சித்திரைச் சிறப்பு

- முனைவர் ந.இரா.சென்னியப்பனார்


தமிழ் மாதங்களில் சித்திரை தனிச்சிறப்பு உடையது. தொல்காப்பியத்தில் சித்திரைக்குக் கொண்டான் என்று உரையாசிரியர்கள் உதாரணம் காட்டுகின்றனர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களில் சித்திரையில் நடந்த இந்திரவிழாப் பற்றிய செய்திகள் உள்ளன. அகத்திய முனிவர் ஆணையின்படி ‘தூங்கெயில் எறிந்த தொடித்தோள் செம்பியன்’ என்ற சோழ மன்னனால் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இந்திராவிழாச் சிறப்பாகக் கொண்டாடப்பெற்றது. அம்மன்னன் மரபினர் காவிரிப்பூம்பட்டினத்தில் சித்திரையில் தொடர்ந்து இந்திரவிழாவை நடத்தி வந்தனர். 
காவிரியிலிருந்து 1008 குடங்களில் கொணர்ந்த நீரை இந்திரன் படிமத்திற்கு ஆட்டினர். 1. சிவபெருமான் கோயில் 2. முருகப்பெருமான் கோயில் 3. பலதேவன் கோயில் 4. திருமால் கோயில் 5. மன்னவன் கோயில் ஆகியவற்றில் வேள்விகளும் பூசனைகளும் முறையாக நடைபெற்றன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. 

“நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலா
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக 
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை 
ஆறறி மரபின் அறிந்தோர் செய்யுமின்”

என்று பறைசாற்றி இந்திரவிழாச் சித்திரையில் நடந்ததை மணிமேகலை குறிப்பிடுகின்றது.
இத்தகைய சிறப்புப் பொருந்திய சித்திரையில் குழந்தை பிறக்கக்கூடாது. சித்திரைத் திங்களில் பிறந்தால் சீரழியும் என்ற தவறான கருத்துடைய மூடநம்பிக்கை தமிழ் மக்களிடையே வேரூன்றிவிட்டது. இது மிகத்தவறாகும். சித்திரைத்திங்கள் புனர்பூச நட்சத்திரம் நவமி திதியில் இராமபிரான் அவதரித்தார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திருஞானசம்பந்தர் அவதாரம் செய்தார். ஆழ்வார்களில் மதுரகவியாழ்வார் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் தோன்றினார். புத்தர் சித்திரையில் பிறந்தார். மதுரை மீட்ட சுந்தர பாண்டியன் சித்திரையில் பிறந்தார். எனவே சித்திரையில் குழந்தை பிறக்கக்கூடாது என்ற தவறான கருத்து மக்களிடையே மாற்றப்பெற வேண்டும்.
சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தைப்பாடி நிறைவு செய்தபின், அனைவரும் வேண்டத் திருஞானசம்பந்தர் அவதரித்த நாளும், ஞானப்பால் உண்டநாளும் ஆன சித்திரைத் திருவாதிரையில், தொடங்கி விரிவுரை செய்து அடுத்த ஆண்டு சித்திரைத் திருவாதிரையில் நிறைவு செய்தார் என்று வரலாறு கூறுகின்றது. சித்திரை நிறைநிலாவையொட்டித் (பௌர்ணமி)  தமிழகத்தில் அவிநாசி, திருப்பைஞ்ஜீலி முதலிய தலங்களில் உள்ள பெருங்கோயில்களில் பெருந்திருவிழா நடைபெறுகின்றது.
திருநாவுக்கரசரை அப்பூதி நாயனார் குருவாக ஏற்றுக்கொண்டு தம்மக்கள், வீட்டில் உள்ள அளவு கருவிகள், கால்நடைகள், தண்ணீர்ப்பந்தல் முதலியவற்றிற்கெல்லாம் திருநாவுக்கரசு என்றே பெயரிட்டிருந்தார். திருநாவுக்கரசர், மங்கையர்க்கரசியார், விறல் மிண்டர், சிறுத்தொண்டர், திருக்குறிப்புத்தொண்டர், இசைஞானியார் ஆகியோர் குருபூசை சித்திரைத் திங்களில்தான் வருகின்றது. 
மதுரையில் தை மாதத்திலிருந்த பெருவிழாவைத் திருமலை நாயக்கர் சித்திரை மாதத்திற்கு மாற்றினார். மதுரைச் சித்திரை விழாவும் கள்ளழகர் வைகையில் இறங்குவதும் இன்றும் சிறப்புடன் நடைபெறுகின்றன.
Back to Top