தில்லையுள் கூத்தன்

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

“தத்துவம் ஆடச் சதாசிவம் தானாடச்
சித்தமும் ஆடச் சிவசத்தி தானாட
வைத்த சராசரம் ஆட மறையாட
அத்தனும் ஆடினான் ஆனந்தக் கூத்தே”
 (திருமந்திரம்).

“தில்லைமூதூர் ஆடிய திருவடி” என்று மாணிவாசகப் பெருமான் கீர்த்தித் திருவகலைத் தொடங்கியுள்ளார். தில்லையை மூதூர் என்று குறிப்பிட்டுள்ளார். தில்லை, சிற்றம்பலம், புலியூர், பெரும்பற்றப்புலியூர், பொற்புலியூர், தில்லையூர், கோயில் எனக் கல்வெட்டுக்களில் பலவாறாகக் குறிக்கப்பெறுகின்றன.


அந்நாளில் தில்லைக்குச் சிதம்பரம் என்ற பெயர் கிடையாது. பிற்காலத்தில் தான் அங்குள்ள சிற்றம்பலம் சிறம்பலம் எனச் சிதைந்து பின் சிதம் பரம் எனத் திரிந்தது. அதன் வரலாறு அறியாத வடமொழியாளர் சித்+அம்பரம் எனப் பிரித்துச் சிதாகாசம் என்பது முதலிய பலகருத்துக்களைப் புகுத்து உரைப் பாராயினர். இவ்வாறே பிற்காலத்தில் தமிழ்ப் பேரூரும் சிற்றூரும் ஆகிய பலவும், தமிழர் தமது வரலாறு மறந்த அற்றம் நோக்கி வடமொழிப் பெயர் பெற்று வழுமலிந்த கற்பனைக் கதைகட்கு இடமாகிக் கல்விகற்கும் இளைஞர் உள்ளத்தில் சமய உணர்வும் பற்றும் தோன்றாத செயன் முறைகளை மேற்கொண்டு நிற்பவாயின” (சித்தாந்த கலாநிதி, பேராசிரியர் ஒளவை, சு. துரைசாமி பிள்ளை - சைவ இலக்கிய வரலாறு - கி.பி. 7 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை - பக்கம் 160).

தில்லை

தில்லை மரங்கள் மிக்கிருந்ததால் தில்லைக் காடு, தில்லைவனம் என்ற பெயர் ஏற்பட்டது. அம்பலம் - சபை, தில்லைக் கோயிலில் ஐந்து சபைகள் உள்ளன.

1. தற்காலத்தில் கூத்தப்பெருமான் வீற்றிருந்து அருள் புரியும் இடம் - ஞானசபை, சிற்றம்பலம்.

2. ஆயிரங்கால் மண்டபம் - அரச சபை

3. ஞானசபைக்கு முன் உள்ள பகுதி - பொற்சபை

4. கூத்தப்பிரானின் கொடி மரத்திற்கண்மையில் உள்ள பகுதி நிருத்த சபை

5. இன்றைய தேவசபை பேரம் பலம்.

“நிறைவெண் கொடிமாடம் நெற்றி நேர்தீண்டப்
பிறைவந்து இறைதாக்கும் பேரம்பலம் தில்லைச்
சிறைவண்டு அறையோவாச் சிற்றம் பலம்மேய
இறைவன் கழலேத்தும் இன்பம் இன்பமே.”

என்று திருஞானசம்பந்தர் பேரம்பலம், சிற்றம்பலம் ஆகிய இரண்டு அம்பலங்களையும் குறிப்பிட்டுள்ளார்.

புலியூர்

வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவருடன் தில்லையில் தவம் புரிந்தார். வைகறையில் எழுந்து வழிபாட்டுக்காகப் மரங்களில் ஏறிப் பூப்பறிப்பார். மழை, பனி ஆகியவற்றால் மரத்தில் கால் வழுக்காமல் இருக்கவும், பற்றவும் புலியின் கால்களையும், இருட்டில் நல்ல மலர்களைக் கண்டு பறிக்கவும் விரல்களின் நுனியில் கண்களையும் பெற்றார். இறைவனிடம் வேண்டிப் புலியின் கால்களைப் பெற்றதால் புலிக்கால் முனிவர் என்ற பெயர் ஏற்பட்டது. அவர் வழிபட்டதால் புலியூர் என்ற பெயர் உண்டாயிற்று. புலி - வடமொழியில் வியாக்கிரம். புலிக்கால் முனிவர் வடமொழியில் வியாக்கிரபாதர் ஆனார். பெருமை - வீடுபேறு (நச்சினார்க்கினியர் உரை, கச்சியப்பமுனிவர் பேரூர்ப் புராணம்). பெருமையாகிய வீடுபேறு பற்றுதற்குரிய ஊர் பெரும்பற்றப் புலியூர்.

