தொல் கார்த்திகை வழிபாடு

- முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு

அண்ணாமலை அண்ணலை, “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும் சோதி” என்றார் மாணிக்கவாசகர். இறைவனைச் சோதியாய்ச் சுடராய்ச் சூழ்ஒளி விளக்காய்க் கண்டது நம் சைவ சமயம். இருள் அறியாமையின் குறியீடாகவும், ஒளி அறிவின் குறியீடாகவும் நம் சமயத்தில் வைக்கப் பெற்றுள்ளது.

“எல்லா விளக்கும் விளக்கல்ல சன்றோர்க்குப்
 பொய்யா விளக்கே விளக்கு”
    (திருக்குறள் 299)


என்பார் திருவள்ளுவர். ஞாயிறு, திங்கள், தீ முதலிய விளக்குகள் புறத்திருளை நீக்குவன. பொய்யாமை, “அறியாமை” என்னும் அக இருளை நீக்குவது. எனவே, புறத்திருளை நீக்கும் விளக்குகளை விட அகத்திருளை நீக்கும் பொய்யாமையே சிறந்த விளக்கு என்பது கருத்தாகும்.

விளக்கு வழிபாடு :
      தமிழக மக்கள் பண்டைக்காலம் முதலே விளக்கு வைத்து இறைவனை வழிபட்டு வந்துள்ளனர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே விளக்கு வைத்து வழிபட்டமைக்குச் சான்றாக அகழ்வாய்வுகளில் பல விளக்குகள் கிடைத்துள்ளன. 

சங்ககாலத் தமிழ் மக்கள் சிறப்பாகக் கொண்டாடிய திருவிழாக்களில் சிறந்தது கார்த்திகை விளக்குத் திருநாள். கார்த்திகைத் திங்கள், கார்த்திகை நாளில் மக்கள் தெருத்தொறும் மனைகளில் வரிசை வரிசையாக விளக்குகளை ஏற்றியும், மலை உச்சிகளில் பெருவிளக்கு ஏற்றியும் இவ்விழாவைக் கொண்டாடினர்.

விளக்கு நிலை :
      அரசனுக்கும் விளக்கு உண்டு. இதனை “விளக்குநிலை” எனப் புறப்பொருள் இலக்கணங்கள் கூறுகின்றன. “வேலின் நோக்கிய விளக்குநிலை” (தொல் – புறம் – நச்சர் நூ. எண் 90) என்பது தொல்காப்பியம். இதற்கு உச்சிமேல் புலவர்கொள் நச்சினார்க்கினியர் “இது கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கும், கீழும் மேலும், வலமும், இடமும் திரிபரந்து சுடர் ஓங்கிக் கொழுந்து விட்டு எழுந்தன என்று அறிவோர் ஆக்கம் கூறப்படுவதாம்” என்று உரை எழுதியுள்ளார்.

குடிமக்களுக்கு நன்மை விளங்கும் செங்கோலுடைய அரசனுக்கு அவனுடைய திருவிளக்கு காற்று வேகமாக அடித்த போதும் வலமாகச் சுழன்று எழுந்து ஒளிமிக்கு உயர்ந்து தோன்றி வெற்றியைக் காட்டி நிற்கும் என்று புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூல் கூறுகிறது. இவையன்றியும் இறையனார் அகப்பொருளுரையில் நக்கீரர் “இருட்டகத்து விளக்குக் கொண்டு புக்கால் விளக்கு வாராத முன்னரும் இருள் நீங்கியது; விளக்கு வந்த பின்னரும் இருள் நீங்காது; விளக்கு வருதலும் இருள் நீக்கமும் உடனே நிகழும்” எனக் கூறியுள்ளார். பின்னர் வந்த சித்தாந்த சைவ மெய்யியல் நூல்களும், சிவஞானமாபாடியம் முதலிய உரைநூல்களும் இக்கருத்தை விளக்கியுள்ளன. 

அணிநூலன தண்டியலங்காரத்தில் தீவகஅணி என ஒரணி உண்டு. ஓரிடத்தில் வைக்கப்பெற்ற விளக்கானது பல இடங்களிலும் சென்று பொருள்களை விளக்குவது போல ஓரிடத்து நின்ற சொல் பல இடங்களிலும் சென்று பொருள்களை விளக்குவதால் இவ்வணி தீவகம் எனப்பெற்றது. தீவகம் – விளக்கு.

தொல்கார்த்திகை விளக்கு :
      சங்கநூல்கள் பலவற்றுள்ளும் கார்த்திகை நாள் சிறப்பாகக் கூறப்பெற்றுள்ளது. அழல் குட்டம் எனப் புறநானூறும் (பா. எ. 229), அழல்சேர் குட்டம் எனச் சிலப்பதிகாரமும் கார்த்திகை நாளை அழல் எனக் குறிக்கின்றன. “அக்கினியை அதி தேவதையாக உடைமையின் கார்த்திகைக்கு அழல் என்பது பெயராயிற்று” என்பார் உ. வே. சா (புறம் 229 அடிக்குறிப்பு)

பிரிந்து சென்ற தலைமகன் கார்த்திகைத் திருநாளை நம்மோடு இருந்து கொண்டாட வருவான் எனத் தலைவி தோழியிடம் கூறும் அகநானூற்றுப்பாடல் இவ்விழா அக்காலத்து எவ்வாறு சிறப்பாகக் கொண்டாடப் பெற்றுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அப்பாடல் இது.

“உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி
மழைகால் நீங்கிய மாக விசும்பில்குறுமுயல் மறுநிறங் கிளர மதிநிறைந்துஅறுமீன் சேரும் அகலிருள் நடுநாள்ம்றுகு விளக்கு உறுத்து மாலை தூக்கிப் பழவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றியவிழவுடன் அயர வருக”

உலகில் உழுதொழில் நிறைவடைந்து விட்டது. மழை பெய்தல் நீங்கி வானம் தெளிவாய் விளங்குகிறது. முயற்கறை விளங்க நிலவு முழுமை (பெளர்ணமி) அடைந்துள்ளது. கார்த்திகை சேரும் இருள் அகன்ற இரவில் தெருக்களில் விளக்குகளை வரிசையாக ஏற்றி , மாலைகளைத் தொங்க விட்டுப் பழமையானதும், வெற்றியை உடையதுமான இந்த முதுமையான ஊரில் பலரும் கூடிச் செய்கின்ற இவ்விழாவை நம்முடன் கொண்டாடத் தலைவர் வருவாராக என்ற பொருளுடையது மேற்காண்பாடல்.

"கார்த்திகைத் திங்கள் கார்கால முடிவாக நிற்கிறது. அடைமழையில் கதிரொளி காணாமல் வாடி ஒடுங்கிக் கிடந்த மக்கள், நன்றாக உலவித் தங்கள் வாட்டத்தை நீக்கிக் கொள்ளக் கதிரவன் ஒளியைக் காண விரும்பி விளக்கிட்டு மகிழ்வதைக் கார்த்திகைக் விளக்குக் குறிக்கிறது எனலாம்” என்பர் ஆய்வாளர். (கலைக் களஞ்சியம் தொகுதி 3).

வெப்பம் மிகுந்த கொடிய காட்டகத்தே இலையில்லாத இலவமரத்தில் மலர்ந்துள்ள பூக்கள் ஆரவாரத்தை உடைய மகளிர் கூட்டம் மகிழ்வுடன் கூடி எடுத்த அழகிய கார்த்திகை விளக்கி்ன் நெடிய வரிசை போலத்  தோன்றுவதாக ஒளவையார் (அகம் பா. எ. 11) பாடியுள்ளார்.

“நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலை நாள் விளக்கில்” என்று கார்நாற்பதும், “கார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே” என்று களவழி நாற்பதும், “குன்றில் கார்த்திகை விளக்கிட்டன” என்று சீவகசிந்தாமணியும் விளக்கைக் குறிக்கின்றன.

சங்க காலம் முதல் இக்கார்த்திகை விழா தமிழரால் கொண்டாடப்படுவதை அறிந்திருந்த நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர் “தொல் கார்த்திகை நாள் தளந்தேத்து இளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு” எனக் கார்த்திகை விளக்கீட்டின்  தொன்மையைச் சுட்டியுள்ளார்.

தீபம் விளங்கும் திருவண்ணாமலை :
      அண்ணாமலை அண்ணல் திருவருள் புரியும் திருத்தலம் திருவண்ணாமலை. திருஞானசம்பந்தர் தமது ஒன்வொரு பதிகத்திலும் (9 ஆம் பாடல்) நினைவு கொண்ட திருத்தலம் திருவண்ணாமலையாகும். மிகத் தொன்மைக் காலத்திலிருந்து அண்ணாமலையின் உச்சியில் பெருந்தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. குன்றிலிட்ட விளக்கு, மலைமேல் விளக்கு என்னும் பழமொழிகள் இதனை ஒட்டி எழுந்தனவே. மலைமேல் ஏற்றப்பட்ட இவ்விளக்கு உலகின் புற இருளை மட்டுமின்றி, உலகத்து வாழும் மக்களின் அக இருளையும் போக்கும் என்பார் சிவப்பிரகாசர்.

“கார்த்திகை விளக்கு மணமுடி சுமந்து
கண்டவர் அகத்திருள் அனைத்தும்சாய்த்து நின்று எழுந்து விளங்குறும் சோணசைலனே கயிலை நாதனே”

என்பது சோணசைலமாலை. கார்த்திகை நாளில் மலைமேல் மணிவிளக்கைக் கண்டு அண்ணாமலை அண்ணலின் அருள் பெறுவோம்.
பொன்னுலகைக் கீழாக்கும் சோணகிரித் தீபம்

      வெவ்வினையைப் பாழாக்கும் கார்த்திகை தீபம் - கார்த்திகை தீப வெண்பா


Back to Top