வாழ்க ஆனினம்

- முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு

உலக மக்களின் பண்பாட்டுக்குத் தமிழகம் தொல்பழங்காலம் முதலே தனது பங்களிப்பைத் தந்து வந்துள்ளது. குறிஞ்சி, முல்லை, மருதம் ,நெய்தல், ஆகிய நானிலப் பாகுபாடு மக்களின் பண்பாட்டுச் சிந்தனைகளுக்கு அடித்தளமாக விளங்கியது. நிலத்தையும் காலத்தையும் தமிழர் முதற்பொருளாகாக் கொண்டனர். தம்மைச் சூழ்ந்துள்ள பொருள்களையும், தம்மால் சூழப்பெற்ற பொருள்களையும் கருப்பொருள் எனக் கொண்டனர். நிலத்தில் காலம் காரணமாகத் தோன்றுவன கருப்பொருட்களாகும்.

     “தெய்வம் உணாவே மா மரம் புள்பறை
      செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
      அவ்வகை பிறவும் கருவென மொழிப”

எனத் தொல்காப்பியம் கருப்பொருட்களைக் பட்டியலிட்டுக் காட்டுகிறது. இங்கு ‘மா’ என்பது விலங்கினைக் குறிக்கும்.

முல்லை நிலம் ஆநிரைகளைக் கொண்டது. இந்நிலமக்கள் ஆயர் ஆவர். ‘ஆ’ என்பது பசுவாகும். ஆ மேய்த்தவர் ஆயர், ஆய்ச்சியர் எனப்பட்டனர்.

சிந்துவெளி நாகரிகத்தில் ஆநிரைகள்

தமிழர், சுமேரியர் ஆகியோருடன் இனத்தாலும் பண்பாட்டாலும் தொடர்பு கொண்டவர்கள் சிந்துவெளி மக்கள். அவர்தம் வாழ்க்கையிலிருந்து இந்தியாவில் தொல்பழங்கால வரலாறு தொடங்குகிறது. [கி.மு.3500] சிந்துவெளி அகழ்வாய்வில் காளை முத்திரைகள் பல கிடைத்தன. காளை [நந்தி] வழிபாடு நிகழ்ந்ததையும் அறியமுடிகிறது. அவர்களுடைய முதன்மைக் கடவுள் சிவன்-பசுபதி ஆவார். சிவன் யோக வடிவில் அமர்ந்துள்ளார். தலையில் வளைந்த எருமைக் கொம்புகள் உள்ளன. அவருக்கு இருபுறமும் காளை, காண்டாமிருகம், புலி, மான், யானை இவை காணப்படுகின்றன. இம் முத்திரை மிக முக்கியமானதாகும். சிவன் யோகி என்பது சைவர் கொள்கை. ‘மங்கையோடிருந்து யோகு செய்வானை’ எனத் திருவிசைப்பாக் கூறுகிறது. காளை – வாகனம், புலித் தோலை உடுத்தவர், மானைக் கையில் ஏந்தியுள்ளார், யானைத் தோலைப் போர்த்தவர் என்பது குறிக்கத்தக்கது என டாக்டர். மா. இராசமாணிக்கனார் தமது மொஹஞ்சொதரோ என்ற நூலில் கூறியுள்ளார்.

சிந்துவெளி மக்கள் சிறுதெய்வ வழிபாடு உடையவர்களாகவும் விளங்கினார். காளை, பசுப் போன்ற விலங்குகளை அவர்கள் பலியிடவில்லை. போற்றி வழிபட்டுள்ளனர். பிற்காலத்தில் ஆரியர் படையெடுத்து வந்தேறிக் கூட்டமாகிச் சிந்துவெளி மக்களைச் சிறிது சிறிதாக அழித்து “ஆரியவர்த்தம்” என்ற பகுதியை உண்டாக்கினர். அவர்கள் இந்திரன், மித்திரன், வருணன், அக்னி முதலிய சிறு தெய்வங்களுக்குப் பறவைகள், பசு, மனிதர் முதலிய பலிகளைக் கொடுத்தனர். இவை இருக்கு வேதத்தில் பல இடங்களில் கூறப்பெற்றுள்ளதாகத் தனித்தமிழ் இயக்கத் தந்தையார் மறைமலை அடிகள் நன்றாக ஆய்ந்து நிறுவியுள்ளார்.