“புலியூர்ப்புக்கு இனிது அருளினன்” - கீர்த்தித்திருவகவல் இறைவன் கயிலையைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். ஆயினும் அதைவிட இனிய இடமாகத் தில்லையைக் கொண்டான். எனவே புலியூர்ப்புக்கு இனிது அருளினன் என்றார். கயிலை வீட்டின்பம் நுகரும் ஆன்மாக்களுக்கே உரிய இடம் ஆதலின், இறைவனின் திருவைந்தொழில்களில் அருளல் ஒன்று மட்டுமே சிறப்பாக நிகழ்வது. ஆனால் தில்லை திருவைந்தொழில்கள் அனைத்துக்கும் உரிய ஐந்தொழில் நடனம் நிகழ்வது. அத்தொழில்கள் பல திறப்பக்குவமுள்ள ஆன்மாக்கள் அனைத்துக்கும் உரியன. அவை அனைத்தையும் உய்விப்பதால் இறைவன் இந்தப் பதியை உவந்தான் (சைவத்திரு. சி. சு. கண்ணாயிரம் - திருவாசகம் - விளக்கவுரை - சிவக்குடில் விளக்கம் - முற்பகுதி - பக்கம் 159).

பலவிதச் சிறப்புகளையுடைய கூத்தப்பிரான் செய்த நடனம் மிகத் தொன்மை வாய்ந்தது. சைவ சித்தாந்தக் கொள்கைப்படி இறைவன் கூத்துக் காலவரையறைக்கப்பாற்பட்டது. உயிர்களுக்கு அனாதி கேவல நிலை பிறப்புக்கு வருவதற்கு முன்பு உண்டு. ஆணவமலத்தால் முழுவதுமாக மறைக்கப்பட்டிருக்கும். அப்போது உயிர்கள் தம்மையும் அறியா. தம்மை மறைத்துள்ள ஆணவத்தையும் அறியா. பதியையும் அறியா. கருவிகரணங்கள் இல்லாமல் அறியாமையாகிய இருளில் எவ்விதச் செயலுமின்றிக் கிடைக்கும்.

“கேவலற் சொற்றிடின் நித்தன்
மெய்த்தகு குணமிலி, வியாபி, மொய்த்து
மலநனி புணர மறைவோன், இலன் எனைச்
செய்தியும் அறியோன், மையில் அமூர்த்தன்
வலியிலன், அசேதனன், ஒளியிலி, இறையலன்”

என்று ஞானாமிர்தம் ஆன்மாவின் அனாதி கேவல நிலையை குறிப்பிடுகின்றது.

அனாதி கேவலத்தில் உள்ள உயிர்களில் பிறப்புக்கு வரத்தகுதி வாய்ந்தவை உள்ளன. அனாதி கேவல நிலையில் உள்ள உயிர்கள் தனு, கரண, புவன, போகம் ஆகியவற்றை பெற திருவருள் துணை நிற்கின்றது. இத்தகைய நிலையில் உயிர்கள் படைப்புக்கு வரக் கூத்தப்பிரான் படைத்தல் தொழிற்கு நடனம் புரிய தொடங்குகின்றான். அந்த நடனம் இருளில் தொடங்குகின்றது. மாணிக்கவாசகப் பெருமான் “நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே” என்று இந்நடனத்தை பாடியுள்ளார். இந்த நடனம் எப்பொழுது தொடங்கியது என்று கால வரையறை கணக்கிட முடியாது. ஆதலால் இறைவன் நடனம் காலவரையறைக்கு வராத மிகத் தொன்மையானது, அனாதியானது.

