சிவஞானமுனிவர்

- முனைவர் ர. வையாபுரி

முன்னுரை

      சிவஞானமுனிவர் என்பவர் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தைச் சேர்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.18 ஆம் நூற்றாண்டு. இவர் மாதவச் சிவஞானமுனிவர், சிவஞானயோகிகள், திராவிட மாபாடிய கர்த்தர், திருவாவடுதுறை ஆதீனக் குலதீபம் எனப் போற்றப்படுபவர். இவர் உலகியல் நூல்களும் தத்துவஞான நூல்களும் வடமொழிச் சிவாகம புராணங்களும் தர்க்கசாத்திரமும் வியாகரணமும் நன்கு பயின்றவர். அவ்வப்பொழுது காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்றாற்போல் தனிப்பாடல்கள் பாடுபவர். சித்திரக்கவி புனைவதில் வல்லவர். கண்டன நூல்கள் எழுதுவதில் வல்லவர். தமிழிலக்கண நூல்களிலும் மெய்கண்ட சாத்திரங்களிலும் முன்னிருந்தோர் எழுதி வைத்த பொருந்தாத விளக்கங்களையும் உரைகளையும் களைந்து உண்மை விளக்கங்களை எழுதி வைத்தவர். இவரால் தமிழ் மொழியும் சித்தாந்தசைவமும் புதுப்பொலிவு பெற்றன. இவருடைய இளம்பருவம், துறவு, தமிழ்ப்பணி, சித்தாந்தசைவப்பணி, இவருக்கமைந்த மாணாக்கர்கள், இவரைப் பற்றிய தமிழ் நூல்கள் ஆகியன பற்றி இந்தக்கட்டுரையால் சிறிது சிந்திப்போம்.

இளம்பருவம் 

      இவர் பிறந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் என்னும் தலத்தை அடுத்துள்ள விக்கிரம சிங்கபுரம் என்னும் ஊர். இவர் பிறந்த குடும்பம் அகத்திய முனிவருடைய ஆசிர்வாதம் பெற்றது. இவரும் தம் காலத்தில் அகத்திய முனிவர் போல் தமிழிலும் வடமொழியிலும் பெரும் புலமை பெற்று விளங்கினார். இவருக்கு இளமையில் பெறறோர் இட்ட பெயர் முக்களாலிங்கர் என்பது. இப்பெயர் பாபநாசம் என்னும் தலத்து இறைவனுடைய திருநாமம். இவருடைய முன்னோர்கள் இத்தலத்து இறைவனிடத்துப் பக்தி பூண்டு ஒழுகி வந்தனர். இவருடைய சிறிய தந்தையார் சிறந்த கவிராயராக விளங்கினார். அத்தலத்து அம்பிகையாகிய உலகம்மையின் அருள் நிரம்பப் பெற்றவர். பாபநாசத்தலபுராணமும் விக்கிரமசிங்கபுரத்துச் சில சிற்றிலக்கியங்களும் செய்துள்ளனர். சிவஞானமுனுவருடைய தாயார் மயிலம்மை என்னும் பெயரினர். தந்தையார் ஆனந்தக்கூத்தர் என்னும் பெயரினர். இவருடைய குடும்பத்தினர் சிவபக்தி, அடியார் பக்திகளில் சிறந்து விளங்கினர். ஆதலின் சிவஞானமுனிவருக்கும் அப் பக்தி இயல்பாகவே இளம்பருவத்திலேயே வாய்த்திருந்தது.

