செய்த குற்றங்கள்

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

சுந்தரமூர்த்தி நாயனார் பரவையாரின் ஊடலைத்தீர்க்க இறைவனை இருமுறை தூதாக அனுப்பினார். பரவையார் ஊடல் நீங்கினார். இறைவனைத் தூதனுப்பி ஏவல் கொண்டதை அறிந்த ஏயர்கோன் கலிக்காம நாயனார் சுந்தரர் மேல்சினங்கொண்டார். இருவரையும் நட்பினராக்கக்கருதிய இறைவன் கலிக்காமருக்குச் சூலை நோயைத் தந்து அதனைத் தீர்க்குமாறு சுந்தரரை அனுப்பினார். சுந்தரரால் நோய் தீர்வதிலும் இறப்பதே நன்றெனக்கருதிய கலிக்காமர் உடைவாளால் தம் வயிற்றைக் கிழித்துக்கொண்டு இறந்தார். இதனையறிந்த சுந்தரர் மனம் வருந்தித்தாமும் உயிர் நீக்கத்துணிந்தார். இறைவன் கலிக்காமரை உயிர்பெற்று எழச்செய்தார். இருவரும் ஒருவரை ஒருவர் வணங்கி நண்பராயினர். இருவரும் பெருமகிழ்ச்சியுடன் திருப்புன்கூர் சென்றடைந்தனர். இறைவனை வணங்கிச்சுந்தரர் பாடிய பதிகம் “அந்தணாளன் உன் அடைக்கலம்புகுத” எனத்தொடங்குவது ஆகும்.

“நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்
     நாவினுக்கு அரையன் நாளைப் போவானும்
கற்ற சூதன் நற்சாக்கியன் சிலந்தி
     கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணமெனக் கருதும்
     கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்
பொற்றிரள் மணிக்கமலங்கள் மலரும்
     பொய்கை சூழ்திருப் புங்கூர் உளானே”

என்பது அப்பதிகத்தின் நான்காவது பாடலாகும். இப்பாடலுக்குப் பலரும் தவறாகவே பொருள் கூறுகின்றனர்.

பொன்போலப் பொலிவுடையதும் திரட்டியுடையதும் அழகியதும் ஆன தாமரை மலர்கள் மலர்ந்துள்ள பொய்கை சூழ்ந்த திருப்புன் கூரில் உள்ள இறைவனே! நல்ல தமிழைப் பாடவல்ல 1. திருஞானசம்பந்தர். 2. திருநாவுக்கரசர். 3. திருநாளைப்போவார் (நந்தனார்). 4. சூதாடுதலைக்கற்ற மூர்க்க நாயனார். 5. நல்லசாக்கிய நாயனார். 6. சிலந்தி (கோச்செங்கண் நாயனார்). 7. கண்ணப்பநாயனார். 8. கணம்புல்ல நாயனார் ஆகியோர் ஞான சூரியர் ஆவர். அடியேன் குற்றமான செயல்களைச் செய்தாலும் அவற்றைக் குணமாகவே கருதும் உம்முடைய உள்ளக் கருத்தை அறிந்து உம்முடைய ஒலிக்கின்ற கழலையணிந்த திருவடியை அடைந்தேன். (என்னை ஏற்று அருள் செய்வாயாக).

பாடலில் வரும் “என்று” என்பதற்கு இவர்கள் என்று ஆவார் எனக்கொள்ள வேண்டும். எல், என்று, என்றூழ் என்ற சொற்கள் சூரியனைக்குறிக்கும். கச்சியப்ப முனிவர் பாடிய விநாயக புராணத்தில் கணன் என்னும் அரசன் தவம் செய்த சூழலைச் சொல்லும் போது

“அன்று அவன் இருந்து நோற்கும் அருந்தவச் சூழல் எல்லை 
தென்றலே அன்றி ஏனைத் தீவளி சார்ந்தது இல்லை
என்றும் மிக்க அழற்றிற்று இல்லை, இமம் மிகச் சொரிந்தது இல்லை
கன்றுறு சாதிபேதம் வயிரமும் கதித்தது இல்லை”

என்று பாடியுள்ளார். சூரியனும் அதிகமாகச் சுடவில்லை என்பதனை என்றும் மிக்க அழற்றிற்று இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். என்று என்பதற்குச் சூரியன் என்பது பொருள் என்பது தெரிய வருகின்றது.

