ஆருயிர்க்கெல்லாம் அன்பு

- முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு

உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் பொதுவானது அன்புணர்ச்சி. அன்பை வெளிப்படுத்த முடியாத உயிரினம் என்று எதுவும் இல்லை. திருவள்ளுவ நாயனார், அன்புடையவரே உயிர் நிலைத்துள்ள உடம்புடையவர்; அது இல்லாதவர் எலும்பும், தோலும் போர்த்துள்ள வெற்றுடம்பு உடையவர் எனக்கூறுகிறார். 
உயிர் இரக்கம் என்பது நமது பண்பாட்டில் தொன்றுதொட்டு இருந்து வந்த பழக்கமாகும். சமுதாயத்தின் உயர்ந்த நிலையில் இருந்தோரும் கீழ்நிலையில் அதுவும் கொலைத் தொழிலையே கைக்கொண்டு இருந்தோரும் உயிர்களிடத்து அன்புடையவர்களாகவே இருந்துள்ளனர். நிலத்திற்கேற்ப உணவுப்பழக்கம் அமைந்திருந்ததால் ஊன் உண்பது மக்களுக்கு இயல்பாயிற்று. கொலை செய்தல், இறைச்சி உண்டல் முதலியவற்றைக் கடிந்தவர் திருவள்ளுவநாயனார் ஆவார். அதனாலேயே கொல்லாமை, புலால் மறுத்தல் என இரு அதிகாரங்களை அருளினார்.
பசுக்களைப் பாதுகாத்தல் என்பது தமிழர் மரபில் வரலாற்றுக் காலந்தொட்டு இருந்து வந்துள்ளது. தொல்காப்பியர் கூறும் "ஆதந்து ஓம்பல்” ஆகிய வெட்சித்திணை போர்க்காலங்களில் பசுப்பாதுகாப்பை வலியுறுத்துவதாகும்.

"ஆவும் ஆன்இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்'       (புறநானூறு 9)

போர்க்காலத்தில் பசு, பசுவின் இயல்பினை உடைய சான்றோர், பெண்கள், பிணி உடையோர், மகப்பேறு இல்லாதோர் முதலியோர் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும் எனப் பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி அறிவித்ததும் உயிர்களின் மேல் கொண்ட அன்புணர்ச்சியே ஆகும். 
ஒரு வேடன் குடிலில் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் வீட்டின் முன் பழக்கப்படுத்தப்பட்டிருந்த பெண்மான் கட்டப் பெற்றிருந்தது. அது பிறமான்களை வேட்டையாடப் பயன்படுத்தப்பெறும் பார்வை மானாகும். அங்கு ஒரு கலைமான் வந்தது. பிணை மானோடு கலைமான்கூடி இன்புற்றிருந்தது. அதே நேரம் வாயிலில் உலர வைக்கப்பெற்றிருந்த தினையினைக் காட்டுக்கோழிகள், இதழ் என்னும் ஒரு வகைப் பறவைகள் வந்து மேய்ந்தன. வேடனின் மனைவி சத்தமிட்டு அப்பறவைகளை விரட்டவில்லை. மேயட்டும் என விட்டுவிட்டாள். காரணம் தன் கணவன் உறக்கம் நீங்கி எழுந்துவிடுவான் என்பதும், கலைமான்களின் இன்பத்திற்கு இடையூறு நேரும் என்பதும் ஆகும். வேடன் உறக்கம் கலைந்து எழுந்தால் வந்த மானின் உயிருக்குத் துன்பம் நேரும் என்று அவள் கருதி இருக்கக்கூடும். இது ஒரு வேட்டுவச்சியின் உயிர் இரக்கத்தை வெளிப்படுத்துகிறது அல்லவா? இந்தச்செய்தியை நாம் புறநானூற்றின் (320) வாயிலாக அறிய முடிகிறது. 
முல்லை மொட்டுகள் அரும்புகின்றன. தேற்றா மரத்தின் மொட்டுகளும், கொன்றை மரத்தின் மொட்டுகளும் நெகிழ்ந்து விரிந்து கிடக்கின்றன. இரும்புக்கம்பியை முறுக்கிவிட்டது போன்ற கரிய பெரிய கொம்புகளை உடைய ஆண்மான்கள் பள்ளங்களில் துள்ளிக்குதித்து விளையாடுகின்றன. காட்டில் நீர் இல்லாத கொடிய துன்பம் நீங்கும் பொருட்டுக் கார்மேகம் மழை பொழிந்தது. 
இக்காட்டினை அடுத்து விளங்கும் ஊர் உறையூர். எப்போதும் ஆரவாரம் உடையதாய், விழாக்கள் நடந்து கொண்டே இருப்பதாய்க் காணப்பெறுவது அவ்வூர். அவ்வூரின் கிழக்குப் பகுதியில் ஒரு நீண்ட பெரிய மலை உள்ளது. (தாயுமானவர் வீற்றிருக்கும் மலை இதுவே ஆகும்). 
நீண்ட நாட்கள் தலைவியைப் பிரிந்திருந்த தலைவன் அவளது அழகு நலத்தை நினைத்துக் கொண்டு அம்மலைப் பகுதியைத் தாண்டி வருகிறான். தலையாட்டத்தால் அழகுபெறும் பிடரிமயிரினை உடைய குதிரைகள் பூட்டப்பெற்ற மணிநெடுந்தேரில் விரைந்து வருகிறான். வரும் வழியில் சோலையில் பெடையோடு யாழின் நரம்புபோல் ஒலிக்கின்ற தேன் உண்ணும் வண்டுகள் பூக்கள்தோறும் அமர்ந்திருக்கின்றன. அவை தேரின் மணியோசை கேட்டு அஞ்சும் என்று எண்ணித் தேரில் இருந்த மணிகளின் நாவை ஒலிக்காமல் கட்டினான்.
 
"பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுண் பறவைப் பேதுறல் அஞ்சி 
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்"

என்பது அகநானூறு. அஞ்சி என்பதற்கு அருள்காரணமாகத் தோன்றும் அச்சம் என்று ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை எழுதியுள்ளமை குறிக்கத்தக்கதாகும். வண்டுக்கு இரங்குகின்ற அருள் உள்ளம் படைத்தவன் தலைவன் என்பதை அறியும் போது நமக்கு வியப்பே மேலிடுகிறது. 
சோழ மன்னர்களின் பழைய தலைநகரம் பூம்புகார். அந்நகரத்தில் அரசு வீற்றிருந்த திருமாவளவனின் பெருமையையும், காவிரிப்பூம்பட்டினத்தின் கவின்மிகு காட்சிகளையும் சங்கநூலான பட்டினப்பாலை எடுத்துக்காட்டுகிறது. புகார் நகரில் வாழ்ந்த வேளாளர் சிறந்த குடிச்சிறப்பு உடையவர். விருந்தோம்பி வேளாண்மை செய்து ஏனைய அனைத்துக் குடிமக்களையும் அரவணைத்துக்  கொண்டார்கள். 
வேளாளராகிய அவ்வுழவர் பெருமக்கள் நெல் முதலிய தானியங்களை மிகுதியும் விளைவித்துக் கொடுத்தமையால் ஊன் உண்போர் குறைந்தனர். ஆதலால் நீரில் வாழும் மீன்களும், நிலத்தில் வாழும் மான், முயல் முதலிய சிறு விலங்குகளும் சுற்றத்தோடு பெருகின. தம்மைக்கொல்லும் பகைவர் இவர் என எண்ணாது மீனவரின் வீட்டு முற்றத்தில் மீன்கள் துள்ளி விளையாடின. இறைச்சி விற்போரின் இல்லத்தின் முன் சிறுவிலங்குகள் கூடி நின்றன.

"கிளைகலித்துப் பகை பேணாது
வலைஞர் முன்றில் மீன் பிறழவும்
விலைஞர் குரம்பை மாஈண்டவும்
கொலை தாக்கம்" 

என்பது பட்டினப்பாலை. 
இவ்வரிய சூழலுக்குக் காரணம் பூம்புகார் உழவரின் புண்ணியம் முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை அல்லவா? 
வேளாளர்க்கு உரிய இச்செய்கைகளில் தம் மனதைப் பறிகொடுத்த சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர்,

"வலையவர் முன்றில் பொங்கி வாளென வாளைபாய
சிலையவர் குரம்பை அங்கண் மானினம் சென்றுசேப்ப
நிலைதிரிந்து ஊழிநீங்கி உத்தரகுருவு மாகிக்
கொலை கடிந்து இவறல் இன்றிக் கோத்தொழில் நடாத்துமன்றே"

என்று அரசனாகிய சீவகன் ஆட்சி புரிந்ததை எடுத்துக்காட்டுகிறார்.
'மக்கள் தாமே ஆறறி வுயிரே' என்றார் ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியனார். ஆறாம் அறிவு மனம் எனக்கருதிய அவர்  'ஆறறிவதுவே அவற்றொடு மனனே” என்றார்.
மனம் படைத்தவன் மனிதன் ஆனான். சிற்றுயிர்க்கு உற்ற துணையாக மனிதன் விளங்கினால் அப்பர் பெருமான் கூறியதுபோல் மனிதரில் தலையான மனிதர் ஆகலாம். 

“அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்க் கெல்லாம் அன்பு செயல் வேண்டும்” (திருவருட்பா)
Back to Top