கால காலன்

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

மக்கள் வாழ்க்கையில் பிறப்பும் இறப்பும் மாறிமாறி வருவன. பிறப்புண்டேல் இறப்புண்டு என்பது நியதி. பிறத்தல் பெற்றெடுக்கும் தாய்க்கே துன்பம். இறத்தல் இறப்போர்க்கே துன்பம். ‘சாதலின் இன்னாதது இல்லை’ என்பர் திருவள்ளுவர். ‘சாதலும் புதுவது அன்றே’ என்பர் புறநானூற்றுப் புலவர்.

1. நற்பேறு, 2. இழத்தல், 3. இன்பம், 4. பிணி, 5. மூப்பு, 6. இறத்தல் ஆகிய ஆறும் கருவினுள்ளே அமைந்தவை. ‘பேறு இழவு இன்பமோடு பிணி மூப்புச் சாக்காடு என்னும் ஆறும் முன் கருவுற்பட்டது’ என்பது சிவஞான சித்தியார் ஆகும். இறத்தலை யாராலும் வெல்ல இயலாது. முயற்சியால் தெய்வ வழிபாட்டால் இறத்தலை வெல்ல முடியும் என்பது மார்க்கண்டர் வரலாறு ஆகும்.

புராண வரலாறு

மிருகண்டு முனிவர்க்கு நெடுநாட்களாகப் புதல்வற் பேறு இல்லை. மனைவியுடன் சேர்ந்து மக்கட் பேறு வேண்டிச் சிவபெருமானை நோக்கித் தவஞ் செய்தார்.

“தீங்குறு குணமே மிக்குச் சிறிதும் மெய்யுணர்விலாமல்
மூங்கையும் வெதிருமாகி முடமுமாய் விழியின்றி
ஓங்கிய ஆண்டு நூறும் உறுபிணி உழப் போனாகி
ஈங்கொரு புதல்வன் தன்னை ஈதுமோ மாதவத்தோய்”
 (மார்க்கண்டேயப் படலம், கந்தபுராணம்)

பெரிய தவத்திற் சிறந்தவரே! தீய குணமே மிகுந்து, சிறிது கூட மெய் அறிவு இல்லாமல் ஊமை, செவிடு, முடம், குருடு உடையவனாகி நூறு வயது நோயில் துன்பப்படும் புதல்வன் ஒருவனைத் தரலாமா?

“கோலமெய் வனப்பு மிக்குக் குறைவிலா வடிவம் எய்தி
ஏலுறு பிணிகள் இன்றி எமக்கும் அன்புடையோன் ஆகிக்
காலம் எண்ணிரண்டே பெற்றுக் கலைகள் பயின்றுவல்ல
பாலனைத் தருதுமோ நின் எண்ணம் ஏன் ? பகர்தீ”
 (மார்க்கண்டேயப் படலம், கந்தபுராணம்)

‘நல்ல அழகுள்ள உடம்பு, உறுப்புக்களில் குறைபாடின்றி நல்ல வடிவம், நோய்கள் இல்லாத நிலை, சிவனாகிய எம்மிடத்தில் அன்பு, பதினாறே வயது, பலகலைகளையும் பயின்ற அறிவு ஆகியவற்றையுடைய பாலனைத் தரலாமா? உன்னுடைய எண்ணம் என்ன? சொல்வாய்?’ என்று இறைவன் கேட்டான் .

‘அறிவுடைய மகனே வேண்டும்’ என்றனர். சிவபெருமான் அவ்வாறே அருள்பாலித்தார். பிறந்த குழந்தைக்கு மார்க்கண்டேயன் எனப் பெயரிட்டனர். அனைத்திலும் சிறந்து விளங்கிய மார்க்கண்டேயனுக்கு வயது பதினாறு ஆயிற்று. பெற்றோர் வருந்திக் கண்ணீர் விட்டனர். உண்மையுணர்ந்த மார்க்கண்டேயன் பெற்றோரிடம் விடைபெற்றுச் சென்று சிவலிங்க பூசை மேற்கொண்டான்.

உரிய ஆயுள் முடிவில் கூற்றுவன் வந்து அழைத்தான். சிவபெருமான் தன்னையே தஞ்சமாகக் கொண்டு சிவலிங்கத்தை பற்றிக் கொண்டார். பற்றியிருந்த இலிங்கத்தோடு பசத்தாற் பிணைத்துக் கூற்றுவான் இழுத்தான். இலிங்கத்தினின்று இறைவன் வெளிப்பட்டு இடக்காலால் கூற்றுவனை உதைத்துத் தள்ளினார். மார்க்கண்டேயரை என்றும் பதினாறு ஆண்டாக இருக்க அருள்செய்து மறைந்தார்.

மூவர் அருளிய தேவாரப் பாடல்களிலும் பிற திருமுறைகளிலும் மார்கண்டேயருக்காக கூற்றுவனை உதைத்த செய்திகள் விரிவிக் காணப்படுகின்றன.

