என்கவியும் நின்றனக்கு ஆம்

- முனைவர். ர. வையாபுரியார்

முன்னுரை :

     என் கவியும் நின்றனக்கு ஆம் எனத் தலைப்பில் உள்ள தொடர், வீரசைவத்தைத் தமிழில் விளக்கி நூல் செய்த சிவப்பிரகாச சுவாமிகள் முதன்முதலில் பாடிய நூலின் முதற்பாடலில் உள்ள தொடர். இத்தொடர்பற்றிய சிந்தனைகள் இங்கு எழுதப்படுகின்றன.
     நூலாசிரியராகிய இச்சிவப்பிரகாச சுவாமிகள் கற்பனைக்களஞ்சியம் எனவும், கவிசார்வபௌமர் (கவிச்சக்கரவர்த்தி) எனவும் புலவர்களால் போற்றப்படுபவர். துறைமங்கலம் சிவப்பிரகாசர் அல்லது நல்லாற்றூர் சிவப்பிரகாசர் எனப்பெயர் கூறப்படுபவர். துறைமங்கலம் இவர் பலகாலம் தங்கியிருந்த ஊர். நல்லாற்றூர் இவர் இட்டலிங்க பரசிவத்தில் கலந்த ஊர். இவருடைய சமாதித் திருக்கோவில் இவ்வூரில் உள்ளது.

பரம்பரை :

     இவர் திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுர எனப்படும் வீரசைவ ஆதீனத்தில் இரண்டாம் பட்டத்துச் சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர். திருவண்ணாமலை திருத்துறையூர் ஆதீனம் எனப்படும் வீரசைவ ஆதீனத்துச் சிவப்பிரகாச சுவாமிகள் மாணாக்கராகிய திருப்பேரூர் சாந்தலிங்க சுவாமிகளுக்கு உறவுடையவர். காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு.

புலமை :

     திருவாவடுதுறை ஆதீனத்துக்கு வாய்த்த மாதவச் சிவஞான முனிவர் கவிராட்சத கச்சியப்ப முனிவர் என்பவர்களைப் போல, தருமபுர ஆதீனத்துக்கு வாய்த்த குமரகுருபரர் போல, மயிலம் பொம்மபுரம் ஆதீனத்துக்கு வாய்த்த துறவுநலம் சான்ற பெரும்புலவர். இவர் தமது பன்னிரண்டாம் வயதிலேயே கவிபாடும் ஆற்றல் உடையவராய்த் திருவண்ணாமலையை வலம் வரும்போதே அம்மலைக்குத் தோத்திரவடிவில் 100 செய்யுள்களைப் பாடினார். அவை ‘சோணசைலமாலை’ என்னும் பெயரில் ஒரு நூலாக உருப்பெற்றன. கிரிவலம் வருவோர் பாடிக்கொண்டே வலம் வருவதற்கு ஏற்ற நூல்.

நூல்கள் : 

     இவர் சித்தாந்த சைவத்துக்கும் வீரசைவத்துக்கும் வேதாந்தத்துக்கும் தருக்கத்திற்கும் நூல்கள் இயற்றியுள்ளார். அவை தோத்திரம், சிற்றிலக்கியம், புராணம், தத்துவம், மொழி பெயர்ப்பு எனப் பலவகைகளில் அமைந்துள்ளன. தருக்கம் - உரைநடையில் அமைந்துள்ளது. இவர் இயற்றிய திருவெங்கைக் கோவை என்பது மாணிக்கவாசகர் அருளிய திருக்கோவையாருக்கு அடுத்தபடியாக வைத்து மதிக்கத்தக்க சிறப்புடையது. இவர் கன்னட மொழியிலிருந்து மொழிபெயர்த்த பிரபுலிங்க லீலை என்னும் நூல் புலவர்களால் பெரிதும் போற்றப்படுவது.

இனி எடுத்துக் கொண்டதலைப்புக்கு வரலாம் .....

ஐயமும் தீர்வும் :


     சிவப்பிரகாச சுவாமிகள் இறைவனைப் பாடத்தொடங்குகின்றார். என்பாடல் பெருமானுடைய செவியில் ஏறுமா? என ஓர் ஐயம் தோன்றுகின்றது. அதற்கு ஒரு தீர்வும் காண்கிறார். பெருமானுடைய செவியில் அசுவதரன், கம்பளன் என்னும் இருவர் காதணிகளாக இருந்து கொண்டு இனிய இசை பாடிக்கொண்டே இருக்கின்றனர். அப்பெருமானுடைய இடக்கையில் மான் ஒன்று அவர் செவியின்பக்கமாகத் தலைவைத்து எப்பொழுதும் குரைப்பு ஒலி எழுப்பிக்கொண்டே இருக்கின்றது. இந்தக் குரைப்பொலி ஏறுகின்ற செவியில் என் பாடலும் ஏறும் என்பது அத்தீர்வு. இதனைக் கூறும் பாடல்,

“அண்ணன்மாபுகழ் மூவரும்புனை அரும்பா
அன்றிஎன் கவியும் நின்றனக்காம்
பண்ணுலாம் இருவர் இசை கொள் நின்செவியில்
பாணிமான் ஒலியும் ஏற்றிலையோ”

என்பதாகும். இங்கு, மூவர் - தேவாரம் பாடிய மூவர். இருவர் - அசுவதரன் கம்பளன். பாணி - கை. இது இடக்கையைக் குறித்தது. என்கவியும் மான்ஒலியும் என்னும் உம்மைகள் இழிவு சிறப்பும்மைகள்.

