சிலம்பு காட்டும் செவ்வேள்

- முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு

தமிழ் மொழியில் தோன்றிய முதற்காப்பியம் சிலப்பதிகாரம். இதன் ஆசிரியர் குணவாயிற்கோட்டத்துக் கோமகனான இளங்கோவடிகளார். இவரைச் சமணர் என்பர். சிலம்பில் பல்வேறு கடவுளர் கூறப்பெறுகின்றனர். தொல்காப்பிய மரபையொட்டி அடிகளாரும் சிவபெருமானை ஒரு திணைக்குரிய தெய்வமாகக் கூறவில்லை என்பது குறிக்கத்தக்கது. சிவபரம்பொருள் காப்பியம் முழுவதும் ஆங்காங்கே கூறப்பெறுகிறது. சிவபெருமானின் சிறப்புகளைக் கூறும்போது இவர் திருநாவுக்கரசர். திருமாலின் திறங்களைப் பேசும்போது இவர் ஒரு பெரியாழ்வார். அறுமுக ஒருவனின் ஆற்றலைச் சுட்டும்போது இவர் நக்கீரர். அம்மையின் பெருமை கூறுகையில் சைவஅபிராமிப்பட்டர். அருகக் கடவுளைத் தேடித்தான் காணவேண்டி இருக்கிறது. அடிகளார் சமணர்தானா? என்ற ஐயமும் உடன் எழுகிறது. சிலம்பில் அடிகளார் காட்டியுள்ள செவ்வேளை அறியும் நோக்கில் இக்கட்டுரை வரையப்பெறுகிறது.

வேள் இருவர்

தமிழ் இலக்கியங்களில் வேள் இருவராகக் காட்டப் பெறுகின்றனர். ஒருவர் செவ்வேள் (முருகன்) மற்றவர் கருவேள் (மன்மதன்) ஆவர். அடிகளார் கோவலனை அறிமுகப்படுத்தும்போது,

“பண்தேய்த்த மொழியினர் ஆயத்துப் பாராட்டிக்
கண்டேத்தும் செவ்வேளென்று இசைபோக்கிக் காதலால்
கொண்டேத்தும் கிழமையான் கோவலன் என்பான்”

எனக் கூறுகிறார். இங்குக் கோவலனின் இளமையையும் அழகையும் மட்டுமே கூறக்கருதி இருந்தால் மன்மதன் எனக்கூறி இருக்கலாம். சூழ்நிலைக்கும் பொருத்தமாக இருக்கும். காரணம் பண்ணைப் பழித்த மொழிபேசும் இளம்பெண்களே தம் கூட்டத்தில் கோவலனைப் புகழ்ந்து கூறுகின்றனர். ஆனால் அடிகளார் கோவலனின் வீரம், நிறம் இவற்றையும் சேர்த்துக் கூறவேண்டிச் செவ்வேள் என்றார்; எனக்குறிப்பாக அறியமுடிகிறது. காப்பியத்தின் தொடக்கத்தில் கோவலனை முருகனாகக் காட்டியவர்; காப்பியத்தின் இறுதியில் கண்ணகியை மலைவேங்கை நறுநிழலின் வள்ளி எனக் காட்டுகின்றார்.

கோயிலும் கோட்டமும்

புகாரிலும் மதுரை மாநகரிலும் அறுமுகக் கடவுளுக்குச் சிறந்த கோயில்கள் அக்காலத்திருந்தன. புகாரில் முருகன் வீற்றிருந்த தலத்தை "அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயில்” என்றும், மதுரையில் முருகன் அருள்புரிந்த திருத்தலத்தை, “கோழிச் சேவல் கொடியோன் கோட்டம்” என்றும் இளங்கோவடிகள் குறித்தார். மேலும் புகாரில் வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம் முதலியனவும் இருந்ததைக் கூறுகிறார்.

