கந்தர் சட்டி விரதம்

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

முருகப்பெருமான் மாயை வடிவான தாரகாசூரன், கன்மத்தின் வடிவான சிங்கமுகன், ஆணவத்தின் வடிவான சூரபன்மா ஆகியோரைப் போரிட்டு வென்றார். மாமரமான சூரபன்மாவை வேலால் பிளக்கச் சேவலும் மயிலுமாக ஆயின. சேவலைக் கொடியாகவும், மயிலை ஊர்தியாகவும் ஆக்கிக் கொண்டார். கோழிச்சேவல் நாததத்துவம். மயில் விந்துதத்துவம் இரண்டும் இறைவனால் செயல்படுவன.


கயிலையில் அம்மையப்பர் வீற்றிருந்தார். குரங்கு (முசு) ஒன்று வில்வஇலைகளை இருவர் மேலும் இட்டது. அம்மை சினந்தாள். இறைவன் கருவூரில் சோழ மன்னனாகப்பிறந்து ஆட்சிசெய்து மீண்டும் கயிலைக்கு வருமாறு குரங்கிற்கு அருள்செய்தார். பழைய பக்திநினைவு மாறாதிருக்க முசுவின் முகத்துடன் முசுகுந்தனாகத் தோன்றிக் கருவூரில் ஆண்டான். தெய்வானையை முருகன் திருமணம் செய்தபோது சிறப்பு அழைப்பினராகச் சென்றார். ஒருநாள் வசிட்டரைப்பார்த்து முருகப்பெருமானுக்குரிய சிறப்பு விரதங்களை முசுகுந்தன் கேட்டார். அவர்க்கு விரதங்களைச் சொல்லுகின்ற முறையில் கந்தபுராணம் தட்சகாண்டம் கந்தவிரதப் படலத்தில் விரிவாகக் கச்சியப்ப சிவாச்சாரியார் பாடியுள்ளார்.

முருகப் பெருமானுக்கு 1. வெள்ளிக்கிழமை விரதம் 2. கிருத்திகை விரதம் 3. சட்டி விரதம் ஆகியன சிறப்புடையன. வியாழக்கிழமை பகல் மட்டும் உணவுண்டு வெள்ளிக்காலை நீராடி முருகன் புகழையே எண்ணி நாள் முழுதும் உண்ணாமல், உறங்காமல், இருந்து சனிக்கிழமை அதிகாலை நீராடி வழிபாடு செய்து பகல் உண்டு விரதம் முடித்தல் வேண்டும். பகீரதன் மூன்றாண்டு இவ்விரதம் இருந்து இழந்த ஆட்சியைப் பெற்று ஆண்டான்.

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம் முதலாகப் பன்னிரண்டு மாதக்கார்த்திகையில் மேற்கொள்வது கார்த்திகை விரதம். பரணி நட்சத்திரம் பகல்மட்டும் உண்டு கார்த்திகையன்று காலை நீராடி வழிபாடாற்றி முருகன் புகழ்நூல்களைப் பாராயணம் செய்து பகல்முழுதும் உண்ணாமல், உறங்காமல் மறுநாள் உரோகிணியில் அதிகாலை எழுந்து நீராடி வழிபாடு செய்து விரதம் முடிக்கவேண்டும். நாரதர் 12 ஆண்டு இவ்விரதத்தை மேற்கொண்டு பேறுபெற்றார்.

முருகப்பெருமான் சூரபன்மாவுடன் ஆறுநாள் போரிட்டு வென்றது ஐப்பசிச் சஷ்டி திதியாகும். ஐப்பசி அமாவாசைக்கடுத்து முதல் திதியில் இவ்விரதத்தை மேற்கொள்ள வேண்டும். பிரதமி திதியன்று அதிகாலையெழுந்து காலைகடன் முடித்து நீராடி இரண்டாடை உடுத்து வழிபாடு செய்தபின் முருகப் பெருமானைக் குடத்திலும் திருவுருவத்திலும் எழுந்தருளச்செய்து வழிபாடாற்ற வேண்டும் பகல் முழுவதும் உண்ணாமல் உறங்காமல் முருகப்பெருமான் புகழ் கூறும் நூல்களைப் பாராயணம் செய்ய வேண்டும். இரவு நெய்யும் கட்டியும் சேர்த்துச் செய்த மோதகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். நீரருந்தி ஆறுநாட்களும் இவ்வாறே நோற்றல் வேண்டும். சட்டி முடிந்த அடுத்த நாள் அதிகாலை நீராடி முருகப் பெருமானை வழிபாடாற்றி அடியார்களுடன் சேர்ந்து பாராயணம் செய்து விரதத்தை முடிக்க வேண்டும். ஆறு நாட்களும் உணவின்றி விரதமிருக்க முடியாதவர்கள் பகல்மட்டும் உணவுண்டு விரதமிருக்கலாம். அதுவும் இல்லாதவர்கள் ஆறாம் நாளாகிய சட்டியன்று மட்டும் உண்ணாமல் விரதம் மேற்கொள்ளலாம். ஆறு நாட்களும் முருகப் பெருமான் பெருமைகளையே சிந்தித்தல், பேசுதல், பாராயணம் செய்தல் வேண்டும். இவ்விரதத்தை மேற்கொண்டு முசுகுந்தன் முதலிய பலர் திருவருள் பெற்றுயர்ந்தனர்.

Back to Top