“...மலரவைகொடு வழிபடுதிறல் மறையவன் உயிரதுகொளவரு
சலமலிதரு மறலிதன் உயிர்கெட உதை செய்தவன்”

“வழிபாடு செய்யலுற்றவன் ஓங்குயிர்மேல் கன்றிவருகாலன் உயிர்
கண்டு அவனுக்கு அன்றளித்தான்”

“பதத்தெழு மந்திரம் அஞ்செழுத்தோதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணிதன் இன்னுயிர் உண்ணவெகுண்டு அடர்த்த
கதத்தெழு காலனை... உதைத்தெழு சேவடியான்!”

“அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது
காரணமாக வந்த காலன் ஆருயிர் அதனை வவ்வினாய்”

முதலிய தேவாரத் தொடர்கள் காலனைக் காய்ந்த கருத்தைக் காட்டுகின்றன.

நடந்தது எங்கே?

இறைவன் செய்த வீரச் செயல்கள் எட்டனுள் கூற்றுவனை உதைத்தது. எட்டுச் செயல்களும் தமிழகத்தில் நடந்ததாகவே பழம் பாடல் குறிப்பிடுகின்றது. திருக்கடவூரில் கூற்றுவனை உதைத்தாகவே தேவாரப் பாடல்களும் குறிப்பிடுகின்றன. வாழ்வில் எமனை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்திலேயே இன்றும் அறுபதாம் ஆண்டுத் திருமணம் திருக்கடவூரில் அனைவரும் நடத்தி வருகின்றனர். ‘காலனைக் காய்ந்தது ஞாலக் கடவூர்’ என்று திருமூலரும் பாடியுள்ளார்.

வடநாட்டில் உள்ள காசியில், கங்கை நதிக்கரையில் உள்ள மணிகண்ணிகைத் துறையில் நடந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. தலத்திற்க்குப் பெருமை சேர்க்கும் பொருட்டு அவ்வாறு பாடுவது உண்டு.

உருவ அமைப்பு

சிவலிங்கம் முன் அமைந்திருக்கக் சிவலிங்கத்தையொட்டி இறைவன் தோன்றிய நிலையில் உருவம். நின்ற கோலம், சடாமகுடம், நான்கு கைகள், மேல் இடக்கை மான், கீழ் இடக்கை வரதம், மேல் வலக்கை மழு, கீழ் வலக்கை அபயம், சிவலிங்கத்தின் பக்கத்தில் மார்க்கண்டேயர் வழிபாடு செய்யும் முறையில் இருகை கூப்பிய நிலையில் இருப்பார். மார்க்கண்டேயர் முகத்தில் அச்சம் இருக்கம். அவருக்குப் பக்கத்தில் காலன் எருமை வாகனத்தில் அமர்ந்து கொண்டு மார்க்கண்டேயர் மீது பாசத்தை வீசிப் பிடித்த நிலையில் இருப்பான். சில உருவங்களில் இறைவன் வலக்காலை ஊன்றி இடக்காலால் காலனை உதைக்கின்ற நிலை காணப்படும். இறைவன் கையில் திரிசூலம் நீண்ட வடிவில் காட்டப் பட்டிருக்கும். திருக்கடவூரில் மேற்கு நோக்கிய அமிர்த கடேசுவரர் திருக்ககோயிலில் தெற்கு நோக்கிய நிலையில் அமைந்த உருவம் மிகச் சிறந்தது. பெரும்பாலான இராய கோபுரங்களில் தென்புறத்தில் சுதை வேலைப்பாட்டில் உருவம் அமைந்திருக்கும்.

பயன்

காலனுக்குக் காலனாகிய இவ்வடிவத்தை வழிபட்டால், துன்பங்களைப் போக்கி அபயம் அளிப்பார். ‘எருமை ஊர்தி உயிர் குடித்த எறுழ்த்தாள் புலவர்கழல் பழிச்சில் பருவம் உடையார்க்கு இடர் பலவும் பாற்றி அபயங்கொடுத்தளிப்பார்’ என்பர் கச்சியப்ப முனிவர்.

தத்துவம்

திருமூலர், திருமந்திரத்தில் யோக நிலையில் வைத்து இதனைப் பாடியுள்ளார். மூலாதாரமகிய இடத்தில் அமைந்திருப்பது குண்டலினி சக்தி, அதனை மேலே உள்ள புருவ நடுவாகிய இடத்திற்கு எழுப்ப வேண்டும். அதற்காகப் பத்து வாயுக்களுள் பிராண வாயுவை சுழுமுனை நாடியின் அடியில் அசைவற நிறுத்த வேண்டும். அத்தகைய யோகப் பயிற்சியால், தனக்குடைய வாழ்நாளில் கடைசிக் காலத்துக் காலன் வாராமல் காக்கலாம். அவ்வாறு காத்த இடம் திருக்கடவூர் ஆகும்.

“மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்து மேலுற நோக்கிமுற்
காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கு யோகமாய்
ஞாலக்கடவூர் நலமாய் இருந்ததே”

என்பது திருமந்திரப் பாடலாகும். யோகப் பயிற்சியால் ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம் என்பது இதன் உண்மைப் பொருளாகும்.

தவம் செய்வார் உயர்ச்சியை கூற வந்த திருவள்ளுவர் ‘கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு’ என்று பாடியுள்ளார். நன்கு தவம் செய்யும் ஆற்றலைப் பெற்றோர் கூற்றுவனையும் வெல்ல முடியும் என்பது கருத்தாகும்.

Back to Top