துறவு

      ஒருநாள் சிவஞான முனிவர் கல்வி பயிலும் பள்ளியிலிருந்து நண்பகல் உணவுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தவர் வழியில் திருவாவடுதுறை ஆதினத்துத் தம்பிரான்மார்கள் சிலரைக் கண்டார். அவர்களை வணங்கி நின்று தம் இல்லத்தில் நண்பகல் திருவமுது கொள்வதற்கு எழுந்தருள வேண்டுமென்று பணிவுடன் விண்ணப்பம் செய்தார். தம்பிரான்மார்களும் அச்சிவநெறிச் செல்வராகிய சிறிய பெருந்தகையாரின் விண்ணப்பத்தினை ஏற்று அவருடன் சென்றனர். வீட்டில் அன்னையார் மட்டும் இருந்தார். தந்தையார் வெளியில் சென்றிருந்தார். இச்சிறுவர் அன்னையாரிடம் விவரம் சொல்லித் தம்பிரான்மார்களுக்கு நண்பகல் திருவமுது படைத்து மகிழ்ந்தார். தம்பிரான்மார்களும் திருவமுது உண்டு சென்ற பின்னரே தந்தையார் வந்தார். நடந்தவை அறிந்து மகிழ்ந்தார். தந்தையார் தம்மகனையும் உடனழைத்துக் கொண்டு தம்பிரான்மார்களைத் தேடிச் சென்று தரிசித்து மகிழ்ந்தார். அப்பொழுது இச்சிறுவர் தாமும் தம்பிரான்மார்களுடன் செல்லவிரும்புவதாகத் தெரிவித்தார். பெற்றோர் மகனைப் பிரிவதற்கு வருத்தமுற்றாலும் இச்சிறுவருக்கு இது நன்மை தரும் என்று கருதி உடன்பட்டனர். தம்பிரான்மார்கள் இச்சிறுவரை உடனழைத்துச் சென்று அப்பொழுது சுசீந்திரம் என்றும் தலத்தில் தங்கியிருந்த திருவாவடுதுறை ஆதுனத்து இளையப்பட்டத்துத் தேசிகராகிய சீர்வளர்சீர் வேலப்ப தேசிக மூர்த்திகளைத் தரிசிக்கச் செய்தனர்.

     வேலப்பதேசிகரும் இச்சிறுவருடைய முகக்குறிப்பு, அகமகிழ்ச்சி, சிவநெறியில் ஒழுகும் திறம் ஆகியவற்றை அறிந்து இச்சிறுவரைத் தம் மாணாக்கராக ஆக்கிக் கொண்டு உடனிருக்கச் செய்து கல்வி, கேள்விகளில் பயிற்றுவித்து, வடமொழி, தமிழ் என்னும் இருமொழியிலும் வல்லவராக்கினார். தமது ஆதீன மரபுக்கு ஏற்பச் சித்தாந்த சைவத் தத்துவ ஞானத்தையும் விளக்கிக் கூறி மெய்கண்ட சாத்திரங்களிலும் பண்டார சாத்திரங்களிலும் வல்லவராக்கினார். தேசிகர் தாம் அருளிய பஞ்சாக்கரப் பறொடை என்னும் சாத்திரப் பொருளையும் இத்தம்பிரானுக்குத் தெளிவாக உபதேசித்தார். சமய, விசேட, நிருவாணம் என்னும் மூவகை தீக்கையும், சந்நியாசமும் முறையாகச் செய்து சிவஞானத்தம்பிரான் எனத் தீக்கைப் பெயரும் சூட்டித் தம் ஆதினத்துத் தம்பிரான் கூட்டத்தினருள் ஒருவராக ஆக்கிக் கொண்டார்.

பேரூர்

      இங்ஙனம் சில ஆண்டுகள் சுசீந்திரத்தில் தங்கியிருந்த தேசிகர் சிவஞானத் தம்பிரான் முதலிய அடியவர்களையும் உடனழைத்துக் கொண்டு திருவாவடுதுறைக்குப் பயணமானார். வழியில் பாண்டி நாட்டுத் தலங்களைத் தரிசித்துக் கொண்டு வரும் வழியில் தம் ஆசிரியர் ஆணைப்படி செப்பறை அகிலாண்டேசுவரி பதிகம் என்னும் துதிநூலினைப் பாடினார். இதுவே அவர் பாடிய முதல் நூல். பின்னர் தேசிகர் கொங்கு நாட்டுத் திருப்பேரூரினை அடைந்தா். அத்தலத்தில் இருந்த திருவாவடுதுறை ஆதினக்கிளை மடத்தில் தேசிகர் சிவஞானத் தம்பிரான் முதலியவர்களுடன் சிலகாலம் தங்கியிருந்து பச்சைநாயகியுடனமர் பட்டிப்பெருமானையும், அகிலாண்டநாயகியுடனமர் அரசம்பலவாணப் பெருமானையும் வெள்ளியம்பலத்தில் சிவகாமியம்மையுடனமர் நடராசப் பெருமானையும் வழிபட்டுக் கொண்டிருந்தனர்.

அங்ஙனம் தங்கியிருக்கும் நாள்களில் ஓர் ஆனி மாதத்துப் பரணி நட்சத்திரத்தில் தேசிகர் திருவடிப்பேறு அடந்தார். சிவஞானத்தம்பிரான் தேசிகருக்கு செய்ய வேண்டிய கிரியைகளை எல்லாம் குறைவறச் செய்து குருமூர்த்தம் அமைத்து வழிபாடு நடைபெறுவதற்கு வேண்டிய திட்டங்களையும் அமைத்துப் பின் மற்றைய அடியவர்களுடன் திருவாவடுதுறையினை அடைந்தார். இக்காலத்தில் இம்முனிவர் தம் ஆசிரியர் திருவடிப் பேறு அடைந்தது பற்றிய தனிப்பாடல்களோ, துதி நூலோ ஆக்கியிருப்பார். அவை நமக்கு கிடைக்கவில்லை.