மாடு-செல்வம்

மாஅஅ என முக்காரமிடும் மாடு மாவெனப்பட்டது. ‘மா’ என்னும் பெயரே ‘ஆ’ எனத் திரிந்திருக்கலாம்” என்பர் ஞா. தேவநேயப்பாவணர். பண்டைக்காலத்தில் மாடே மக்களுக்குச் சிறந்த செல்வமாக இருந்தது. அதனால் செல்வத்திற்கு மாடு என்ற பெயருண்டானது.

     “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
      மாடல்ல மற்றை யவை”

என்ற திருக்குறளின் மூலம் மாடு என்பது செல்வத்தைக் குறிக்கும் வேறுசொல் என்பது பெறப்படுகிறது.

மாட்டிலிருந்து பாலும், பால்படு பொருள்களும் மக்களுக்குப் பயன்பட்டன. தோல், கொம்பு, கோரோசனை, வால்மயிர், சாணம் முதலியனவும் மிகவும் பயன்பட்டன. காளை உணவை விளைவிக்கப் பாடுபட்டது. பசு தன்னிடத்திலிருந்தே உணவினை அளித்தது. எனவே தமிழர் ஆநிரைகளைச் செல்வமெனக் கொண்டதில் வியப்பில்லை.

தொல்காப்பியர் ஆநிரை

தொல்காப்பியத்தில் பசுவினைக் கொடையாகத் [தானம்] தருவது கூறப்பெற்றுள்ளது. இதனைக் “கபிலை கண்ணிய வேள்வி நிலை” என்று தொல்காப்பியர் கூறுகிறார். இதற்கு உச்சிமேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் “இது வரையா ஈகையன்றி இன்னலுற்றால் கொடுக்க என உயர்ந்தோர் கூறுநாட்காலையிலே கொடுப்பதாம்” என்று உரை கூறுகிறார். அதாவது மனிதர் துன்பமுற்ற காலத்து அத்துன்ப நீக்கத்தின் பொருட்டு அறவோர்க்குப் பசுவினைத் தானமாகத் தருதல் தமிழர் வழக்கம் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

பசுவும் காளையும் மிகவும் பயன்படுவது பற்றி மக்கள் பசுவை அம்மை என்றும், காளையை அப்பன் என்றும் கூறும் வழக்கம் இருந்தை இலக்கண நூல்களால் அறிய முடிகிறது. இதுதிணை வழுவுக்கு எடுத்துக்காட்டாகக் கூறப்பெறுகின்றது. மேலும் சாத்தன், சாத்தி, கொற்றன், கொற்றி, முடவன், முடத்தி, கொடும்புற மருதன், கொடும்புற மருதி முதலிய மக்கள் பெயரைப் பசுவுக்கும் காளைக்கும் இட்டு அழைத்துள்ளனர். இது தொல்காப்பியம் சொல்லதிகார உரைப்பகுதியால் அறியப்படும்.

காவலர் காத்த காலிகள்

தமிழகத்தில் மிகப் பழங்காலத்திலிருந்தே பசு தெய்வத்தன்மை உடைய விலங்காகக் கொள்ளப் பெற்றிருந்தது. சங்க காலத்தில் வாழ்ந்த அரசர்கள் பசுவைப் பாதுகாப்பதில் முனைந்து செயல்பட்டுள்ளனர். போர்க்காலங்களில் பாதுகாக்கப்பட வேண்டியோர் பட்டியலில் பசு முதலில் இருந்ததை அறிய முடிகிறது.

1 .பசு

2. பசுபோன்ற இயல்புடைய அறவோர்

3. பெண்கள்

4. நோய் உடையோர்

5. நீத்தார் கடன் செய்யப் பிள்ளை இல்லாதோர்

முதலியோரை அரசன் தான் போர் தொடுத்து வருவதால் விரைந்து பாதுகாப்பான இடம் சேர வேண்டும் என அறிவுறுத்தியமை குறிக்கத்தக்கது.

     “ஆவும் ஆனியல் பார்ப்பன மாக்களும்
      பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
      தென்புல வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
      பொன்போல் புதல்வர்ப் பெறாஅ தீரும்
      எம்அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின்”

என்ற புறநானுற்றுப் பாடலால் இதனை அறியலாம்.

