தனிவீடு

- முனைவர். ர. வையாபுரியார்


முன்னுரை : 

மக்களுக்கு இன்றியமையாத தேவைகள் நான்கு. அவை : உணவு, உடை, கல்வி, வீடு என்பன. பிறதேவைகளும் உள. பெருஞ்செல்வர்களுக்கு இவை தேவைக்கு அதிகமாகவே அமைந்து விடுகின்றன. நடுத்தரமக்களும், கீழ்த்தட்டு மக்களும் இவற்றுக்காகப் படும்பாடுகள் சொல்லி மாளாது. இவற்றுள் வீடு என்பது தனிவீடாக அமைந்தால் நல்லது என்பதனை அனைவரும் உடம்படுவர். அதுபற்றி இந்தக் கட்டுரை சிந்திக்கின்றது. 

இருவகைவீடு :

ஆன்மாவுடன் கூடிய உடம்பு தங்கியிருப்பதற்குரிய கட்டிடம் வீடு. ஆன்மா தங்கியிருக்கின்ற உடம்பும் அவ்வான்மாவுக்கு ஒரு வீடு போன்றதே. பக்தி இலக்கியங்களும் தத்துவஞான நூல்களும் உடம்பை வீடு என்றே கூறுகின்றன.

“கால் கொடுத்து, இருகை ஏற்றிக், கழிநிரைத்து, இறைச்சி மேய்ந்து,
தோல்படுத்து, உதிரநீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்
ஏல்வுடைத்தாக அமைத்து, அங்கு எழுசாலேகம் பண்ணி
மால்கொடுத்து, ஆவிவைத்தார் மாமறைக் காடனாரே” 
(திருமுறை  - 4, திருமறைக்காடு)

என்றார் அப்பர் சுவாமிகள். சாலேகம் - ஜன்னல். பழைய இலக்கியங்கள் காலதர் எனக்கூறும். காற்று இயங்கும் வழி என்பது பொருள். கால் - காற்று; அதர் - வழி.

ஆன்மாவுக்கு உடம்பு தனி வீடா?:

ஆன்மா உடம்பாகிய வீட்டில் ஒண்டுக் குடித்தனமாகத்தான் வாழ்கிறது. இவ்வீட்டில் ஆன்மாவுடன் இன்னும் மூன்று பேர் வாழ்கிறார்கள். இம்மூவரை முன்னிட்டு இவர்களின் உறவினராகப் பலரும் அவ்வப்பொழுது வருவார்கள். இவர்களால் இவ்வீட்டில் வாழும் ஆன்மா படும்துன்பம் சொல்லிமாளாது.
இந்த ஆன்மாவைப் பார்த்துத் திருவள்ளுவர் மிகவும் இரக்கப்பட்டுப்,

“புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு" (நிலையாமை 10)

என்று கூறினார். இந்தத் துச்சிலுக்கு உரியவர் யார்? வாத, பித்த, சிலேத்துமம் என்பவர்கள். இந்தத் துச்சில் இவர்களுக்குத்தான் உரியது. ஆன்மாவுக்கு உரியதன்று. இம்மூவரும் தங்களுக்குள் யார் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்வது என்று போட்டியிட்டாலோ அல்லது இம்மூவரும் மாறி மாறி ஆன்மாவுடன் முரண்பட்டு மோதினாலோ ஆன்மா, இந்த வீட்டைவிட்டு வெளியேற வேண்டியதுதான்.

வெளியேறிய ஆன்மா புகும் வீடு எது?:

உடம்பாகிய வீட்டை விட்டு வெளியேறிய ஆன்மா இதேபோன்ற இன்னொரு வீட்டில் புகலாமா? புகுந்தால் இதே துன்பம் மீண்டும் நிகழுமே. ஆதலின் தனக்குமட்டும் உரியதாய் - வாத பித்த சிலேத்துமமாகிய பகைகள் இல்லாததாய் உள்ள ஒரு வீட்டினைத்தேடி அடைதலே தக்கது. அந்தவீடே தனிவீடு எனப்படும்.

தனிவீடு எது? அது எப்படிக் கிடைக்கும்?:

இறைவனுடைய திருவடியே தனிவீடு. அது ஆன்மா ஆசைப்பட்டால் மட்டுமே கிடைத்துவிடாது. இறைவனுடைய திருவருள் குறிப்பும் வேண்டும். அது ஆன்மாவுக்குத் தெரியாது. அதற்காக ஆன்மா சும்மா இருந்து விடக்கூடாது. வாடகை வீட்டில் இருக்கும் போதே சொந்தவீடு கட்டிக் கொள்ள முயல்கின்ற மக்களைப்போல் துச்சிலாகிய உடம்பினுள் இருக்கும் போதே இறைவனுடைய திருவடியாகிய தனி வீட்டினை அடைவதற்குரிய முயற்சியினை ஆன்மா மேற்கொண்டால் இறைவனுடைய திருவருட்குறிப்பு அவ்வான்மாவின் மேல் நிகழும், அவ்வான்மாவுக்குத் தனிவீடு கிடைக்கும்.

"நீங்கருந்துயர் செய்வளிமுதல் மூன்றின் நிலை உளேன். அவை துறந்திடும் முன் வாங்கி நின் தனிவீட்டு உறைகு வான் வந்தனன் நின்குறிப்பு அறியேன்" (சோணசைல மாலை 2)

என்பது கற்பனைக் களஞ்சியம் நல்லாற்றூர், சிவப்பிரகாச சுவாமிகளின் பாடல்.

புக்கில் - உள்ளே சென்றால் மீண்டும் புறப்பட்டு வெளியே வரவேண்டிய தேவையில்லாத வீடு. துச்சில் - பிற குடும்பங்களுடன் ஒண்டுக் குடும்பமாக இருக்குமாறு அமைந்த வீடு. வளிமுதல் மூன்று - வாதம், பித்தம், சிலேத்துமம். 

"மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று" (மருந்து 1)

என்பது திருக்குறள். 

முடிவுரை : 

வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டுக்கு முயல்வதை போல் பிறந்தும் இறந்தும் உழலும் ஆன்மா திருவடிப்பேறு எய்திப் பிறவாநிலை பெறுவதற்கு முயலுதல் வேண்டும்.
Back to Top