- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
துறக்கப்படாத உடலைத் துறந்து
வெந்தூதுவரோடு
இறப்பன் இறந்தால் இருவிசும்பு
ஏறுவன் ஏறிவந்து
பிறப்பன் பிறந்தால் பிறையணி
வார்சடைப் பிஞ்ஞகன் பேர்
மறப்பன் கோலோ என்று என்னுள்ளம்
கிடந்து மறுகிடுமே.
-
திருநாவுக்கரசர்
மக்கள் வாழ்க்கையில் பிறப்பு,
இறப்பு ஆகிய இரண்டும் இயல்பானவை. இறத்தல் என்பது பருவுடம்பிலிருந்து உயிர் பிரிவது.
உடம்பு வேறு உயிர் வேறு என்பது தமிழர் கொள்கை.
“காலம் உலகம் உயிரே உடம்பே”
என்ற தொல்காப்பிய நூற்பாவால் உயிர்வேறு உடம்பு வேறு என்பது தெரிகிறது. “சென்ற உயிரின்
நின்றயாக்கை” என்று தொல்காப்பியர் குறிப்பிடுவதால் உடம்பிலிருந்து உயிர் பிரியும் என்பது
தெரியவருகிறது. உடம்பை விட்டு உயிர் நீங்குவதை.
“குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு”
என்று திருவள்ளுவரும் குறிப்பிட்டுள்ளார்.
இறப்பு என்பது நியதி தத்துவப்படி
அவரவர்க்குரிய வாழ்நாளில் வரையரை அடிப்படையில் அமைந்தது.
“பேரிழவு இன்பமொடு பிணி
மூப்புச் சாக்காடு
என்னும் ஆறும் முங்கருவுள் பட்டது”
(சிவஞான சித்தியார்)
என்பதனால் தாய்வயிற்றின்
கருவில் இருக்கும் போதே இறப்பின் நிலை வரையரை செய்யப்படுகிறது.
இறந்தவர்க்குப் பலவித சடங்குகள்
செய்தல், சாப்பறை கொட்டுதல், மகளிர் மார்பில் அடித்துக் கொள்ளுதல், பிண்டம் வைத்தல்
முதலிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
உயிர் நீத்த உடலை முதுமக்கள்
தாழியில் இட்டுச் சமாதி செய்து வழிபாடு செய்வது வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே
நடைபெற்று வந்துள்ளது. சங்க காலத்திலேயே சுடுதல், புதைத்தல் என்ற இரண்டும் வழக்கில்
இருந்துள்ளன.
“சுடுவோர் இடுவோர் தொடுகுழி
படுப்போர்
தாழ்வயின் அடைப்போர் தாழியில்
கவிப்போர்”
என்று மணிமேகலை இறந்தோருடலை
அடக்கம் செய்யும் முறையைக் கூறுகிறது.
உடம்பை விட்டுப் பிரிந்த
உயிர் நுண்ணுடம்புடன் மேலே செல்லும். செய்த வினைக்கேற்பத் தீமையை நரகத்திலும் நன்மையைச்
சொர்க்கத்திலும் அனுபவிக்கும்.
பின்னர் மேகத்தில் இருந்து
வரும் மழைத்துளி வழியே நிலவுலகு வந்து பயிர் பச்சைகளில், தானியம் காய்கறிகளில் தங்கித்
தந்தை வயிற்றில் இரண்டு மாதம் இருக்கும். கணவன் மனைவி உடலுறவின்போது ஆண் விந்துவாகப்
(சுக்கிலம்) பெண்ணின் கருப்பையில் உள்ள பெண் கருமுட்டை (சுரோணிதம்) யில் கலக்கும்.
கலந்து கருவாகிக் குழந்தையாய்ப் பிறக்கும். சைவத்திருமுறைகளும் சாத்திரங்களும் இவற்றை
விரிவாகக் குறிப்பிடுகின்றன.
