கலிங்கம் அவர்கள் ஆலயங்களின் உட்பொருள் விளக்கம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கர்ப்பக்கிருகம் என்பது பிரதான மூர்த்தியை வைத்து வணங்கும் இடமாகும். இதற்கு மூலஸ்தானம் என்றும் பெயர் உண்டு. இதன் உண்மை-எல்லாம் புத்தி தத்துவத்தில் ஒடுங்க. புத்திதத்துவமும் தனு, கரண, புவன, போகங்களும் மாயையில் ஒடுங்க, மாயை இறைவன் திருவடியில் ஒடுங்கும். இந்நிலை கேவலநிலை என வழங்கப்பெறும்.

அநாதி கேவல நிலையில் உயிர்களில் மீண்டும் பிறப்பதற்குப் பக்குவமானவையும் இருக்கும். கேவல நிலையில் உள்ள உயிர்கள் போதிய ஓய்வு எடுத்துக் கொண்டபின், மீண்டும் பிறந்து ஆன்ம யாத்திரையைத் தொடரும் நிலையில் உள்ளன. இவ்விரு வகை உயிர்களும் மீண்டும் பிறப்பதற்கு வர இறைவன் அருள்செய்ய வேண்டியுள்ளது.

பேரூழிக்கால இருளின் முடிவு நீங்கி மீண்டும் பிறக்கும்போது, பிறவியாகிய இருளின் தொடக்கம் உண்டாகின்றது. இப்பிறவி எடுத்து அறியாமையாகிய இருளில் துன்பப்படும் உயிர்களை இறைவன் திருவருள் சக்தியின் துணைகொண்டு ஈடேற்ற விரும்புகிறான்.

      “இருட்டறை மூலை யிருந்த குமரி
      குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
      குருட்டினை நீக்கி குணம்பல காட்டி
      மருட்டி அவனை மணம் புரிந்தாளே”

என்று திருமூலர் பாடியுள்ளார். இருட்டறை - கருவறை, மூலையிருந்த குமரி - மறைந்திருந்த திருவருட்சக்க்தி, குருட்டுக் கிழவன் - அறியாமையில் மூழ்கியிருக்கும் ஆன்மா, கூடல் குறித்து - ஆன்மாவோடு சேர்ந்து அருள் புரிய எண்ணி, குருட்டினை நீக்கி - ஆன்மாவின் அறியாமையைப் போக்கி, குணம் பலகாட்டி - இறைவன் ஆன்மாக்கள் பொருட்டு இரங்கி வந்து அருள்புரியும் பெருமையை உணர்த்தி, மருட்டி அவனை மணம் புரிந்தாளே - திருவருளிடத்தில் அன்பு கொள்ளுமாறு மயக்கிச் சிவ மணம் கமழுமாறு செய்தாள் என்பது பொருள்.

அநாதி காலந்த்தொட்டு அறியாமையில் மூழ்கியிருக்கும் உயிர்களைத் திருவருட்சக்தியால் அறியாமையில் நீக்கிச் சிவப்பேற்றைத் தருவதற்காகவே கருவறையை நம் முன்னோர் இருட்டறை ஆக்கித் திருவருள்புரியும் திருவுருவங்களைக் கருவறையினுள் வைத்தனர்.

கருவறை இருட்டறையாக இருப்பதற்குக் காரணம் புரிகிறதா? புரியாமை என்ற அறியாமையின் அடையாளமே அந்த இருட்டு!

--திருச்சிற்றம்பலம்--

Back to Top