இருவினை

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

தமிழ் இலக்கண இலக்கியங்கள் பக்திப்பனுவல்கள் ஆகியவற்றில் வினைபற்றிய செய்திகள் மிக்குள்ளன. தொல்காப்பியர் இலக்கணம் கூறுகின்ற முறையில் ஆங்காங்கே வினைபற்றிக் கூறியுள்ளார். வினைக்கு அடிப்படை எட்டுக் காரணங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். திருவள்ளுவர் “இருள்சேர் இருவினை” எனக் கடவுள் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார். மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் “இருவினை அறுத்து” (பா.எ.574), “இருவினை ஈடழித்து” (பா.எ. 559), என்று குறிப்பிட்டவர், “இருவினை மாமரம்” (பா.எ.90), என்றும் உருவகம் செய்துள்ளார்.

சங்ககாலப் புலவர் பலர் இருவினையை ஆங்காங்குப் பாடியுள்ளனர். கோப்பெருஞ்சோழனைப் பாடிய புல்லாற்றூர் எயிற்றியனார் புறநானூற்றில் இருவினை பற்றி விரிவாகப் பாடியுள்ளார். மலம் மிக்க உள்ளத்தை உடைய தெளிவில்லாதவர்கள் நல்வினையைச் செய்யலாமா? செய்யக்கூடாதா? என்ற ஐயம் நீங்கமாட்டார். யானை வேட்டைக்குச் சென்றவன் யானையை எளிதாகப் பெறுவான். குறும்பூழ் (காடை, கௌதாரி) வேட்டைக்குச் சென்றவன் அப்பறவை கிடைக்காமல் வீணே திரும்புவதும் உண்டு. உயர்ந்த விருப்பத்தை உடைய பெரியோர்க்கு அவர்கள் செய்த வினைகளில் நல்வினை இருந்தால் அவ்வினை காரணமாக மேல் உலகத்தில் பேரின்பம் அனுபவிப்பர். நல்வினை இல்லாவிட்டால் மீண்டும் உலகத்தில் பிறப்பர். மீண்டும் பிறவாத நல்வினை இருந்தால் இமயமலையின் உச்சியைப் போல் புகழை நிலைநிறுத்தி இவ்வுலகைவிட்டு உயிர்நீப்பர்.

“செய்குவம் கொல்லோ நல்வினை எனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கில் எய்தல் உண்டெனில்
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்
மாறிப்பிறப்பின் இன்மையும் கூடும்
மாறிப்பிறவா ராயினும் இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே”
 (புறம் – 214)

கசடீண்டு காட்சி – அழுக்குச் செறிந்த காட்சி என்பது பழைய உரை. அழுக்கு ஆணவ மலமே. தொய்யா உலகம் – சுவர்க்கம். மற்றைய உலகங்கள் தொய்வு உடையன. சுவர்க்கம் என்றும் தொய்வு இல்லாதது. நுகர்ச்சி – அனுபவித்தல், இமயத்துக்கோடு – இமயமலையின் சிகரம். தம்மிசை – தம்முடைய புகழ். தம்மிசை நட்டு – தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே – புறநானூறு. மாய்தல் தவத்தலையே – இறத்தல் மிகவும் தலைமையானது. புறநானூற்றுப் பழைய உரையில் இப்பாட்டின் நிறைவுக் கருத்தாக, அதனால் எவ்வாற்றானும் நல்வினை செய்தல் அழகிது என்று குறிப்பிடப்பெற்றுள்ளது.

சிவஞான சித்தியாரில் இருவினை பற்றித் தடைவிடையாகச் செய்திகள் வருகின்றன. முற்பிறவிகளில் செய்த புண்ணிய பாவங்களின் பயனாக இன்பத்துன்பங்களை நுகரும் பொருட்டு உயிர் இவ்வுலகில் பிறந்திறந்து வருகின்றது. என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாத உலோகாயதன் இன்பத்துன்பங்களுக்கு இருவினை காரணம் என்பது எவ்வாறு பொருந்தும்; இன்பத் துன்பங்கள் உடலுக்கு இயல்பாக உள்ளன ஆகும் என்று தடை எழுப்பினான்.

இயல்பு என்றால் இயல்புக்கு ஒரு தன்மையே இருத்தல் வேண்டும். அவ்வாறில்லாமல் இன்பத்துன்பமென்ற மாறுபட்ட இருதன்மை வருவதற்குக் காரணம் வேண்டுமே என்று உலோகாயதனுக்கு மறுப்புக் கூறப்பெற்றது. உடனே உலோகாயதன் பூவும் தீயும் நீரைப் பொருந்தினால் வாசனை, சூடு நீருக்கு உண்டாகின்றன. அவை இயல்பாகும். அதுபோல் இன்பமும் துன்பமும் உடலுக்கு இயல்பாகத் தோன்றும் என்றான்.

பூவும், தீயும் நீருக்குப் பொருந்தின போது நீரின் தட்பத்தன்மை நீங்கி வாசம், சூடு ஆகிய இரண்டு செயற்கைத் தன்மை உண்டாகின்றன. அதுபோல் நல்வினை தீவினை காரணமாக இன்பமும் துன்பமும் உயிரைப் பொருந்துமே அன்றி உடலைப் பொருந்தா என்று விடை கூறப்பெற்றன.

அதனை கேட்ட உலோகாயதன் இன்பதுன்பங்களுக்கு இருவினை காரணமன்று. முயற்சியும், முயற்சி இன்மையுமே காரணம் ஆகும். முயற்சி உள்ளவர் பொருளீட்டி இன்பம் அனுபவிப்பர். இருவினை காரணம் என்றால் முயற்சி இல்லாமலே பொருள் வந்து சேர வேண்டுமே என்று தடை எழுப்பினான்.

இம்மையில் பொருளீட்டி இன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் இடையறாது முயற்சி செய்தாலும் தளர்வு உண்டாகிறது. தளர்வில்லாமல் முயற்சி செய்தாலும் பொருள் சேராமல் போகின்றது. அதனால் துன்பமும் உண்டாகின்றது.

ஒரு முயற்சியும் செய்யாமல் இருந்தாலும் சிலருக்கு நல்வினை காரணமாகச் செல்வம் வந்து சேர்கின்றது. சிவஞானமுனிவர் “ஒருவினை செய்யாதோரும் உடையராதல் கிழியீடு நேர்படப் பெற்றார் முதலாயினார் மாட்டுக் காணப்படும்” என்று குறித்துள்ளார். கிழீயீடு – புதையல், தற்காலத்தில் பரிசுச்சீட்டில் பெருந்தொகை கிடைத்தல் போன்றதாகும்.

இதனையே புறநானுறு யானை வேட்டுவன் யானையும் பெறுமே என்றும் குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே என்றும் கூறுகிறது. நல்வினை தீவினை பொன் விலங்கும் இரும்புவிலங்கும் போன்றதாகலின் இருவினையும் நீக்கப்பெற வேண்டும். இருள்சேர் இருவினை என்ற குறளுக்குப் பரிமேலழகர் மயக்கத்தைப் பற்றிவரும் நல்வினை தீவினை என்று உரை எழுதியுள்ளார்.

இத்தகு கருத்து அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு மணிவாசகப் பெருமான் “இருவினை அறுத்து” என்றும் “இருவினை ஈடழித்து” என்றும் ஆழமான பொருள்பொதிய மெய்ப்பொருளை மெய்யுணருமாறு சுருங்கச் சொல்லி விளங்க வைத்துள்ளார்.

Back to Top