நமக்குக் கிடைக்கக் கூடிய நூல்களில் தொன்மையானது தொல்காப்பியம் ஆகும். நாடக வழக்குத் தொல்காப்பியத்தில் சுட்டப்பெற்றுள்ளது. நாடகம், நாட்டியம், நடனம், கூத்து என்பன ஒன்றோடொன்று தொடர்புடையன. இவற்றின் இடையே வேறுபாடுகளும் உள்ளன. தொல்காப்பியப் புறத்திணை இயலில் முன்தேர்க்குரவை, பின்தேர்க்குரவை குறிப்பிடப் பெறுகின்றன. வென்ற வேந்தனின் தேரின் முன்னும் பின்னும் ஆடும் குரவைக் கூத்தாகும். சிலப்பதிகார அரங்கேற்றுக்காதையில் வென்றிக்கூத்து என்ற ஒன்று குறிப்பிடப்படுகின்றது. வென்ற வேந்தன் உயர்ச்சியையும், தோற்ற வேந்தன் தாழ்ச்சியையும் தாளத்திற்கு ஏற்பப் பாடும் முறையாகும்.இத்தகைய கூத்தை புறக்கூத்து என்றும் குறிப்பிடுவதும் உண்டு. வேந்து விலக்கு, படை விலக்கு, ஊர் விலக்கு முதலியவற்றோடு வென்றிக்கூத்தைச் சேர்த்து ஆடுவர். விலக்கு என்பது ஆடும் செய்தியினை அகலப்படுத்தி ஆடுவது ஆகும். விலக்கு உறுப்புக்கள் பொருள், யோனி, விருத்தி, சந்தி, சுவை, சாதி, குறிப்பு, சத்துவம், அவிநயம், சொல், சொல்வகை, வண்ணம், வரி, சேதம் எனப் பதினான்கு வகைப்படும் என்று அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார்.

வேதத்தியல், பொதுவியல் என்று இருவகைகளை இலக்கணங்களும் இலக்கியங்களும் குறிப்பிடுகின்றன. நாடாளும் வேந்தனுக்குமுன் ஆடுதல் வேதத்தியல் எனப்படும். பொதுமக்களுக்கு முன் ஆடுதல் பொதுவியல் எனப்படும். அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் இவற்றை தேசிக்கூற்று, மார்க்கக் கூத்து என்று குறிப்பிட்டுள்ளார். சாந்திக் கூத்து, விநோதக் கூத்து என்று அகத்தியனார் இரண்டாக வகைப் படுத்தியதாக அடியார்க்கு நல்லார் அறிவித்துள்ளார். ஆடுவோன் சாந்தமாக ஆடுவது சாந்திக் கூத்தாகும்.

நகைச்சுவை, அழுகைச்சுவை, இழிப்புச்சுவை, வியப்புச்சுவை, அச்சச் சுவை, பெருமிதச்சுவை, வெகுளிச்சுவை, மகிழ்ச்சிச் சுவை, சமநிலைச்சுவை என்ற ஒன்பது சுவைகளில் சமநிலை சாந்தம் எனப்படும். சாந்தம் உண்டாகுமாறு செய்யும் கூத்து சாந்திக் கூத்து ஆகும்.

சாந்திக் கூத்து 1) சொக்கம், 2) மெய், 3) அவிநயம், 4) நாடகம் என நால்வகைப்படும்.

1) சொக்கம்

சொக்கம் என்பது நிருத்தம் என்ற நாட்டிய வகையைக் குறிக்கும். இறைவன் ஆடிய நூற்றெட்டுக் கரணங்கள் சாந்திக் கூத்தின் வகையாகிய சுத்த நிருத்தத்தின் இனத்தைச் சார்ந்தவையாகும். தில்லைக் கோயிலிலும் தஞ்சைப் பெரிய கோயிலிலும் நூற்றெட்டுக் கரணங்கள் பற்றிய சிற்பங்கள் உள்ளன. தஞ்சைப் பெரியகோயில் கருவறையின் உட்பக்கத்து இரண்டாவது அடுக்கில் இச்சிற்பங்கள் நன்றாகச் செதுக்கப்பட்டுள்ளன. மற்றவற்றில் சிற்ப வேலைப்பாடுகள் முற்றுப் பெறவில்லை. இறைவனே நான்கு கைகளுடன் ஆடும் முறையில் சிற்பங்கள் அமைக்கப் பெற்றுள்ளன.

2) மெய்க்கூத்து

மெய்க்கூத்து என்பது தேசிக் கூத்து, வடுகக் கூத்து, சிங்களக் கூத்து என்று மூவகைப்படும். இராசதம், தாமதம், சாத்துவிகம் என்ற முக்குணத்தின் அடிப்படையில் ஆடப் பெறுவதாகும்.

