- முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு
சுந்தரமூர்த்தி சுவாமிகள் தம் காலத்தும், தமக்கு முன்னரும் வாழ்ந்த அடியார்களையும் அவர்களில் சிலரது அருட்செயல்களையும் கூறித் திருத்தொண்டத் தொகையை அருளினார். பின்னர் வந்த நம்பியாண்டார் நம்பிகள் அடியார் வரலாற்றைச் சற்று விளக்கித் திருத்தொண்டர் திருவந்தாதி பாடினார். இவை இரண்டும் சேக்கிழார் பெரிய புராணம் பாட அடிப்படைகளாயின. எனவே இவை மூன்றும் தொகை வகை விரி நூல்களாயின.
நம்பியாண்டார் நம்பிகள் சுந்தரருக்குக் கூறிய துதிப்பாட்டில் சங்கிலியாரை நூல் போன சங்கிலி எனக் கூறுகிறார். மங்கல நாணை இழந்த சங்கிலி எனப் பலரும் இன்றுவரை பேசியும் எழுதியும் வருகின்றனர். இவ்விளக்கம் சரிதானா என்பதை இக்கட்டுரை வழியாகச் சிந்திக்கலாம்.
ஞாயிறுகிழாரின் மகளாக அநிந்திதையார் பிறந்து சங்கிலியார் என்னும் பெயர் பெற்று வளர்ந்து வந்தார். பண்டைய உணர்வுகள் மிக்குஎழ உலகியல் நெறி நீங்கி இறை உணர்வு மிக்கவராய்த் திருமணப் பருவம் அடைந்தார். சங்கிலியார் பெற்றோர்களிடம் சிவனடியார்க்கு உரியவள் ஆவேன். திருவொற்றியூரில் சிவப்பணிபுரிய விரும்புகிறேன் என்றார்.
இந்நிலையில் ஞாயிறுகிழாரின் குலத்தைச் சேர்ந்த ஒருவன் சங்கிலியாரின் தன்மையை அறியாதவனாகி அவரை மணக்க விரும்பினான். உறவினர் சிலரை மணம்பேச அனுப்பினான். அவர்களும் ஞாயிறுகிழார் வீட்டுக்குச் சென்று பேசினர். தந்தையார் சங்கிலியாரின் உள்ளக் கருத்தை வெளிப்படுத்திக் கூறாமல் வேறு மொழிகள் கூறி அனுப்பி விட்டார். உறவினர்கள் சென்று செய்தி கூறும் முன்பே, தீமை செய்தவன் மரணதண்டனை பெறுவது போல் அவன் இறந்து போனான்.
சங்கிலியாரைப் பற்றிப் பேசத்தகாத சொற்களை, சாகாமல் உலகில் உயிர்வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் பேசமாட்டார்கள் என உலகவர் அறிந்து கொள்ளும்படி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர் திருவொற்றியூரில் கன்னிமாடம் அமைத்துப் பெற்றோர் அங்கு வைத்துப்பேணினர். இறைவன் திருவருளால் சங்கிலியாரைச் சுந்தரர் மணந்தார். “திருவொற்றியூர் புக்குச் சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்தோள்”, “சங்கிலியோடு எனைப் புணர்ந்த தத்துவனை”, “மான்திகழும் சங்கிலியைத் தந்து” எனவரும் அகச்சான்றுகள் சுந்தரமூர்த்திகள் தேவாரத்துள் உள்ளன.
சுந்தரமூர்த்தி சுவாமிகளின் காலத்திற்குப் பின் இருநூறு ஆண்டுகள் கழித்துத் நம்பியாண்டார் நம்பிகள். அவர் சுந்தரமூர்த்திகளின் வரலாற்றை நன்கு அறிந்தவர். தமது திருத்தொண்டர் திருவந்தாதியில் சுந்தரமூர்த்திகளுக்குத் துதி கூறும் போது
“தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால்
புகுமணக் காதலினால் ஒற்றியூர் உறை புண்ணியன்தன்
மிகுமலர்ப் பாதம் பணிந்தருளால் இவ்வியன் உலகம்
நகும்வழக்கே நன்மையாப் புணர்ந்தான் நாவலூரரசே”
என்கிறார். முதலடிக்கு அறிஞர் பலர் பின்வருமாறு பொருள் கூறுகின்றனர்.
1. தகுதியுடைய சங்கிலியாரை மணம் பேசும் நிலையில் இகழ்ந்துரைத்தோன் இறந்து போகவே அந்நிகழ்ச்சியினைக் கேட்டறிந்த பிறரும் மணம்பேச அஞ்சி விலகினமையால் மங்கல நூலணிதலாகிய திருமணம் தடைப்பட்ட சங்கிலியார் என்பார் “வீயவே நூல் போன சங்கிலி” என்றார். நூல்போன சங்கிலி என்றது மங்கல நூலணிதலாகிய திருமணம் தடைப்பட்ட சங்கிலியார் எனவும், கற்றுத்துறை போய பொற்புடை நங்கையாகிய சங்கிலியார் எனவும் இருபொருள் தந்து நிற்றல் அறிந்து மகிழத்தக்கதாகும். (க. வெள்ளைவாரணன், பன்னிரு திருமுறை வரலாறு முதற்பகுதி 1972 – ப. எ. 314 – 315)
2. நூல்போன என்பது சிலேடை நயம். மங்கல நாணை இழந்த என்பது மேற்போக்குப் பொருள்………………….. மகட்பேசினோன் உடனே இறந்தமைகேட்டு அவளை மணம்பேச நினைவார் ஒருவரும் இல்லாது போயினர் என்பதே அத்தொடரின் உட்பொருள்.(பதினொன்றாம் திருமுறை – சி. அருணை வடிவேலு முதலியார் உரை, தருமையாதீன வெளியீடு 1995 ப. எ. 813 – 814).