போர்க்காலங்களில் பகையரசரின் பசுக்கூட்டங்களுக்குத் துன்பம் நேராதவாறு போர் தொடங்கும் முன்னர் அவற்றைக் கவர்ந்து வரும் வழக்கம் தமிழகத்தில் இருந்துள்ளது. இது களவாயினும் அறமாகவே கருதப்பட்டுள்ளது. நிரை கவர்தலாகிய இதனை வெட்சித்திணை என இலக்கண நூல்கள் குறிக்கின்றன. ‘ஆ தந்து ஓம்பல்’ என்பர் தொல்காப்பியனார்.

வெட்சி வீரர்கள் ஆநிரைகளைக் கவரச் செல்லும்போது அவர்களுக்கு உறுதுணையாகக் கொற்றவை முன்னே செல்லுவாள் எனப் புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.

     “ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலை
      கூளி மலிபடைக் கொற்றவை-மீளி
      அரண் முருங்க ஆகோள் கருதின் அடையார்
      முரண்முருங்கத் தான்முந் துறும்”

என்னும் பாடல் கருத்து இதனை உணர்த்துகிறது.

     “புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக்
      கொள்ளுங் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும்”

என்ற சிலப்பதிகாரப் பகுதியும் இதனையே கூறுகிறது.

ஒரு நாட்டு ஆநிரைகள் பகைவரால் கவர்ந்து செல்லப்பட்டால் அது பேரிழப்பாகக் கருதப்பட்டுப் பெரும் போர் உண்டானது. இது வெட்சித் திணைக்கு மறுதலையான கரந்தைத் திணையாகும். நிரை மீட்டல் கரந்தையாகும்.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, தமிழகத்தோடு நெருங்கிய வாணிகத் தொடர்புடைய உரோம் நாட்டிலும் மக்களும், அரசரும் பசுப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. “ரோம நாட்டில் பசு கொல்லப்படுவது கிடையாது. ஒருமுறை ஒருவன், தன் காமக்கிழத்தியானவள் பசுவின் ஊன் உண்ண விரும்பிய காரணத்தால், பசு ஒன்றைக் கொன்று விட்டான். இதை அறிந்த அந்நாட்டினர், அவனை ரோம் அரசாட்சியின் முன் கைதாக்கிக் கொணர்ந்து நிறுத்தினர். அன்றே அவன் அந்நாட்டை விட்டுத் துரத்தப்பட்டான். பசுவைத் கொல்வது, தன் வயலில் உழுது வேலை செய்யும் பணியாளனைக் கொலை செய்யும் செயலுக்கு ஒப்பாகும்” [பிளினி-ப.எ. 286] எனப் பிளினி என்ற வரலாற்று ஆசிரியர் குறித்துள்ளார்.

முற்காலச் சோழ அரசர்களில் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவன் மனு மன்னன். அவன் தன் மகன் வீதிவிடங்கன். தேரேறி உலாச் சென்று கொண்டிருந்த போது தேரின் பின்சக்கரத்தில் சிக்கிப் பசுவின் கன்று இறந்தது. பசு நீதி கேட்டு அழுதது. பிராமணர் பரிகாரம் செய்வதால் போதும் என அரசனுக்குக் கூறினர். அரசன் பிராமணர் கருத்தை ஏற்கவில்லை.

     “அவ்வுரையில் வரும் நெறிகள் அவைநிற்க அறநெறியின்
      செவ்விய உண்மைத் திறம் நீர் சிந்தை செய்யாது உரைக்கின்றீர்”

என்று மறுத்துரைத்ததைப் பெரிய புராணம் கூறுகிறது. பசுவின் துயர்தீர்க்கத் தன் ஒரே மகனைத் தேர்க்காலிலிட்டுக் கொன்றான்.

     “வாயிற் கடைமணி நடுநா நடுங்க
      ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
      அரும்பெறல் புதல்வனை ஆழியில் மடித்தோன்”

என இந்நிகழ்ச்சியினை இளங்கோ வடிகள் எடுத்துக் கூறுகிறார்.

