மகப்பேறு

- முனைவர் ந.இரா.சென்னியப்பனார்


மகப்பேறும் மழைப்பேறும் மகாதேவனுக்கும் தெரியாது என்பது நம் நாட்டுப்பழமொழி. கருவுற்றதாய் மகவு பெறுகின்ற காலமும் மழைபெய்கின்ற காலமும் கடவுளுக்கும் தெரியாது என்பது பழமொழியின் கருத்து. இரண்டும் அருமையான நிகழ்வுகள் ஆகும். தாய் கருவுறுவது மிகச்சிறந்த செயலாகும். கருவுறுவது, கருவளர்ச்சி, குழந்தைப் பேற்றின் போது உண்டாகும் வருத்தம் முதலியவற்றைச் சமய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன.
தலைவன் தலைவி வாழ்வில் மக்கட்பேறு சிறந்த செல்வமாகக் கருதப் பெறுகின்றது. தலைவி பூப்பெய்தி நீராடிய பின் பன்னிரண்டு நாட்கள் கருவு உண்டாகும் காலம். அக்காலத்தில் தலைவியைப் பிரிந்து தலைவன் செல்லக்கூடாது என்று அகப்பொருள் இலக்கணங்கள் கூறுகின்றன.
"பூப்புப் புறப்பட்ட ஞான்று நின்ற கருவயிற்றிலே அழியும். இரண்டாம் நாளின் நின்ற கரு வயிற்றிலே சாம். மூன்றாம் நாள் நிற்கும் கருக் குறுவாழ்க்கைத்தாம் வாழினும் திருவின்றாம், அதனாற் கூடப்படாது” என்று இறையனார் களவியல் உரை, பூப்பு அடைந்த மூன்று நாள் தலைவியுடன் உடலுறவு கூடாது என்று விலக்குகின்றது. தலைவன், தலைவி உடலுறவால் கரு உண்டாகி நிலைபெறுவதைத் திருமந்திரம், ஞானாமிர்தம் ஆகிய நூல்கள் விரிவாகக் கூறுகின்றன. கரு ஆண், பெண் ஆக அமைவதற்குரிய காரணங்களைத் திருமந்திரமும் தணிகைப்புராணமும் குறிப்பிடுகின்றன. கருவுற்ற காலத்தில் தாய்மை எய்திய பெண் மகிழ்ச்சியாக இருத்தல் வேண்டும். நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
பெருங்கதையில் உதயணன் மனைவி வாசவதத்தை கருவுற்றாள். அவளுடைய தந்தை பிரச்சோதனன் பலமுறை அனுப்பிய பொருள்களைத் திருப்பி அனுப்பிய உதயணன், மனைவி கருவுற்றிருந்த போது அனுப்பிய பொருள்களை ஏற்றுக்கொண்டான். கருவுற்ற காலத்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றது. தாய் வயிற்றில் தங்கிய கரு பலவிதத் துன்பப்படும். தாய் வயிற்றில் உண்டாகும் கருப்பவேதனை, பிரசவவேதனை என்று ஞானாமிர்தம் குறிப்பிடுகின்றது. பத்து மாதங்களில் உண்டாகும் வேதனைகளை மாணிக்கவாசகர் போற்றித் திருவகவலில் குறிப்பிட்டு,

"தக்க தசமதி தாயொடு தான்படும்
துக்க சாகரத்துயர்" 

என்று பத்தாம் திங்களில் கடல் போன்ற பிரசவ வேதனை உண்டாவதையும் சுட்டியுள்ளார்.
சோழ மன்னன் சுபதேவன் மனைவி கமலவதி கருவுற்றிருந்தாள். பிரசவ வேதனை உண்டாயிற்று. இன்னும் ஒருநாழிகை கழித்துப் பிறந்தால் மூவுலகையும் ஆளும் மன்னன் ஆவான் என்று காலக் கணிதர் கூறினர். உடனே கமலவதி தன் கால்களைக் கட்டித் தலைகீழாகத் தொங்கவிட வேண்டினார். அவ்வாறே செய்து, ஒருநாழிகை கழித்துக் கட்டவிழ்த்து விட்டனர்.  காலந்தாழ்த்துப் பிறந்ததால் குழந்தைக்குக் கண்கள் சிவந்திருந்தன. “என் செங்கண்ணனோ” எனக்கூறித் தாய் உயிர் நீத்தாள். அக்குழந்தையே கோச்செங்கட்சோழ நாயனார் ஆவார். தாயின் தியாகம் தலைமையானது. 
திரிசிராப்பள்ளி (திருச்சி)யில் தனகுத்தன் என்ற வணிகன் மனைவி கருவுற்றிருந்தாள். பிரசவக் காலத்தில் காவிரியாறு பெருக்கெடுத்து ஓடியதால் அப்பெண்ணின்தாய் வடகரையிலிருந்து வர முடியவில்லை. பிரசவ வேதனையில் வருந்திய போது இறைவனே தாய் போல் வடிவங்கொண்டு மருந்து, எண்ணெய் முதலியன கொண்டு பிரசவம் பார்த்தார், குழந்தை பிறந்தது, காவிரியில் நீர்வற்றிய போது உண்மைத்தாய் வந்து சேர்ந்தாள், தாயாக வந்து பிரசவம் பார்த்த இறைவனைத் தாயுமானார் என்றழைத்தனர். அதனால் இறைவனுக்குத் தாயுமானார் என்ற பெயர் ஏற்பட்டது. பிரசவவேதனை கொடியது, உடனே பார்க்க வேண்டும் என்று எண்ணி இறைவனே தாயாக வந்து பிரசவம் பார்த்த நாட்டில் சேலம் நிகழ்ச்சி தலைகுனியத்தக்கதாயுள்ளது.
ஆந்திராவிலிருந்து கூலி வேலை செய்யும் கணவனும் மனைவியும் சேலத்தில் வந்து தங்கிக்கூலி வேலை செய்து வந்தனர். வாடகை கொடுத்து வீடு பிடித்துக் குடியிருக்க முடியாத அளவு வறுமை. பேருந்து நிலையம் பகுதியே அவர்களுடைய குடியிருப்பு, பெண்ணின் பெயர் இலட்சுமி, முன்பே இரண்டு ஆண்குழந்தைகள். தற்போது கருவுற்றிருந்த இலட்சுமிக்குப் பிரசவவேதனை உண்டாயிற்று. வயதான பாட்டி ஒருத்தி துணையுடன் நடந்தே சேலம் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ரூபாய் ஆயிரம் இலஞ்சம் கொடுத்தால் தான் பிரசவம் பார்க்க முடியும் என்று கூறியதால், மீண்டும் நடந்தே பேருந்து நிலையம் வந்துள்ளனர். கழிவறைக்குப் பக்கத்தில் குழந்தை பிறந்தது. பின் பலருக்கும் உண்மை தெரிந்து 108 அவசர உதவி வண்டிக்குக் கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பணிபுரிவோர் பலரும் பலவாறு ஏசுவதாக இலட்சுமியே கூறியுள்ளார்.
அரசு ஏழைகளின் மருத்துவத்துக்காகக் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. ஆனாலும் ஏழைகளின் நிலையைக் கண்டு கொள்ளாத மாபாவிகளும் உள்ளனர்.
Back to Top