3. “மகட்பேசினோன் வீயவே நூல்போன” என்றது நூலிழந்த நிலை குறிக்குமென்று கொண்டு, நம்பிகள் செயல், தாம் தாம் கொண்டொழுகும் அறுதாலி மணம் முதலிய கோட்டிகளுக்கு ஆதரவாகக் கூறிப்பிணங்குவாருமுளர்……………………. நூப்போன – நூல்போன என்று உலகவர் பிழைபடக் கூறும் என்க. நூற்றுறை போகிய என்ற குறிப்புடனும் நின்றது. (திருத்தொண்டர் புராணம் – சிவக்கவிமணி உரை – ஆறாம்பகுதி 1953 – ப. எ. 255 - 256).
மணம் பேசியவன் மரணமடைந்தான். திருமணம் நடைபெறவில்லை. மங்கலநாண் அணியப்பெறவில்லை. ஆதலால் நூல் என்பது மங்கல நாணைக் குறிப்பதற்கு வழியில்லை. மணப்பெண் திருமணம் பற்றியஎச் சிந்தனையிலும் இல்லை. பெற்றோரும் மணம்பேச வந்தோரிடம் வேறு கூறினரே அன்றி மணம் பற்றி எதுவும் பேசவில்லை எனவே மங்கல நூலணிதலாகிய திருமணம் தடைப்பட்டது என்பதற்குச் சிறிதும் இடமில்லை. மகட்பேசினோன் இறந்தமையால் யாரும் மணக்க முன்வரவில்லை என்பது கருத்தானால் சேக்கிழார் அதனைச் சுட்டிக் காட்டியதற்கு அகச்சான்று ஏதுமில்லை.
கற்றுத்துறைபோய பொற்புடை நங்கை, நூற்றுறை போகிய என்பன – நூல்போன என்பதற்குச் சரியான பொருளைத் தருகின்றன.
பருத்திப் பஞ்சிலிருந்து நூற்கப்படும் நூலே நூல் என்று கூறப்பெறும். ஆனால் புலவரால் செய்யப் பெற்றவற்றுக்கும் நூல் என்னும் பெயர் உண்டு.
“நூல் போறலின் நூல் என்ப, பாவை போல்வாளைப் பாவை என்றாற் போல. நூல் போறல் என்பது நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளால் கைவல்மகடூஉத் தனது செய்கை நலம் தோன்ற ஓரிலைப்படுத்தலாம். உலகத்து நூல்நூற்றல் என்பது அவ்வாறே சுகிர்ந்து பரந்த சொற்பரவைகளால் பெரும்புலவன் தனது உணர்வுமாட்சியில் பிண்டம், படலம் ஓத்துச் சூத்திரம் என்னும் யாப்பு நடைபடக் கோத்தல் ஆயிற்று. நூல் செய்தலாவது; அவ்வகை நூற்கப்படுதலின் நூல் எனப்பட்டது” (இறையனார் அகப்பொருள் – நூ. எ. 1 உரை) என்று நக்கீரர், பெண் ஒருத்தி பஞ்சில் நூல் நூற்றலையும், புலவர் செய்யுளியற்றலையும் ஒப்புமைப்படுத்தி இரண்டும் நூலே என்கிறார்.
இதுவன்றியும் பவணந்தி முனிவர்,
“பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா – எஞ்சாத
கையே வாயாகக் கதிரே மதியாக
மையிலா நூல்முடியும் ஆறு” (நன்னூல் நூ. 24)
என்று நூல் என்பதற்குப் பெயர்க்காரணம் கூறுகிறார்.
தன்சொற்கள் பஞ்சாகவும், செய்யுள் நூல் இழையாகவும், சிறந்த சொற்களை அறிந்த புலவன் நூற்கின்ற பெண்ணாகவும், குறையாதவாய் கையாகவும், அறிவு கதிராகவும் குற்றமில்லாத கல்வி நூலானது முடியும் வழி இது என்பது இதன் பொருள்.
எனவே நூல்போன சங்கிலி என்பது பருத்தி நூலாலான மங்கல நாணைக் குறிக்காமல் நூல் கற்றுத் துறைபோன (கற்றுத் தேர்ந்த) சங்கிலி என்ற பொருளை மட்டுமே உணர்த்தும் என்பது பெறப்படுகிறது. கற்றுத்துறை போவதனை நுண்மாண்நுழைபுலம் (திருக்குறள் 407) என்பார் திருவள்ளுவர். மேலும் சங்கிலியார் கற்ற நூல்கள் சிவஞான நூல்களாம். வணங்கும் ஈசர் திறம் அன்றி வார்த்தை அறியாள் மற்றொன்றும் (பெரியபுராணம்3376) எனச் சேக்கிழார் கூறியுள்ளமை கொண்டு இதனை உணரலாம்.