     அண்ணல்மாபுகழ் என்பது எனக்கு அத்தகைய புகழ் இல்லை என்பதனையும், அரும்பா என்பது என்பாடல் அத்தகைய அருமையுடையதன்று என்பதனையும், பண் உலாம் இருவர் இசை என்றது என் பாடலில் பண்ணும் இசையும் இல்லை என்பதனையும், மான் ஒலி என்பது என்பாடல் மானின் குரைப்பு ஒலிபோல் கடுமையான ஓசை உடையது என்பதனையும், குறிப்பால் உணர்த்தி நின்றன..

     சிவம் எல்லாவற்றையும் ஒருங்கே அறிவது. அறிந்தவாறே இருப்பது என்பது சைவசித்தாந்தம். எனவே இரண்டு வகையான ஒலியும் பெருமான் செவியில் ஏறும்.

அவையடக்கம் :

     இப்பாடல் இச்சுவாமிகள் பாடிய முதல் நூலாகிய சோணசைலமாலையில் முதற்பாடலாக அமைந்துள்ளதனால் இஃது இச்சுவாமிகள் தாம் பாட இருக்கும் நூல்களுக்கெல்லாம் அவையடக்கமாகப் பாடப்பட்டதோ எனக்கருத இடம் உள்ளது. கச்சியப்ப முனிவர் தாம் பாடிய பேரூர்ப்புராணத்தில் அவையடக்கமாகப் பாடிய ஒரு செய்யுள் இக்கருத்துக்குத் துணை செய்கிறது. முனிவர் பாடிய அவையடக்கச் செய்யுள் வருமாறு,

“கடல்கடைந்து எடுத்த அமிழ்தமும் சமழ்ப்பக் கதித்த தீஞ்சுவை எழால் பாடல்
நடவினர் இருவர் சேக்கை பெற்றிருந்த நாயகன் செவியிடைத் துடிமான்
விடம்நிகர் குரைப்பும் ஏறலின் தெளிந்தோர் விதியுளி உஞற்று செந்தமிழ்கள்
படரும் அச்செவியில் சிறியனேன் தொடையும் படருமால் உலகெலாம் பரவ”

     அமிழ்தமும் சமழ்ப்ப  - அமிழ்தத்தின் சுவையும் மங்கும்படியாக, சமழ்த்தல் - ஒளிமாழ்குதல், கதித்த - மேலோங்கி விளங்குகின்ற, எழால் - ஓசை. இதுமிடற்றோசை, யாழோசை முதலிய ஓசைகளைக் குறித்தது. நடவினர் - நடத்தியவர்கள், இசைபாடியவர்கள். இருவர் அசுவதரன் கம்பளன். சேக்கை பெற்றிருந்த - தங்குமிடமாகக் கொண்டிருந்த, சேக்கை - தங்கும் இடம். துடிமான்  - துடியும் மானும் என உம்மைத் தொகை. விதியுளி - விதி முறைப்படி, விதிமுறை என்பது செய்யுளுக்கென வகுக்கப்பட்ட இலக்கண அமைப்பினையும் பொருளமைப்பினையும் குறித்தது. உஞற்று - முயன்று செய்த, தொடை - பாடல். நறுமலர்களால் தொகுக்கப்படும் மாலைபோல நல்ல சொற்களால் தொகுக்கப்பட்ட பாடல் என்பது கருத்து.
     சிவப்பிரகாச சுவாமிகள் மானேந்திய இடக்கரத்தை மட்டும் குறித்துப் பாடினார். கச்சியப்ப முனிவர் துடியேந்திய வலக்கையினையும் சேர்த்துக் கொண்டார். துடி - உடுக்கை என்னும் தோற்கருவி. இத்துடியும் மானும் இறைவனை அழிப்பதற்காகத் தாருகாவனத்து முனிவர்கள் செய்த அபிசார வேள்வியில் தோன்றியவை. அம்முனிவர்களால் இறைவன் மேல் ஏவப்பட்டவை. விவரம் கந்தபுராணம், தட்சகாண்டம், ததீசி உத்தரப்படலத்தில் காண்க.

முடிவுரை :

     இங்ஙனம் தன்னடக்கமும் பெரும்புலமையும் உடையவர்கள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் பாடிய சமயநெறி சார்ந்த தமிழ் நூல்களை நாம் தொடர்ந்து பயின்று பயன்பெறலாம்.
Back to Top