இறப்பதைப் பற்றி பலவிதமான
தவறான கருத்துக்கள் பரவியுள்ளன. இறந்தவர்களுக்கு வழிபாடு செய்வதுதான் அவர்கள் மக்கள்
செய்யவேண்டிய சிறந்த கடமையாகும். துறவறத்தாராக இருந்தால் அவர்கள் இறைவன் அடி அடைந்த
நட்சத்திரத்தன்று ஆண்டுதோறும் வழிபாடு செய்ய வேண்டும். சித்திரைச் சதயம் திருநாவுக்கரசர்
வைகாசி மூலம் திருஞானசம்பந்தர், ஆனி மகம் மாணிக்கவாசகர், ஆடி சுவாதி நம்பியாரூரர் முதலியன
அவ்வாறமைந்த குருபூசை வழிபாடாகும். இல்லறத்தாராக இருந்தால் அவர்கள் காலமான திதியில்
செய்ய வேண்டும். ஆண்டுதோறும் இறந்த மாதத்தில் வருகின்ற வளர்பிறை, தேய்பிறை திதியில்
வழிபாடு செய்ய வேண்டும்.
முதல் திதி வழிபாடு காலமான
பதினாறாம் நாள் செய்ய வேண்டும், பதினாறாம் நாள் அதே திதிவரும். தற்காலத்தில் இறந்த
நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு வீடு அடைத்தல் முதலியன செய்யப்படுகின்றது.
இறந்தால் வீடு மூட வேண்டிய
நட்சத்திரங்கள் அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி 6மீ, ரோகிணி 4மீ,
கார்த்திகை, உத்திரம் 3மீ, மிருகசீரிடம், சித்திரை, புணர்பூசம், விசாகம், உத்திராடம்
2மீ என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு அதற்கு பரிகாரங்களும் விரிவாக சொல்லப்பட்டுள்ளன.
சங்க இலக்கியங்கள், காப்பியங்கள்,
திருமுறைகள், புராணங்கள், கல்வெட்டுக்கள் முதலியவற்றில் வீடு அடைக்கும் நிகழ்ச்சி எங்கும்
குறிப்பிடப்படவில்லை.
திருநாளைப் போவார், ஏயர்கோன்
கலிக்காமர் ரேவதி, புகழ்ச்சோழர் கார்த்திகை, சண்டேசுவரர் உத்திரம், மங்கையர்க்கரசியார்
ரோகிணி, திருநாவுக்கரசர் சதயம், இசைஞானியார் திருக்குறிப்புத் தொண்டர் சித்திரை, குமரகுருபரர்
விசாகம், உமாபதி சிவாச்சாரியார் அவிட்டம், கச்சியப்பமுனிவர் புனர்பூசம் முதலியோர் குருபூசை
அடைக்க வேண்டிய நட்சத்திரங்களில் வருகின்றன. அவர்கள் வரலாறு கூறும் நூல்களில் எங்கும்
அடைக்கப்பட்ட செய்தி குறிக்கப்படவில்லை.
இன்று பெரிய மருத்துவமனைகளில்
பலர் இறக்கின்றார்கள். அடைக்கும் நட்சத்திரக் கணக்குப்படி அங்கு அடைக்க இயலுமா?
சென்னை, மும்பை, டில்லி
முதலிய நகரங்களில் அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் வாழ்கின்றனர். அடைக்கும் நட்சத்திரத்தில்
இறந்தால் அங்கு அடைத்துவிட்டு எங்கே செல்வது?
விபத்துக்களில் பலர் அடக்க
வேண்டிய நட்சத்திரத்தில் இறக்கின்றனர், எங்கே அடைப்பது?
இறந்தவர் படத்தை வீட்டில்
வைத்து காலை, மாலை வழிபாடு செய்தால் இறந்த உயிர் வந்து பார்த்து மகிழும். இறையருளும்
கிட்டும். அடைத்து வைத்துவிட்டால் இருட்டு மிகும். எலி, பெருச்சாளி முதலியவை குடியேறும்.
எனவே அடைப்பது எந்தவிதத்திலும், விஞ்ஞான முறைப்படியும், மெய்ஞ்ஞான முறைப்படியும் தவறாகும்.
விளக்கேற்றி வழிபாடு செய்வதே மிகச்சிறந்தது.