அறுவகைச் சமயம்

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

மணிமேகலை, திருமந்திரம், திருமுறை முதலிய நூல்களில் குறிக்கப் பெறுகின்றது. சிவஞான முனிவர் தாம் அவற்றைச் சிவஞான மாபாடியத்தில் வரையறை செய்தார்.

புறப்புறச் சமயம், புறச்சமயம், அகப்புறச் சமயம், அகச்சமயம் எனப் பாகுபாடு செய்துள்ளார்.

புறப்புறச் சமயத்தார்:

1. உலோகாயதர்

2. மாத்திய மிகர்

3. யோகசாரர்

4. சௌந்திராந்திகர்

5. வைபாடிகர்

6. ஆருகதர் (சமணர்)

1.உலோகாயதர்:

நிலம், நீர், தீ, காற்று ஆகிய நான்கு பூதங்கள் நிலையான பொருள்கள், கடவுள், உயிர், இம்மை, மறுமை, வினைப்பயன் ஆகியன இல்லை என்னும் நாத்திகர்.

2.மாத்திய மிகர், 3.யோகசாரர், 4.சௌந்திராந்திகர், 5.வைபாடிகர்

ஆகிய நால்வரும் புத்தமதத்தினர். புத்தக் கடவுளே மூதற் பொருள். பஞ்சகந்தங்கள் கூடிப் பல உணர்வு உண்டாகிக் கணபங்கம் இல்லாமல் கடவுள் முத்தி வடிவாயிருப்பார்.

6. ஆருகதர் (சமணர்):

அருகக்கடவுளே முதற்பொருள். அநந்த ஞானம், அநந்ததரிசன்ம, அநந்தவீரியம், அநந்த சுகம், நிர்நாமம், நிர்க்கோத்திரம், நிராயுசயம், சம்மியதா பாவம் என்ற எட்டுக் குணங்களை உடையவர். சம்மியதாயம் என்றும் அழிவில்லா நிலை. இவருள் உலகாயதன் காட்சி வாதியெனவும், பௌத்தன் கணபங்க வாதியெனவும், பௌத்தன் கணபங்க வாதியெனவும், ஆருகதன் அநேகாந்த வாதியெனவும், பௌத்தருள்ளும் மாத்தியமிகன் சூனிய வாதியெனவும், யோகசாரன் விஞ்ஞான வாதியெனவும், ஏனை இருவரும் சமுதாய வாதிகளெனவும் உணர்க (சிவஞானமாபாடியம்). வேதாகமங்களை உடன்படாமையாலும் பதி,பசு,பாசம் ஆகிய முப்பொருள் கொள்கையை ஏற்காமையாலும், சிவத்தைப் பரம்பொருளாகக் கொள்ளாமையாலும் புறப்புறச் சமயத்தார் ஆயினர்.

புறச் சமயத்தார்:

1. தார்க்கிகர்

2. மீமாஞ்சகர்

3. ஏகான்மவாதிகள்

4. சாங்கியர்

5. யோக மதத்தினர்

6. பாஞ்சராத்திகள்

1.தார்க்கிகர்

வைசேடிகம், நையாயிகம் என இரு வகைப்படும். நிலம், நீர், தீ, வளி, ஆகாயம், காலம், திசை, ஆன்மா, மனம் எனப் பொருள் ஒன்பது என்பர். இவற்றுள் நிலம் முதலிய நான்கும் அநித்தப் பொருள்கள் என்பர். இவற்றிற்குக் காரணமாகிய நில அணு, தீயணு, வளியணு ஆகிய நால்வகைப் பரமாணுக்களும் ஆகாயமும் நித்தப் பொருள்கள் என்பர். ஆன்மா, பரமான்மா, சீவான்மா என இருவகைப்படும் என்பர்.

2.மீமாஞ்சகர்:

வேதமே பிரமம் என்றும் வேதம் ஒருவரால் தோற்றுவிக்கப்படாதது என்றும் கூறும் கொள்கையர்.

3.ஏகான்ம வாதிகள்:

1. பாற்கரியன், 2. மாயவாதி, 3. சத்தப்பிரமவாதி, 4. கிரீடாப்பிரமவாதி என நால் வகைப்படுவர். பிரமம் மட்டுமே மெய்ப்பொருள். பிரமம் உலகமாகவும் சீவான்மாவாகவும் தோன்றுவது பொய்த்தோற்றும் என்பர். மாயை அநிர்வசனம் என்பர்.