3) அவிநயக்கூத்து

அவிநயக்கூத்து பாடற் பொருளுக்கேற்ப மெய்ப்பாட்டு அசைவுகளை உடலில் காட்டி ஆடுவதாகும். விலக்கு உறுப்புகள் பதினான்கில் அவிநயம் ஒன்றாகும். முப்பத்து மூன்று உணர்ச்சி வகைகளைக் காட்டும் முறையில் அமைந்திருக்கும். ஒன்பது மெய்ப்பாட்டுச் சுவைகளுடன் அமைந்திருக்கும். ஒன்பது மெய்ப்பாட்டுச் சுவைகளுடன் இருபத்து நான்கு சுவைகள் சேர்த்து முப்பத்து மூன்று எனக் குறித்தனர். 1) வெகுண்டோன் அவிநயம், 2) ஐயமுற்றோன் அவிநயம், 3) மடியுடையோன் (சோம்பல்) அவிநயம், 4) களித்தோன் அவிநயம், 5) உவந்தோன் அவிநயம், 6) அழுக்காறு உடையோன் அவிநயம், 7) இன்பமுற்றோன் அவிநயம், 8) தெய்வமுற்றோன் அவிநயம், 9) மயக்கமுற்றோன் அவிநயம், 10) சிந்தை உடன்பட்டோன் அவிநயம், 11) துஞ்சியவன் அவிநயம், 12) இன்துயில் உணர்ந்தோன் அவிநயம், 13) செத்தோன் அவிநயம், 14) மழையில் நனைந்தோன் அவிநயம், 15) பனியில் நடுங்குவோன் அவிநயம், 16) உச்சிப் பொழுதில் வந்தோன் அவிநயம், 17) நாணமுற்றோன் அவிநயம், 18) வருத்தமுற்றோன் அவிநயம், 19) கண் நோயுற்றோன் அவிநயம், 20) தலை நோயுற்றோன் அவிநயம், 21) நெருப்பிற்பட்டோன் அவிநயம், 22) குளிர்ச்சியுற்றோன் அவிநயம், 23) வெப்பமுற்றோன் அவிநயம், 24) நஞ்சுண்டோன் அவிநயம் ஆகிய அவிநயம் தோன்றுமாறு ஆடுதலாகும்.

4) நாடகம்

நாடகம் கதையுடன் சேர்ந்த நாட்டிய வகை ஆகும்.

விநோதக் கூத்து

1) குரவை 2) கலிநடம் 3) குடக்கூத்து 4) கரணம் 5) நோக்கு 6) தோற்பாவை என்று ஆறு வகைப்படும்.

1. குரவைக் கூத்து: எழுவர் அல்லது ஒன்பதின்மர் கற்கடகக்கை கோத்து ஆடுதல். சிலப்பதிகாரத்தில் வரும் ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை இத்தகைய குரவைக் கூத்தாகும்.

2. கலிநடம்: கழைக்கூத்து என்று வழங்கப் பெறுவது ஆகும்.

3. குடக்கூத்து: சிலப்பதிகாரத்தில் குறிக்கப் பெறும் பதினொரு வகை ஆடல்களில் ஒன்றாகும்.

4. கரணம்: தரையில் படுத்தும், கீழே பாய்ந்தும் ஆடும் வகை.

5. நோக்கு: அதிகமான சுமையுடன் ஆடும் ஆட்டமாகும்.

6. தோற்பாவை: தோலால் பாவைகளைச் செய்து ஆட்டுவிக்கும் ஆட்டம்.

மரப்பாவை நாணால் உயிர் மருட்டி யற்று (குறள் 1020) மரத்தால் செய்த பாவை கயிற்றினானாய தன்னியக்கத்தால் உயிருடைத்தாக மயக்கினாற் போலும் (பரிமேலழகர்).

மரப்பாவை சென்று வந்தற்று (குறள் 1058) உயிரில்லாத மரப்பாவை எந்திரக் கயிற்றால் சென்று வந்தது போலும் (பரிமேலழகர்).

கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப்பாவை (குறுந்தொகை - 8) ஆடி வந்த நற்பாவை போலடியார் கூட விளையாடி வந்த கோமானே (தமிழ்விடுதூது) ஆகியன தோற்பாவைக் கூத்தின் தன்மையை அறிவிப்பன.

சிலப்பதிகாரத்தில் பதினொருவகை ஆடல்கள் குறிக்கப் பெறுகின்றன. புகார் நகரில் இந்திர விழா நடைபெற்றது. வானுலகத்தவரும் இந்திர விழாக் காணப் புகார் நகர்க்கு வந்தனர். இந்திர விழாவின் இறுதி நாளில் அனைவரும் கடல் நீர் ஆடச் சென்றனர். கடல் ஆடுகாதை - கடல் நீராட்டை விரிவாகச் சொல்லும் பகுதி.