வேற்கோட்டம் என்பதற்கு முருகன் கோயில் என்று அரும்பத உரையாசிரியரும், முருகவேள் நிற்கும் கோயில் என்று அடியார்க்கு நல்லாரும் உரை எழுதினர். வேல் ஆகுபெயராய் முருகனைக் குறித்தது என்றார் அடியார்க்கு நல்லார். ஆனால் இருவருமே வச்சிரக் கோட்டம் என்பதற்கு வச்சிரப்படை நிற்கும் கோயில் என உரைகண்டுள்ளனர். பிற்கால உரையாசிரியர்களே முருகன் கோயில் எனக் கொண்டாலும் வேற்படை நிற்கும் கோயில் என்றுமாம் என உரை கொண்டனர். எனவே வேற்கோட்டம் என்பது முருகப்பெருமானின் திருக்கை வேலை மட்டும் வைத்து வழிபடப் பெற்ற கோயில் என்பது உறுதியாகிறது.

கொங்குநாட்டில் திருக்கோயில் கருவறையில் ஐந்து வேல்களை மட்டும் வைத்து வழிபடும் பழக்கம் இருந்துள்ளது. இதனைப் பரமசிவன்கோயில் என்கின்றனர். கொங்குநாட்டில் இவ்வாறு அமைந்த கோயில்கள் இருபத்தொன்று என்கிறார் “வேற்கோட்டம்” என்ற நூலின் ஆசிரியர் ப. சதாசிவம் அவர்கள்.

சுடரிலை நெடுவேல்

வேல் தமிழரின் படைக்கருவிகளுள் ஒன்று. போரில் வெல்லப் பயன்படுதலின் வேல் எனப்பெற்றது. முருகப் பெருமானின் கையில் உள்ளவேல் உமையம்மையால் தரப்பெற்றதாகும். ஆழ்ந்து அகன்று நுண்ணியதாக உள்ள இவ்வேல் ஞானத்தின் வடிவமாகும்.

முருகப்பெருமானின் கையில் உள்ள வேலின் பெருமையை அடிகளார் மிக விரிவாகக் கூறுகிறார். அசுரர்களை அழித்தது, குருகுபெயர்குன்றம் (கிரவுஞ்சம்) கொன்றது, சூரபன்மாவைத் தண்டித்தது முருகப்பெருமானின் வேலே என்கிறார்.

“கடல் வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு
அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்” என்றும்

"பிணிமுகமேற் கொண்டு அவுணர் பீடழியும் வண்ணம்
மணிவிசும்பில் கோனேத்த மாறட்ட வெள்வேலே”

என்றும், முருகனின் வேல் அசுரர்களை அழித்ததைக் குறிக்கின்றார். இந்திரனின் மகன் சயந்தன்பட்ட துன்பத்தைக் கந்தபுராணம் விரிவாகக் கூறும். அசுரர் அழிந்ததால் இந்திரன் மகிழ்ந்தான். எனவே மணி விசும்பில் கோனேத்த என்றார்.

“வருதிகிரி கோலவுணன் மார்பம் பிளந்து
குருகு பெயர்க்குன்றங் கொன்ற நெடுவேலே”

எனக் குருகு என்னும் பறவையின் வடிவில் இருந்த மலையை அழித்தமை கூறப்பெறுகிறது. இம்மலை கிரவுஞ்சகிரி எனப்படும். மலை வடிவில் இருந்த அரக்கன் முனிவர்களை தம்முள் அடக்கி உணவாகக் கொண்டான். அகத்தியர் முருகன் கைவேல் உன்னை அழிக்கும் எனச்சாபமிட்டார். இம்மலையின் பக்கத்திலிருந்த மாயாபுரியில் தான் தாரகாசுரன் தங்கி இருந்தான். தாரகனைக் கொன்றவேலே கிரவுஞ்சமலையையும் அழித்தது.

“தாரகனும் மாயத்தடங்கிரியும் தூளாக
வீர வடிவேல் விடுத்தோனே”

எனக் கந்தர் கலிவெண்பா தாரகனும் கிரவுஞ்சமலையும் ஒன்றாக அழிந்ததைக் குறிப்பிடுகிறது. எனவே முருகன் தாரகனைக் கொன்றதை அடிகள் குறிப்பாகச் சுட்டினார் எனக் கொள்ளலாம்.