4.சாங்கியர்:

இருபத்தைந்தாம் தத்துவமாகிய புருடனே முதற்பொருள் என்றும் ஆன்மாவுக்கு வேறாகக் கடவுள் இல்லை என்றும் கூறும் கொள்கையர்.

5.யோகமதத்தினர்:

யோகத்தாலேயே இறைவனை அடையமுடியும் என்றும், யோகபாவனையாலே திருவருள் பெறலாம் என்றும் கருதுபவர்.

6.பாஞ்சராத்திரிகள்:

வைணவர், வாசுதேவனே பரம்பொருள். அவன் பரிணாமே அனைத்தும் என்ற கொள்கையர். இவர்கள் வேதத்தைப் பிரமாணமாகக் கொண்டாலும் சைவ சித்தாந்தம் கூறும் முப்பொருள்களை உடன்படுவதில்லை. மீமாஞ்சகர் வேதத்தின் கன்ம காண்டத்தை மட்டும் உடன்படுவர். ஏகான்மவாதிகள் வேதத்தின் ஞான காண்டத்தை மட்டும் உடன்படுவர்.

அகப்புறச்சமயத்தார்

1. பாசுபதர் 

2. மாவிரதர் 

3. காபாலர் 

4. வாம மதத்தினர் 

5. வைரவமதத்தினர் 

6. ஐக்கியவாத சைவர்

வேத ஆகமங்களை உடன்பட்டாலும் இரண்டிற்கும் வேறாகிய பாசுபதம் முதலிய நூல்களைச் சிறப்பாகக் கொள்பவர்.

புறச்சமயிகளுக்கு இருள் என்றது ஏதென்னில் அவர்கள் திரிபதார்த்த (முப்பொருள் உண்மை) உடையவர்கள் அல்லர் ஆகையானும் சிவனைக் கர்த்தா என்று கொள்ளுகையும் இல்லாதவர்கள் ஆகையாலும் என அறிக” (மதுரைச் சிவப்பிரகாசர்)

அபேதம் கொள்ளிற் பொன்னும் பணியும் மற்றொன்று ஆனாற்போல எல்லார்க்கும் சுகதுக்கங்கள் ஒத்தல் வேண்டும். பேதம் கொள்ளின் இருளும் ஒளியும் போலச் சிவனும் உயிரும் எக்காலமும் பேதமே ஆதலின் வேதாகமங்களிற் சாயுச்சியம் என்று சொல்வது பயனில் சொல்லாம். பேதாபேதங்கொள்ளின் மோட்சம் சாதிக்க வேண்டுவது இல்லையாம். ஆகையால் அவை மூன்றும் நீக்கப்பட்டன (இலக்கணம் சிதம்பரநாத முனிவர்)

அகச்சமயத்தார்:

1. பாடாணவாதசைவர்

2. பேதவாத சைவர்

3. சிவசமவாத சைவர்

4. சிவசங்கிராந்தவாத சைவர்

5. ஈசுவர அவிகாரவாதசைவர்

6. சிவாத்துவிதசைவர் (நிமித்த காரண பரிணாம வாதசைவர்)

இவ்வாறு வகையினரும் சித்தாந்த சைவம் கூறும் முப்பொருள்களின் விரிவாகிய 1. பதி 2. உயிர் 3. ஆணவம் 4. வினை 5. சுத்தமாயை 6. அசுத்தமாயை ஆறு பொருள்களையும் உடன்பட்டு, ஆறுபொருள்களுக்கும் கூறும் பொது வியல்புகளை மட்டும் ஏற்றுக்கொண்டு தன்னியல்புகளில் மாறுபடுவர். ஆதலால் அகச்சமயத் தொளியாய்என்று கூறினார்.

இறைவன் ஆன்மாக்களிடத்தே கல்ப்பினால் உடலும் உயிரும் போல ஒன்றாய், பொருளின் தன்மையால் கண்ணும் சூரியனும் போல ஆன்மாக்களின் வேறாய், உயிர்க்கு உயிராதல் தன்மையால் கண்ணொளியும் ஆன்ம அறிவும் போல ஆன்மாக்களோடு உடனுமாய் இருக்கும் நிலை சைவ சித்தாந்தத்தில் அத்துவிதம் இயல்பை அறியலாம்.

Back to Top