இமயமலையில் பங்குனித்திங்களில் மன்மதனுக்கு விழா எடுத்தனர். அவ்விழாவைக் காண வந்த வித்தியாதரன் ஒருவன் தன் காதலியுடன் புகார் நகர்க்கு வந்தான். அந்த வித்தியாதரன் தன் காதலிக்குக் கூறும் முறையில் மாதவி பிறப்பு வரலாறு, ஆடிய பதினொரு ஆடல்கள் கடலாடு காதையில் பாடப் பெற்றுள்ளன.

1. கொடு கொட்டி ஆடல்

“பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்”


ஊர்த்துவ தாண்டவர் - கல்சிற்பம், திருப்பேரூர், கோவை.

சிலப்பதிகாரம் நடுகற்காதையில் கொடுகொட்டி ஆடலை இளங்கோவடிகள் மீண்டும் குறிப்பிட்டுள்ளார். செங்குட்டுவன் வடநாட்டு மன்னர் பலரையும் வென்று கண்ணகிக்கு இமயமலையிலிருந்துக் கொணர்ந்த கல்லை நட்டுக் கடவுள் மங்கலம் (குடநீராட்டு) செய்த காதை நடுகற்காதையாகும். வஞ்சி நகரில் மனைவி வேண்மாளுடன் செங்குட்டுவன் கூத்துக்காண அமர்ந்துள்ளான். வேதங்களில் வல்ல அந்தணர் வாழ்ந்த பறையூரிலிருந்து வந்த சாக்கைக் கூத்தாடுவோன் கூத்தாடத் தொடங்கினான். சிவனும் உமையும் சேர்ந்த பெண்ணொருபாகன் வேடத்தைச் சாக்கைக் கூத்தாடுவோன் ஒருவனே கட்டுகின்றான். வலப்பக்கம் சிவனுக்குரிய முறையில் ஒப்பனை, இடப்பக்கம் அம்மைக்குரிய ஒப்பனை என்ற முறையில் ஆடை, அணிகலன்கள் அணியப்பெற்றன.முப்புரம் எரித்த காலத்தில் இறைவன் வெற்றிக் களிப்பினால் ஆடிய தாண்டவம். முப்புரம் எரித்த தாண்டவம் என்றும், எரித்த வரலாற்றை அமைத்து ஆடும் தாண்டவம் என்றும் சிலர் கூறுவர். அது பொருந்தாது, எரித்த தாண்டவம் எனின் முப்புரம் எரித்தற்குத் தாண்டவமே காரணம் ஆதல் வேண்டும். அங்ஙனம் ஆகாமையின் அது பொருந்தாது. கதையை அமைத்து ஆடிய தாண்டவமாயின் அது நாட்டிய நாடகமேயன்றித் தாண்டவம் ஆகாது. ஆகவே அங்ஙனம் பொருள் கொள்ளல் ஆகாது. இதனைக் கொடு கொட்டி என்றும், கொட்டிச்சேதம் என்றும் சங்க நூல்கள் சொல்லும். திரிபுரம் எரிய, தேவர்கள் வேண்ட உமையவள் ஒரு திறனாகச் சிவபெருமான் ஆடிய வீரநடனம் என்று சிலப்பதிகாரம் சொல்லுகிறது. அதற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் சயாநந்தத்தால் கைகொட்டி நின்று ஆடிய கூத்து கொடுகொட்டி என்பர். மேலும் அதற்கு விளக்கந்தர வந்தவர் திரிபுரம் தீமடுத்து எரியக்கண்டு அதற்கு இரங்காது கைகொட்டி ஆடுதலின் கொடுகொட்டியாயிற்று எனவும் கூறுவர். இதனால் வென்றிக் கூத்தாதல் காண்க. (சைவத்திரு ச. தண்டபாணி தேசிகர் - திருவாவடுதுறை ஆதினம், ஆடல்வல்லான், பக்கம் 136).

இறைவன் வடிவம் கொண்ட வலப்பக்கத்தில் காலில் அணிந்த அழகிய வீரக்கழல் ஒலித்தது, வலக்கையில் உள்ள பறை முழங்கிற்று, வலக்கண் சிவந்து ஆயிரவிதக் குறிப்புகளைக் காட்டிற்று, சிவந்த சடைமுடி விரிந்து திசைகளில் அசைந்தது.