“பாரிரும் பெளவத்தின் உள்புக்குப் பண்டொருநாள் சூர்மா தடிந்த சுடரிலைய வெள்வேலே”

என்று, கடலின் நடுவில் மாமரமாய் நின்ற சூரபன்மனை முருகப்பெருமான் அழித்தமை கூறப்படுகிறது. இவ்வடிகளை அடிகளார்,

“பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச்
சூர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல்”

என்னும் திருமுருகாற்றுப்படை அடிகளை நினைவுகொண்டு அமைத்துள்ளார் எனத் தெரிகிறது.

திருமுருகன் திருத்தலங்கள்

முருகனின் அறுபடை வீடுகளைச் சங்க காலத்திலேயே நக்கீரர் குறித்திருந்தாலும் பின்னர் இரண்டாம் நூற்றாண்டில் வந்த அடிகளார் திருச்செந்தூர், திருச்செங்கோடு, வெண்குன்றம், ஏரகம் என்னும் நான்கு தலங்களைக் குறித்துள்ளார். நக்கீரர் கூறிய அறுபடைவீட்டில் திருச்செந்தூர், ஏரகம் என்னும் இருதலங்கள் மட்டுமே அடங்கும். இவையன்றி நெடுவேள்குன்றம் என்னும் ஒரு மலைத்தலத்தையும் குறித்துள்ளார்.

முருகன் ஆடிய கூத்துகள்

முருகப்பெருமான், பெரிய கடலின் நடுவே சூரபன்மனைக் கொன்று அலைகளையே ஆடுகின்ற அரங்கமாகக் கொண்டு துடிகொட்டி ஆடிய கூத்து துடிக்கூத்தாகும். அசுரர்கள் போர் செய்வதற்காகக் கொண்டுவந்த படைக்கலங்களை அழித்து அவர்களை வருத்தமுறச் செய்து அவர்களின் முன்பு தன் குடையைச் சாய்த்து ஆடிய கூத்து குடைக்கூத்தாகும். இவ்வாறு முருகப்பெருமானின் துடிகூத்தும், குடைக்கூத்தும் கடலாடுகாதையில் கூறப்பெறுகின்றன.

முருகனிடம் வேண்டும் வரம்

தலைவி தலைவன்பால் கொண்ட அன்பால் உடலும் உள்ளமும் வேறுபட்டாள். அதனை அறியாத அன்னை வேலன் வெறியாட்டுக்கு ஏற்பாடு செய்தாள். தலைவி தன் தோழியிடம் தாய் கூறியதைக் கேட்டு வேலன் வெறியாடினால் அவன் அறியாமை உடையவன். வேலனுக்காக முருகன் வந்தால் அவ்வேலனை விட முருகன் அறியாமை உடையவன். இவையனைத்தும் எனக்கு நகையைத் தருகின்றன என்றாள் வெறியாடும் இடத்திற்கு முருகன் வந்தால் அவனிடம் தலைவி கேட்கும் வரம்தான் என்ன? அடிகளார் வாயிலாகவே அறிவோம்.

“வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து
நீலப்பறவை மேல்நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும் வந்தால்
மால்வரை வெற்பன் மணவணி வேண்டுதுமே”

நீலநிறப் பறவையாகிய மயிலின்மேல் வள்ளியோடு சிவபரம்பொருளின் திருமகன் எழுந்தருள்வான். அவ்வாறு அவன் வந்தால் இப்பெரிய மலையின் தலைவனோடு எனக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என வேண்டுவேன் என்கிறாள் தலைவி.

இவ்வாறு முருகப் பெருமானின் சிறப்புகளை இளங்கோவடிகளார் காப்பியத்தின் பலவிடங்களிலும் குறித்துள்ளமை அறிந்து மகிழ வேண்டிய ஒன்றாகும். மூலநூலிலே இதனைக் கற்போர் இன்னும் பெருமகிழ்வு எய்துவர்.

Back to Top