கல்வெட்டுச் செய்தி

பசுவினைக் கொல்வது பெரும்பாவம் என்னும் கருத்துக் கல்வெட்டுக்களிலும் உள்ளது. ஒரு கல்வெட்டு, மங்கலச் சொல், கல்வெட்டின் காலம், செய்தி, கையெழுத்து, ஓம்படைக்கிளவி எனப்பல பகுதிகளைக் கொண்டது. ஓம்படைக்கிளவி அடுத்துச் சில கல்வெட்டுக்களில் அவ்வறத்தைக் கெடுத்தவர் அடையும் பழிபாவங்கள் கூறப்பெற்றுள்ளன. “இது விலக்குவான் கங்கையிடை குமரியிடை குரால் பசு கொன்றான் செய்த பாவங் கொள்வான்” [ கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள்-ப.எ-14 ]எனவரும் பகுதி பசுவைக் கொன்றவர்க்கு வரும் பாவத்தைச் சுட்டுகின்றது.

பசுவைப் பாதுகாத்த நாயன்மார்கள்

சைவ சமயத்திற்குத் தலைவர்களாக விளங்குபவர்கள் நாயன்மார்கள். இவர்கள் அறுபான் மும்மை நாயன்மாராவர். இவர்களுள் ஆனாய நாயனார், சண்டேச நாயனார், திருமூலர் ஆகியோர் பசுக்காத்தலில் தலைசிறந்து விளங்கினார்கள்.

ஆனாய நாயனார்

ஆனாய நாயனார் சோழ நாட்டில் திருமங்கலம் என்னும் ஊரில் ஆயர்குலத்தில் பிறந்தவர். பசுக்களைக் காட்டுக்கு ஓட்டிச் சென்று அவற்றுக்குக் கொடிய விலங்குகளாலும், நோயாலும் துன்பம் வாராதவாறு பாதுகாப்பார். நல்ல மெல்லிய புல்லும், தூய நீரும் கொடுத்துக் குற்றமில்லாத பசுக்கூட்டங்கள் தம் அளவில் பெருகும் படி காப்பாற்றுவார்.

கன்றுகள், பால் கறவாப்பசு, பால் கறப்பன, பால் தரும்பருவமுள்ள பசு, சினைப்பசு, புதிதாகத் கன்று ஈன்ற பசு எனப் பலவகைப் பசுக்களையும் அவர் மேய்த்துத் தனித்தனித் தொழுவங்களை அமைத்துப் பாதுகாத்தார். பசு ஓம்பலுக்குரிய புல்லாங்குழலில் திருவைந்தெழுத்தை இசைத்து மகிழ்வார்.

சண்டேசுவர நாயனார்

சோழநாட்டில் மண்ணியாற்றங்கரையில் அமைந்த திருத்தலம் சேய்ஞ்லூர். அவ்வூரில் எச்சதத்தன் என்னும் அந்தணன் வாழ்ந்தான். சைவசமயம் வளர விசாரசருமன் என்னும் மகனாரைப் பெற்றான். ஐந்து வயதாகும் போதே விசாரசமருக்குச் சிவஞானம் பெருகியது. ஏழு வயதில் தீக்கைச் சடங்குகள் நடைபெற்றன. தம் குலமரபுக் கல்வி பயின்றார்.

ஒரு நாள் தெருவில் பசு ஒன்று தன்னை மேய்த்த ஆயனைக் கொம்பினால் முட்டச்சென்றது. ஆயன் பசுவினைக் நன்றாய்ப் புடைத்தான். விசாரசருமன் பசுவின்மேல் அன்பு கொண்டு ஆயனைச் சினந்து விலக்கினார். ஆனினங்களின் பெருமைகளை அவனுக்கு எடுத்துக் கூறினார்.

சிவபெருமான் அணியும் திருநீற்றினுக்கு மூலமாகிய சாணத்தைத் தருவது. சிவபிரான் விரும்பியாடுவதற்குரிய ஆனைந்தினைத் தருவது. சிவனும் உமையும் சேர்ந்து எழுந்தருளுகின்ற விடைத்தேவரின் குலத்தைச் சேர்ந்தன ஆக்கள் எனப்பலவாறு தனக்குள் சிந்தித்தார். தானே ஆநிரைகளை மேய்த்தார். புல் உள்ள இடங்களுக்குச் சென்று அவை நன்றாக மேயுமாறு செய்தார். புல் மிகுந்த காலத்தில் கையால் பறித்தும் கொடுத்தார். நன்னீர் ஊட்டினார். அவற்றுக்குத் துன்பம் நேராதவாறு பாதுகாத்தார்.