உமாதேவி வடிவம் கொண்ட இடப்பாகத்தில் காலில் உள்ள பாடகம் என்ற காலணி அசையவில்லை. இடக்கையில் உள்ள கைவளை ஒலிக்கவில்லை. இடையிலணிந்த மேகலை ஒலிக்கவில்லை. மென்மையான கொங்கை அசையவில்லை. காதிலணிந்த குழை ஆடவில்லை, அழகிய கூந்தல் அவிழவில்லை. இவ்வாறு உமையவள் இடப்பாகமாக இறைவன் ஆடிய கொட்டிச் சேதம் என்ற ஆடலைச் சாக்கையன் ஆடினான். செங்குட்டுவன் கண்டு மகிழ்ந்து வேத்தியல் மண்டபம் அடைந்தான்.

“திருநிலைச் சேவடி சிலம்புவாய் புலம்பவும்
பரிதரு செங்கையில் படுபறை ஆர்ப்பவும்
செங்கண் ஆயிரம் திருக்குறிப்பு அருளவும்
பாடகம் பதையாது சூடகம் துளங்காது
மேகலை ஒலியாது மென்முலை அசையாது
வார்குழல் ஆடாது மணிக்குழல் அவிழாது
உமையவள் ஒருதிறன் ஆக ஒங்கிய
இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்
பாத்தரு நால்வகை மறையோர் பறையூர்க்
கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்தவன்
ஏத்தி நீங்க இருநிலம் ஆள்வோன்
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர்”

2. பாண்டரங்கம்

“தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண் டரங்கமும்”

இதுவும் திரிபுர தாண்டவந்தான், திரிபுரசங்கார காலத்துத் தேரோட்டிய பிரமன் காண, பாரதி வேடந்தாங்கி இறைவன் தேர்த்தட்டின்முன் நின்று ஆடினார். இதுவும் வென்றிக் கூத்தே. போர்க் கூத்தன்று. இதனைப் பற்றிய நிகழ்ச்சிக் குறிப்புகள்,

“ஏறமர் கடவுள் மூவெயில் எய்வுழி
கூறு கூறாகக் கொடியொடும் படையொடும்
வேறு வேறுருவின் விண்மிசைப் பரந்தனர்
அவ்வழி ஒளியொடும் உருவொடும் தோன்றி
தேர்முன் நின்று திசைதலை பனிப்பச்
சுவையும் குறிப்பும் ஒழிவில தோன்றி
அவையவை அவ்வழி ஆடினன்”

என்ற உரைமேற்கோள் செய்யுட் பகுதி தெரிவிக்கும். ஆகவே இக்கூத்து இறைவன் பாரதியின் வேடந்தாங்கித் தம் சாரதியாகிய பிரமன் களிப்ப ஆடியது என்பது போதரும் (ஆடவல்லான், பக்கம் 137).

3. அல்லியம்

“கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சண வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியந்தொகுதியும்”

ஆனையாக வந்த கம்சனைக் கொல்வதற்காகக் கண்ணன் ஆடிய ஆடல். கண்ணனால் ஆடப் பெற்ற ஆடல் அல்லியம் ஆகும்.

4. மல்லாடல்

“அவுணன் கடந்த, மல்லின் ஆடலும்”

திருமால் ஆடியது, வாணாசுரனை மற்போர்க்கு அழைத்து அவனை அழித்ததும் கண்ணன் ஆடிய ஆடலாகும்.

5. துடிக்கூத்து

“மாக்கடல் நடுவண்,
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்து முன்நின்ற
சூர்த்திறம் கடந்தோன் ஆடியதுடியும்”

முருகப்பெருமானால் ஆடியது துடிக் கூத்தாகும். கடலில் மாமரமாக மாறி நின்ற சூரபன் மாவை அழித்தபின் துடி என்ற கருவியை ஒலித்துக் கடலலைகளை மேடையாக்கி முருகப்பெருமான் ஆடியது.

6.குடைக்கூத்து

“படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்”

முருகப்பெருமான் தன் கொற்றக் குடையைத் திரையாக்கி ஆடிய ஆடல் குடைக் கூத்தாகும். அரக்கர்களோடு முருகப்பெருமான் நடத்திய போரில் அரக்கர்கள் போர்க்கருவிகளை இழந்து நின்றனர். அப்போது குடையினைச் சாய்த்து முருகப்பெருமான் ஆடியது.