எனவே தேவாரப்பாடலில் வரும் “என்று” என்பதற்கும் சூரியன் என்றே பொருள் செய்ய வேண்டும். அவ்வாறு பொருள் செய்யாமல் என்று இவர்கள் எண்மரும் குற்றம் செய்தாலும் குணம் எனக்கொள்ளும் கொள்கையால் உம்முடைய திருவடி அடைந்தேன் என்று கொண்டு அவர்கள் எண்மரும் குற்றம் செய்ததாகக் குற்றங்களை அட்டவணை இட்டுக்காட்டியுள்ளனர்.

1. ஞானசம்பந்தர் செய்தது – பாண்டியன் சமணரைக் கழுவேற்றியதனை விலக்காதிருந்தது.

2. நாவுக்கரசர் செய்தது – சமண சமயம் புக்கு முதல்வன் திருவருளை இகழ்ந்து நின்றது.

3. நாளைப்போவார் செய்தது – தில்லைநகரத்தினுள்ளும், திருக்கோயில் உள்ளும் புக முயன்றது.

4. மூர்க்க நாயனார் செய்தது – சூதாடியது.

5. சாக்கியார் செய்தது – இலிங்கத் திருமேனியை கல்லால் அடித்தது.

6. சிலந்தி செய்தது – வாய் நூலால் இலிங்கத்தின் மேல் கூடுவேய்ந்தது.

7. கண்ணப்பர் செய்தவை – செருப்புக்காலை இலிங்கத்திருமேனியில் முடியில் வைத்ததும் வாய் நீரை தன்மேல் உமிழ்ந்ததும், எச்சிற்படுத்திய இறைச்சியைப் படைத்ததும்.

8. கணம்புல்லர் செய்தது – திருக்கோயிலில் தம் தலை மயிரை விளக்கு என்று எரித்தது.

“அத்தா ஆலங்காடா! உன் அடியார்க்கு அடியேன் ஆவேனோ” என்று பாடியவர் சுந்தரர். அடியார்க்கடியேன் என்று திருத்தொண்டத் தொகையில் பாடியவர்.

நாவின் மிசை அரையனொடு தமிழ்ஞான சம்பந்தன் யாவர் சிவனடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன் என்று பாடியவர்.

“நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கு
அரையனும் பாடிய நற்றமிழ்மாலை
சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை”

என்று பாடியவர்.

நாளும் இன்னிசையாள் தமிழ்பரப்பும் ஞானசம்பந்தன்” என்று பாடியவர்.

“திருவும் வண்மையும் திண்டிறலரசும்
சிலந்தியார்செய்த செய்பணிகண்டு
மருவு கோச்செங்கணான் தனக்களித்த
வார்த்தை கேட்டு நின்மலரடியடைந்தேன்”

என்று பாடியவர்.

“தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடையாய் அதுதன்னைச்
சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண்டு”

என்று பாடியவர். திருஞானசம்பந்தர் முதலியோரைக் குற்றம் செய்ததாகப் பாடுவாரா? சுந்தரர் தம்மைத்தாம் குற்றம் செய்ததாகக் கூறிக்கொண்டார்.

“மற்றுநான் பெற்றதார் பெறவல்லார்
வள்ளலே கள்ளமே பேசிக்
குற்றமே செயினும் குணமெனக் கொள்ளும் 
கொள்கையால் மிகைபல செய்தேன்”

என்று சுந்தரரே தம்மைத் தாமே கூறிக்கொண்டுள்ளார்.

“குற்றம் தன்னொடு குணம் பல பெருக்கிக்
     கோல நுண்ணிடையாரொடு மயங்கிக்
கற்றிலேன் கலைகள் பலஞானம்
     கடியவாயின கொடுமைகள் செய்தேன்”
“நான் செய்த குற்றங்கள் பொறுக்கும்
     நறைவிடியும் நள்ளாறனை”
தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்”

முதலியன சுந்தரர் குற்றம் செய்ததாகத் தம்மைத்தாம் கூறிக்கொண்டார் என்பதற்குச் சான்றுகள் நாயன்மார்கள் பக்தியால் தம்மைத்தாழ்த்திக் கொள்ளும் போது குற்றம் செய்ததாகக் கூறுவார்கள். அவர்களும் உண்மையில் குற்றம் செய்யவில்லை, நாயன்மார் பிறர் குற்றம் செய்ததாகக் கூறமாட்டார்கள். எனவே “ என்று இவர்கள்” என்பதனை நிறுத்தி இவர்கள் எண்மரும் ஞான சூரியர் நான் குற்றம் செய்தாலும் குணமாகக் கொள்வான் என்று சுந்தரர் கருதிப் பாடியிருப்பார் எனச் கொண்டால் சிறப்பாக இருக்கும்.

Back to Top