திருவாவடுதுறை

      திருவாவடுதிறையில் ஆதீன நிறுவனராகிய நமச்சிவாய மூர்த்திகளை வழிபட்டு, அப்பொழுது பீடதிபதிகளாக விளங்கிய பத்தாவது குருமகாசந்நிதானம் சீர்வளர்சீர் வேலப்ப தேசிக பரமாச்சாரிய சுவாமிகளையும் தரிசித்தார். குருமகாசந்நிதானங்களின் ஆசீர்வாதம் பெற்றுத் தம்பிரான்மார்களுடன் கலந்து இலக்கணம், மெய்கண்ட சாத்திரம் முதலிய நூல்களைப் பழய உரைகளுடன் ஆராய்ந்தார்.

     இவ்வ்கையில் நன்னூல் விருத்தியுரை, தொல்காப்பியப் பாயிர விருத்தி, முதற்சூத்திர விருத்தி, சிவஞான போதச் சிற்றுரை, சிவஞான சித்தியார் பொழிப்புரை ஆகிய உரை நூல்களை எழுதினார்.

     சித்தாந்த மரபு கண்டனம், கண்டன கண்டனம், இலக்கண விளக்கச் சூறாவளி, சிவசமவாத உரை மறுப்பு முதலிய கண்டன நூல்களையும் எழுதினார்.

     சித்தாந்தப் பிரகாசிகை, தருக்கசங்கிரகம், முதலிய நூல்களை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்து எழுதினார்.

     திருவாவடுதுறை ஆதீனத்துப் பரமாச்சாரியராகிய நமச்சிவாய தேசிகர் தோத்திரமாகப் பஞ்சாக்கர தேசிகர் மாலை என்னும் நூலை ஆக்கினார்.

காஞ்சிபுரத்தில்

      மாதவச் சிவஞான முனிவர் திருவாவடுதுறையிலிருந்து தலயாத்திரையாகத் தொண்டை நாட்டுக்குப் பயணமானார். வழியில் நடுநாட்டில் திருப்பாதிரிப்புலியுர் என்னும் தலத்தில் புலவர் ஒருவருக்காக “கரை ஏறவிட்ட முதல்வா உனையன்றியும் ஓர் கதி உண்டாமோ” என்னும் ஈற்றடியினை உடைய பாடலை நிறைவு செய்து கொடுத்து அப்புலவர் பெரும் பரிசுப் பொருள் பெற உதவி செய்தார்.

     காஞ்சிபரத்தில் பிள்ளையார் பாளையம் என்னும் இடத்தில் திருவாவடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் தங்கியிருந்து காமாட்சியம்மனையும் திருவேகம்பநாதரையும் வழிபட்டுக் கொண்டிருந்தார். அங்கே கவிராட்சச கச்சியப்ப முனிவர் என்பவரும் அவருடனிருந்தார்.

காஞ்சிபுரத்தில் அன்பர்கள் பலருக்குச் சிவ நெறியை விளக்கி உரைத்தார். பலர் இவருக்கு அன்பராக – தொண்டராக – அமைந்தனர். மாணாக்கர் பலர் உருவாயினர். அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காஞ்சிபுராணம் என்னும் நூலினை ஆக்கினார்.இப்புராணத்தில் அகத்திய முனிவர் இறைவனைத் தமிழ் கிளவியாகிய மந்திரங்களால் வழிபட்டார் எனப்பாடிவைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. (தழுவக் குழைந்த படலம் - 245) மற்றும் திருவேகம்பர் அந்தாதி, திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு, கச்சியானந்த ருத்திரேசர் பதிகம் போன்ற சிற்றிலக்கியங்களையும் ஆக்கினார்.

     கம்பராமாயண முதற் செய்யுள் (நாடிய பொருள் கைகூடும் என்னும் தொடக்கத்தையுடையது) சங்கோத்திரவிருத்தி என்னும் உரை நூலையும் எழுதினார்.