7. குடக்கூத்து

“வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்”

குடங்களை இரண்டு தோள்களின் மேல் வைத்து ஆடுவது குடக்கூத்து ஆகும். வாணன் தன்மகள் உசையின் காதலை நிறைவேற்றுவதற்காகக் காமனின் மகன் அநிருத்தனைச் சிறைப்பிடித்தான். அந்த அநிருத்தனை மீட்பதற்காக வாணனின் சோ என்ற நகரில் திருமால் ஆடிய ஆடல் குடக் கூத்தாகும். குடக்கூத்தின் மாற்றமும் வளர்ச்சியுமே இன்றைய கரகாட்டமாகும்.

8. பேடி ஆடல்

“ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்”

வாணாசுரனால் சிறை வைக்கப்பட்ட அநிருத்தனை மீட்பதற்காக அநிருத்தனுடைய தந்தையான காமன் பேடு உருவங்கொண்டு ஆடியது பேடி ஆடல்.

9. மரக்கால் ஆடல்

“காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்”

அரக்கர்கள் பாம்பு, தேள் முதலிய உருவங்களில் தங்களை மாற்றிக்கொண்டு கொற்றைவையுடன் போர் செய்தனர். அப்போது கொற்றவை அவை கடித்து விடாதபடி தன் கால்களில் உயரமாக மரக்கால்களைக் கட்டிக் கொண்டு ஆடிய ஆடல் ஆகும். உயரமாக மரக்கால்களைக் கால்களில் கட்டிக் கொண்டு ஆடும் வழக்கம் இன்று சிலவிடங்களில் நடைமுறையில் உள்ளது.

10. பாவை ஆடல்

“செருவெங் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்”

பாவை ஆடல் திருமகளால் ஆடப்பெற்றது. அரக்கர்களை மயக்கி அழிக்கும் எண்ணத்தில் திருமகள் தன் வடிவினைக் கொல்லிப்பாவைபோல் மாற்றிக் கொண்டு ஆடிய ஆடல் ஆகும்.

11. கடையம்

“வயலுழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்”

கடையம் என்பத் இந்திராணியால் ஆடப் பெற்ற ஆடலாகும். வயலில் உழவு செய்கின்ற உழவர்பெண் வேடத்தில் இந்திராணி வாணாசுரன் என்ற அரக்கனுடைய சோ என்ற நகரின் வடக்கு வாயிலில் ஆடியது.

இத்தகைய பதினொரு ஆடல்களிலும் மாதவி வல்லவள் என்று வித்தியாதரன் தன் காதலிக்குக் காட்டினான் என்று கடலாடு காதையில் இளங்கோவடிகள் பாடியுள்ளார். பதினொரு ஆடல்களில் கொடுகொட்டி, பாண்டரங்கம் சிவபெருமான் ஆடியவை ஆகும்.

சங்க இலக்கியங்கள் எட்டுத்தொகை நூல்களில் கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையும் ஒன்று. நெய்தற்கலியைப் பாடிய நல்லந்துவனார் கலித்தொகைக்குக் கடவுள் வாழ்த்தும் பாடியுள்ளார். அதில் இறைவன் ஆடிய ஆடல்களில் கொடுகொட்டி, பாண்டரங்கம் ஆகிய இரண்டையும் நல்லந்துவனார் பாடியுள்ளார்.

“ஆறறி யந்தணர்க்கு அருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக்கரந்து திரிபுரம் தீமடுத்துக்
கூறாமற் குறித்தன்மேற் செல்லுங்கடுங்கூளி
மாறாப்போர் மணிமிடற்று எண்கையாய் கேளினி!”

“படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்து நீ
கொடுகொட்டி ஆடுங்கால் கோடுயர் அகல்குறிக்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ?”

“மண்டமர் பலகடந்து மதுகையால் நீறணிந்து
பண்டரங்கம் ஆடுங்கால் பணையெழில் அணைமென்தோள்
வண்டரற்றும் கூந்தலாள் வளர்தூக்குத் தருவாளோ?”

“கொலையுழுவைத் தோலசைஇக் கொன்றைத்தார் சுவற்புரளத்
தலையங்கை கொண்டுநீ கபாலம் ஆடுங்கால்
முலையணிந்த முறுவலாள் முற்பாணி தருவாளோ?”

