ஒன்பான் இரவு (நவராத்திரி)

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

இயற்கையாக அமைந்தவற்றைப் பெண்ணாகக் காண்பது நம் நாட்டு மரபு. பாரதநாடு – பாரத மாதா, தமிழ்மொழி – தமிழ்த்தாய், நீலமலை – நீலமலையரசி, காஞ்சியாறு – காஞ்சிமாதேவி, காவிரி – காவிரித்தாய். இவற்றைப்போலவே வீரம் – கொற்றவை, செல்வம் – திருமகள், கல்வி – கலைமகள் எனக் கருதி வழிபாடு செய்வது மிகப்பழங்காலந்தொட்டே வழக்கில் உள்ளது. இவ்வாறு வழிபடுவதைத் தாய்த்தெய்வ வழிபாடு என்று கூறுவது வரலாற்று முறையாகும். சிந்துவெளி அகழ்வாய்வில் தாய்த்தெய்வமான கொற்றவை வழிபாடு காணப்பெறுகின்றது. “பழந்தமிழரது தலையாய தெய்வம் பெண் தெய்வமே என்பதில் ஐயமில்லை. சங்க இலக்கியங்கள் பலவற்றில் கொற்றவை வழிபாட்டு முறை கூறப்படுகின்றது. அச்சம் பொருந்தி பண்பையுடைய கொற்றவையை வெறியாட்டு முறையில் பழந்தமிழர் வழிட்டனர். பழந்தமிழர் வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்கும் வரைவிலக்கணமும் விளக்கமும் கொடுக்கும் தொல்காப்பியமும் கொற்றவைநிலை என்னும் தலைப்பில் கொற்றவைக்குப் பலிகொடுத்து வணங்குதலைக் குறிப்பிடுகின்றது” என்பர் கைலாசபதி. சிலப்பதிகாரம் வேட்டுவவரியில் சக்தி வழிபாட்டின் விரிவைக் காணலாம். உலகவாழ்க்கை தவ வாழ்க்கை இரண்டையும் ஆராய்ந்து பார்த்தால் தவவாழ்க்கையே சிறந்தது. உலகப்பற்றை விட்டவரைத்திருமகள் நீங்கமாட்டாள். உலகப்பற்று உடையவரைத் திருமகள் விட்டு நீங்கி விடுவாள் என்பதனை

                    “விட்டோரை விடாஅள் திருவே
                    விடாஅ தோரிவள் விடப்பட்டோரே”

என்று புறநானூறு குறிப்பிடுகின்றது. திருவள்ளுவரும் திருமகளைச் செய்யவள் என்று குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியச் சொல்லதிகார உரையில் சொல் என்பது நாமகளாகிய தெய்வம் என்று சேனாவரையர் குறிப்பிட்டுள்ளார். மதுரைச் சிந்தா தேவி கோயிலில் ஆபுத்திரன் தங்கியிருந்தபோது இரவில் பசியில் வாடிய சிலர்வந்தனர். சிந்தாதேவி ஆபுத்திரனுக்கு அட்சயபாத்திரத்தைக் கொடுத்தாள். சிந்தாதேவியைப் போற்றித் துதித்தான்.

                    சிந்தா தேவி செழுங்கலை நியமத்து
                    நந்தா! விளக்கே! நாமிசைப் பாவாய்!
                    வானோர் தலைவி! மண்ணோர் முதல்வி!

அவன் இவ்வாறு துதித்தான். சிந்தாதேவி – கலைமகள், செழுங்கலை நியமம் – கலைமகள் கோயில். சீவகன் கல்வி பயின்ற முறையை நாமகள் இலம்பகம் என்று திருதக்கதேவர் சீவக சிந்தாமணியில் குறிப்பிட்டுள்ளார். புத்தம், சமணம் ஆகிய சமயங்களிலும் கலைமகள் வழிபாடு இருந்தது தெரிய வருகின்றது.

                    “இமயவர்கள் மெளலி இணைமலர்த்தாள் சூடச்
                    சமையந் தொறும்நின்ற தையல் – சிமைய
                    மலைமடந்தை வாச மலர்மடந்தை எண்ணெண்
                    கலைமடந்தை நாவலோர் கண்” (தண்டியலங்காரம்)

துணையாகிய மலர்போன்ற சீர்பாதத்தைத் தேவர்கள் எல்லாரும் தங்கள் முடிமேலே சூடும் வண்ணம் பலவகைப்பட்ட சமயங்கள் தோறும் புக்கு நின்றமடவாள், சிகரங்களை உடைய மலையரசன் மகளுமாய், நறுநாற்றத்தையுடைத்தாகிய தாமரை மலர் மீதிருந்த சீதேவியுமாய், பலவகைப்பட்ட கலைகளுக்கு இறைவியுமாய் நின்ற சரசுவதி; அவள் நாவினால் வலியோர்க்குக் கண்ணாய் இருப்பவள் என்பது பழைய உரை.. சரசுவதியே மலைமகளாகவும், திருமகளாகவும், கலைமகளாகவும் இருப்பாள் என்பது பாடற் கருத்து. புரட்டாசி அமாவாசையை அடுத்த முதல் நாள் (பிரதமி) முதல் ஒன்பது நாள் கொண்டாடப்படுவது நவராத்திரி ஆகும். முதல் மூன்று நாட்கள் மலைமகளுக்கு உரியன. 4, 5, 6 ஆம் நாட்கள் திருமகளுக்கு உரியன. 7, 8, 9 ஆம் நாட்கள் கலைமகளுக்கு உரியன. பல்வேறு பொம்மைகளைக் கொலுவைத்தாலும் மலைமகள், திருமகள், கலைமகள் ஆகியோர் படங்களை வைத்து வழிபட வேண்டும். நவ சக்திகள் வழிபாடு, கன்னிப்பெண்கள் வழிபாடுகள் முதலியன இருந்தாலும் மூன்று தேவியர் வழிபாடு கட்டாயம் இருக்கவேண்டும். அபிராமி அந்தாதி, மீனாட்சி கலிவெண்பா, சகலகலாவல்லி மாலை முதலியவற்றைப் பாராயணம் செய்ய வேண்டும். நிறைவு நாளில் பயன்படுத்தும் கருவிகளுக்குப் பூசை செய்ய வேண்டும். இது ஆயுதபூசை என வழங்குகின்றது. அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் ஆயுதபூசை குறிக்கப்பெறுகின்றது. கருநாடகத்தில் பத்து நாள் விழா தசராப்பண்டிகை என வழங்கப் பெறுகின்றது. அகழ்வாய்வு, தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் முறையான சக்தி வழிபாடு காணப்பெறுவது தொன்மையைக் காட்டுகின்றது.


Back to Top