இவளோ கொங்கச் செல்வி

- ந.சீனிவாசன்

வரந்தரு வண்மை வலக்கரம் நீலோற் பலத்துடனே
உரந்தரு வாமம் உடைதொடும் அத்தம் உடையளே!
பரந்தரும் முட்டப் பயந்தரு நாகநாதர் துணையே!
நிரந்தரம் நாளும் நினைநினை நீள்நினை வாக்குவாயே

- முத்துவாளியன்னை அந்தாதி

கொங்குமலிகின்ற கொங்குவளநாடு என்று பேரூர்புராணம் கொங்குநாட்டைப் புகழ்ந்து கூறுகிறது. சங்ககாலத்திற்கு முன்பிருந்தே உரோமானியர்கள் கொங்கு நாட்டுடன் வாணிகத் தொடர்பு கொண்டுருந்தனர். அகழ்வாய்வுகளில் உரோமானியக் காசுகள் பல கொங்குநாட்டில் கிடைத்துள்ளன.

கொங்குநாடு மலைவளம் மிக்கது. மேற்குமலைத் தொடரில் தெங்கயிலை எனப் புகழ்பெற்றது வெள்ளியங்கிரி. இம்மலையில் இயற்கையாக அமைந்தமலைக்குகையில் தாந்தோன்றியாக (சுயம்பு) ஐந்து சிவலிங்கங்கள் உள்ளன. இம்மலை அடுவாரத்தில் அமைந்தது முட்டம் என்னும் ஊர். மேற்கொண்டு செல்ல இயலாத வகையில் முட்டிநிற்கும் இடம் என்ற பொருளில் முட்டம் எனப் பெயர் அமைந்தது. “நாடும் நகரமும் நனிமலை முட்டமும்” என்பது பெருங்கதை. சங்ககாலம் முதல் கி.பி.13 ஆம் நூற்றாண்டு முடிய வணிக மையமாக முட்டம் அமைந்திருந்தது. கால்வெட்டுகளில் , முட்டமான் அமரபுயங்க நல்லூர் எனப்படுகிறது. அமரபுயங்கள் ஒரு சேர மன்னனாவான்.

இவ்வூரில் பழமையான சிவன் திருக்கோவில் உள்ளது. இறைவன் நாகேசுவரர்., அம்மை முத்துவாளி எனப்பெயர் பெற்றவர்.முத்துக்களால் அமைந்த காதணி அணிந்தமையால் முத்துவாளி என்றனர். சிற்பக் கலையழகு முற்ற அமைந்தது இத் திருமேனி நாகேசுவரர் தம் திருஉள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் இவ்வுயிரோவியத்தின் வடிவத்தை வார்த்தைகளால் கூறமுடியாது.

அம்மையின் வலக்கையில் நீலமலர் உள்ளது. விரல்கள் அம்மலரின் முற்றிய காம்பினை நளினமாகப் பற்றி உள்ளது. முங்கையில் பரியகம் என்னும் அணிலன் உள்ளது. இடக்கை மணிக்கட்டின் அருகில் உள்ள ஆடைக்கட்டினைடத் தொட்டவாறு தொங்க விடப் பெற்றுள்ளது. வேயுறு தோளியின் இரு தோள்களிலும் அடிக்கடுக்கான அரும்புகள் பொருந்திய கடகங்கள் உள்ளன. அவற்றின் நடுவே வட்டவடிவ மலர்மொட்டுகள் விளங்கித் தோன்றுகின்றன. மணிக்கட்டில் சூடகம் என்ற வளைகள் அடிக்கடுக்காக உள்ளன. கைகளில் இரேகைகளும் காணப்பெறுகின்றன. விரல்களில் கணையழிகள் உள்ளன. காதுகளில் முத்துவாளிகள் குதம்பைகளோடு தோள்களில் தோய்ந்துள்ளன.

தலையில் உள்ள அழகிய திருவடி ஒன்பது அடிக்குகளை உடையதாக அழகுபடுத்தப் பெற்றுள்ளது. பூ வேலைப்பாடுகள் பொருந்தியுள்ளன. முடியின் கீழ் நெற்றியின் மேல் கதிரும் திங்களும் கவினுறத் தோன்றுகின்றன. மூக்கில் மூக்குத்தி அணியச் சிறுதுளை உள்ளது.

தோள்களில் வாகு மாலைகளும், மணிக்கழுத்தில் சவடியும், காறைகளும் காணப்பெறுகின்றன. திருமார்பும், மணிவயிறும், துடிஇடையும், காண்போர் கண்ணையும், கருத்தையும் கவருகின்றன. தலைமுடியில் பின்புறம் சடைவில்லை வட்டமாகப் பொருத்தப்பெற்றுள்ளது. இடுப்பில் ஆபரணங்கள் அணிசெய்கின்றன. ஒரு சுற்று வட்டத்திற்குப் பின் மேகலை அணிந்துள்ளது. மேகலை இதழ் இதழாகத் தொங்குகின்றது. மேகலையை மாட்டுவதற்காக ஏற்வகையில் 16 துளைகள் உள்ளன. 16 கோவையுள்ள மேகலைக்குக் கலாபம் என்பது பெயர் எனச் சேந்தன் திவாகரம் குறிப்பிடுகிறது. கலாப மேகலை அணிந்த கலாப மயிலின் ஒயிலான காட்சி கண்களுக்கு விருந்து. இவ்வன்னையின் மேல் சமயத்தமிழ் ஆசிரியர் அருள்மிகு முத்துவாளியன்னை அந்தாதி பாடியுள்ளமை குறிக்கத்தக்க ஒன்றாகும்.

Back to Top