எனவாங்கு

“பாணியும் தூக்கும் சீருமென்றிவை
மாணிழை அரிவை காப்ப
ஆனமில் பொருளெக்கு அமர்ந்தனை யாடி”

பாடற்பொருள்

இறைவன் அந்தணர்க்கு ஆறு அங்கங்களையும் வேதங்களையும் அருளிச் செய்தவன், தெளிந்த கங்கையின் வேகத்தைச் சடையின் ஒரு சிறு பகுதியில் அடக்கியவன், முப்புரத்தைத் தீக்கு இரையாக்கியவன், வாக்குமனத்துக்கு எட்டாதவன். கடிய கூற்றுவனைப்போரில் வென்றவன், நீலமணி போன்ற கழுத்தை உடையவன், எட்டுக்கைகளை உடையவன். இவ்வாறு எல்லாம் காணுமாறு வடிவங்கொண்டவனே! நாங்கள் கூறுவதைக் கேட்பாயாக.

நின்னுடைய கையில் உள்ள பறை பலவித ஒலிகளை ஒலிக்கின்றது. கண்ணால் காணுமாறு பலவித வடிவங்களைக் கொண்டுள்ளாய்! கொடிதாகிய கொட்டி என்ற கூத்தை நீ ஆடுகின்ற போது அகன்ற குறியை உடைய கொடியை ஒத்த இடையை உடைய உமாதேவி நின்னுடை ஆட்டத்துக்கேற்ற தாளத்தின் வகையான சீரைத்தருவாளா?

மிக்குச் செல்கின்ற போர்களில் முப்புரங்களை வென்று, அந்த வலிமையாலே வெந்து வீழ்ந்த நீற்றை அணிந்த பாண்டரங்கம் என்னும் பெயர் பெற்ற கூத்தை நீ ஆடுகின்ற போது மூங்கிலின் அழகையுடைய மென்மையான தோள்களையுடைய உமாதேவி நின்னுடைய ஆட்டத்துக்கேற்ற தாளத்தின் வகையான தூக்கைத் தருவாளா?

கொலைத்தொழிலை உடைய புலியைக் கொன்று அதனுடைய தோலையுடுத்துக் கொன்றைப் பூவாலான மாலை தோளிலே அசைய பிரமன் தலையைக் கையில் ஏந்திக் கபாலம் என்ற கூத்தை நீ ஆடும் போது முல்லையை ஒத்த பற்களை உடைய உமாதேவி தாளத்தின் வகையான பாணியைத் தருவாளா?

என்று சொல்லும் படியாக அழித்தல் தொழிலைச் செய்கின்ற காலங்களில் பாணி, சீர், தூக்கு என்று சொல்லப்பெற்ற இவற்றை மாட்சிமைப்பட்ட அணிகலன்களை உடைய உமாதேவி காப்ப ஆடிக்காத்தல் தொழிலைச் செய்கின்ற இக்காலத்தே ஒரு வடிவைக் கொண்டு அன்பில்லாத எங்களுக்குப் பொருந்தி அருள் செய்ய விரும்பி ஆடுகின்றாய்!

இறைவன் கொடுகொட்டி பாண்டரங்கம், கபாலம் என்ற கூத்துக்களை ஆடும் பொது உமாதேவி மட்டும் உடனிருப்பதாகப் பாடியுள்ளார். இறைவன் கூத்துக்களைப் பற்றிக் கிடைக்கும் பாடல்களில் இதுவே தொன்மையாந்து.

கூத்தப்பிரானின் ஆடல் சிறப்புக்களைத் திருமுறைகள், சைவ சித்தாந்த சாத்திரங்கள், தலபுராணங்கள் முதலியவை விரிவாகக் கூறுகின்றன. “சிதம்பரத்தில் ஆனந்த தாண்டவம் செய்யும் பெருமானைக் கோடிக்கணக்கான மக்கள் கண்டது உண்டு, எனினும் திருநாவுக்கரசர் என்ற ஒரு கலைஞர் மட்டுமே அக்கலையின் உயிர்ப்புத் தன்மையை உணருகிறார்.” “தில்லையுட் சிற்றம்பலத்து நட்டம் என்று வந்தாய் என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே என்று அவர்பாடும் பொழுது பெருமானின் எடுத்த திருக்கை அவருடன் பேசியதை அறியமுடிகிறது” (அ.ச. ஞானசம்பந்தம் - இலக்கியக்கலை, பக்கம் 71, 72)

அம்மை பாடவும் அம்மையின் பாடலுக்கேற்ப இறைவன் ஆடுவதாகவும் கூறுவது திருமுறை மரபாகும்.

“இறையுறு வரிவளை இசைகள் பாடிட
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னியின்மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே”
 (திருஞானசம்பந்தர்).

Back to Top