சென்னை

      காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த காலத்தில் அன்பர்களின் அழைப்பினால் சென்னையைச் சார்ந்த தொட்டிக்கலை, குளத்தூர் முதலிய ஊர்களுக்குச் சென்று தங்கியிருந்தார். அப்பொழுது கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், கலைசைப் பதிற்றுப்பத்தந்தாதி. இளசைப் பதிற்றுப்பத்தந்தாதி. சோமேசர் முதுமொழி வெண்பா, அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கியங்களைப் பாடினார்.

     தொட்டிக்கலை என்னும் பகுதியைச் சார்ந்த மதுரகவி சுப்பிரமணிய முனிவர் என்பவர் இவருடைய மாணாக்கர்களுள் ஒருவராய் விளங்கினார்.

     தொட்டிக்கலை சிதம்பரேசுவரர் சந்நிதியில் மாதவச் சிவஞானமுனிவருக்குத் திருவுருவம் அமைக்கப்பட்டுள்ளது.

     சென்னையை அடுத்த திருவொற்றியூர் என்னும் தலத்தில் அன்பர்களின் உதவியினால் சிவாச்சாரியார்களுடன் கலந்து சிவாகமங்களை நுட்பமாக ஆராய்ந்தறிந்தார்.

சிவஞானபாடியம்

      மீண்டும் காஞ்சிபுரத்துக்கு வந்து தங்கியிருந்து சித்தாந்த சைவத் தத்துவ ஞானத்துக்குத் தமிழ்த் தலைமை நூலாக விளங்கும் சிவ ஞானபோதம் என்னும் நூலுக்குத் தமிழில் மாபாடியம் எழுதினார்.

     அதனைத் திருவாவடுதுறைக்கு வந்து அப்பொழுது பீடாதிபதிகளாக வீற்றிருந்த பதினோராவது குருமகா சந்நிதானங்களாகிய சீர்வளர்சீர் பின்வேலப்பதேசிகர் முன்னிலையில் அரங்கேற்றம் செய்தார். அப்பொழுது இளையபட்டத்தில் சீர்வளர்சீர் அம்பலவாண தேசிகர் என்பவர் வீற்றிருந்தார். (இவரே மாதவச் சிவஞான முனிவரின் முதல் மாணாக்கராகிய கச்சியப்ப முனிவருக்கு ஆசாரியராக விளங்கியவர்).

     வடமொழியில் பிரமசூத்திரம் என்னும் வேதாந்த சூத்திரத்திற்கு சங்கரபாடியம் (இது அத்வைத பாடியம்) இராமாநுஜபாடியம் (இது விசிட்டாத்வைதபாடியம்) நீலகண்ட பாடியம் (இது சிவாத்வைத பாடியம்) எனப் பலபாடியங்கள் உள்ளன. அவ்வக் கொள்கையினர் அவ்வப்பாடியம் எழுதியவர்களைப் பாடியகாரர் எனச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

     சித்தாந்த சைவத்துக்குத் தமிழ்ச்சூத்திர நூலாகிய சிவஞான போத சூத்திரத்திற்குத் தமிழில் எழுதப்பட்ட ஒரே பாடியம் மாதவச் சிவஞான முனிவர் எழுதிய சிவஞான பாடியம் மட்டுமே உள்ளது. எனவே மாதவச்சிவஞானமுனிவர் சித்தாந்த சைவர்களால் பாடியகாரர் என மதித்துக் கொண்டாடத் தக்கவராக விளங்குகின்றார். இது பற்றியே இவருக்குத் திராவிட மாபாடிய கர்த்தராகிய மாதவச் சிவஞான முனிவர் எனப் பெயர் வழங்கி வருகின்றது. (இங்குத் திராவிடம் என்பது தமிழ் என்னும் பொருளில் கூறப்பட்டுள்ளது).

திருவாவடுதுறை ஆதீனக்குலதீபம்

      திருநந்தி மரபு – மெய்கண்டசந்தானத்தின் வழியில் வந்த நமச்சிவாய தேசிகரால் நிறுவப்பெற்ற திருவாவடுதுறை ஆதீனத்தின் புகழ் இம்முனிவர் பெருமானால் பெரிதும் விளக்கமுற்றுத் திகழ்ந்ததனால் இவர் திருவாவடுதுறை ஆதினக் குல தீபம் எனப் போற்றப்படுகின்றார். இன்னும் இம்முனிவர் பெருமான் பாடிய வாழ்த்துப் பாடலே இவ்வாதீனத்துக் குருமரபு வாழ்த்தாக இவ்வாதினத்தால் பாடப்பட்டு வருகிறது. சீர்வளர்சீர் குருமகா சந்நிதானங்கள் நமச்சிவாய தேசிகரை வழிபடும் பொழுது ஓதுவா மூர்த்திகளால் இம்முனிவர் பெருமான் பாடிய பஞ்சாக்கரதேசிகர் மாலையில் உள்ள பாடல்களை ஓதுவதே வழக்கமாக உள்ளது.

திருவடிப்பேறு

      இங்ஙனம் பலவகையாலும் புகழ்பெற்று விளங்கிய மாதவச் சிவஞான முனிவர் திருவாவடுதுறையில் ஒரு விசுவாவசு ஆண்டு – சித்திரை திங்கள் – ஆயிலிய நாளில் திருவடிப்பேறு எய்தினார். அது கி.பி. 1785 என்று கணக்கிடப்படுகின்றது. இன்று 225 ஆண்டுகள் ஆகின்றன.

மாணாக்கர்கள்

      மாதவச் சிவஞானமுனிவருக்கு அமைந்த மாணாக்கர்களுள் பன்னிருவர் மிகச் சிறந்த மாணாக்கர்களாகக் கருதப்படுகின்றனர். அவர்களுள்ளும் கவிராட்சச கச்சியப்ப முனிவர் முதன்மை மாணாக்கராக மதிக்கப்படுகின்றார். மற்றும் தொட்டிக்கலை மதுரகவி சுப்பிரமணிய முனிவர், காஞ்சிபுரம் இலக்கணம் சிதம்பரநாத முனிவர் மிகச் சிறந்த மாணாக்கர்களாகக் கருதப்படுகின்றனர்.

புகழ்நூல்கள்

      மாதவச் சிவஞான முனிவர் பெருமானின் புகழினை விரிவாகக் கூறும் தனிப்பாடல்களும், பதிகங்களும், சிற்றிலக்கியங்களும் மிகப்பல உள்ளன. அவற்றுள் தொட்டிக்கலை – மதுரகவி சுப்பிரமணிய முனிவர் பாடிய தனிப்பாடல்கள் மிகச் சிறப்புடையன. இப்பாடலகளில் ஞானமே வடிவானவர் என்றும் சிவாகமங்களுக்கெல்லாம் ஆகாரமாய் (இருப்பிடமாய்) விளங்குபவர் என்னும் நூலும் குறிப்பிடத்தக்க சிறப்புடையது.

     மாதவச்சிவஞான முனிவரின் வரலாற்றைத் திருவாவடுதுறை ஆதீனப்புலவர் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்கள் ஒரு புராணமாக விரிவாகப்பாடுவதற்குத் தொடங்கினார் எனத் தெரிகின்றது.

முடிவுரை

      இதுவரை மாதவச் சிவஞான முனிவர் தமிழுக்கும், சித்தாந்த சைவத்துக்கும், திருவாவடுதுறை ஆதீனத்திற்கும் பலவகையாலும் புகழ்மிகுமாறு தொண்டாற்றி வாழ்ந்த திறம் ஒருவாறு சுருக்கமாக எழுதப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க மாதவச் சிவஞான முனிவரைச் சித்தாந்த சைவர்கள் பல வகையாலும் நினைவு கூறக் கடமைப்பட்டவர்கள் என்பது இதனால் ஒரளவு விளங்கும். இம்முனிவர் பெருமானின் திருவுருவத்தைப் சிவாலயங்களில் சந்தானாசாரியர்களை அடுத்து எழுந்தருளச் செய்து நாள் வழிபாடும் குருபூசையும் செய்தல் வேண்டும். (இக்காலத்தில் மிகப்பல சிவாலயங்களில் சந்தானாசாரியார்களின் திருவுருவங்களே எழுந்தருளச் செய்யப்பெறவில்லை என்பது வருத்தப்படுவதற்கு உரியதே. இந்நிலைமை மாறுதல் வேண்டும்).

சுத்தாத்துவித சித்தாந்த சைவப் பாடியகாரர் என்ற பெயரில் இவருக்குத் தனிச் சந்நிதி அமைத்து வழிபடுதலும் தக்கதே. இவ்வகையில் முதலடி எடுத்து வைத்து இம்மரபினைத் தொடங்கி வைத்திருக்கும் திருநணா (பவானி) சிவனடியார் திருக்கூட்டத்தின் பணி பாராட்டுக்குரியது.

மெய்கண்ட தேவர் திருவடி வாழ்க

மாதவச் சிவஞான முனிவர் திருவடி வாழ்க!

தமிழ்ச் சித்தாந்த சைவச் செந்நெறி ஓங்குக!

Back to Top