திருமூல நாயனார்

சிவபிரான் வீற்றிருந்தருளும் கயிலை மலையிலிருந்து சிவயோகி ஒருவர் பண்டைக் காலத்தில் தமிழகம் வந்தார். அவர் திருவாவடுதுறை இறைவனை வழிபட்டு அருகிலுள்ள சாத்தனூர் சென்றார். காட்டில் மூலன் என்னும் இடையன் பசுக்களை அன்புடன் மேய்த்து வந்தான். அவ்விடையன் விதிகாரணமாய்ப் பாம்பு தீண்டி இறந்தான். பசுக்கள் அவனுடலைச் சுற்றிச் சுற்றி வந்தன, கதறின, சுழன்றன, மோந்து பார்த்துப் பெருந்துன்பம் அடைந்தன. அப்பசுக்களின் துன்பம் நீங்கச் சிவயோகி தன் உயிரை மூலன் உடலில் புகுத்தினார்.

மூலன் எழுந்தமை கண்டு பசுக்கள் தம் நாத்தழும்பேற அவனுடலை நக்கின, மோந்தன, பக்கத்தில் நெருங்கி வந்து கனைத்தன, மிக விரும்பின. மகிழ்ச்சியில் வாலினை மேலே எடுத்துத் துள்ளின. துன்பம் நீங்கி மேய்ந்தன.

பசுவின் மகிழ்ச்சியால் தாமும் மகிழ்ந்தார் திருமூலர். அவை மேயும் இடங்களுக்குத் தாமும் சென்று பாதுகாத்தார். இனிய நீரினைப் பருகச் செய்தார். குளிர்ச்சி பொருந்திய நிழலில் தங்க வைத்தார்.

பசுவிற்குப் புல் தருதல் புண்ணியம்

பசுவிற்குப் புல்லும் நீரும் தந்து நாயன்மார் மூவர் பாதுகாத்தனர். அவர்தம் வாழ்வு பிறருக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருந்து பசு ஓம்பலில் ஈடுபடுத்தும். இறைவனுக்குப் பச்சிலை தருவதும், பசுவிற்கு வாயுறை தருவதும் புண்ணியம் என்பது மனிதநேயக் காவலர் திருமூலரின் திருவாக்கு. இதனை,

     “யாவர்க்கு மாம் இறை வற்கொரு பச்சிலை
      யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை”
 [திருமந்திரம் பா.எ.252]

எனக் கூறியுள்ளமை கொண்டு அறியலாம்.

சூரியன் தோன்றும் முன் எழுந்து அருகம் புல்பறித்து அதனைப் பசுவிற்கு அன்புடன் ஊட்டினால் வறுமை ஒழியும். துன்பம் நீங்கும். சிவன் உலகடைந்து சிவபெருமானுடன் இன்பமாக வாழலாம் என நூல்கள் கூறுகின்றன.

பசுக்கள் பூமியில் தோன்றிய வரலாறு

அறக்கடவுள் இறைவனுக்கு வாகனமான நந்தியானார். பேரூழிக்காலத்து எல்லாம் அழியும். அப்போதும் அறம் அழியாது. ஆகவே அறவிடை மட்டும் இறைவனுடன் இருக்கும். நான்கு யுகங்களுக்கும் அறம் அழியாததால் நந்தி நான்கு கால்களை உடையதாகவும், அறம் தூயதாகையால் நந்தி வெண்மை நிறம் கொண்டதாகவும் ஆயிற்று.

இத்தகு நந்தியெம் பெருமானுடன் கபில நிறமுடைய நந்தையும், சிவப்பு நிறமுடைய சுமனையும், வெண்மை நிறமான சுரபியும், புகை நிறமுடைய சுசீலையும், கருநிறமுடைய சுபத்திரையுமாகிய ஐந்து பசுக்கள் வாழ்ந்தன. உலகில் உள்ளவரைக் காக்க எண்ணிய சிவபிரான் இவற்றை பூமியில் பிறக்குமாறு செய்தருளினார். அவை அனைத்தும் பாற்கடலில் தோன்றின. அவற்றின் வழியில் தோன்றிய பசுக்கள் இவ்வுலகில் நிலைத்து நிற்கின்றன எனப் பெரியோர் கூறுகிறனர்.

பசு தூய உடலை உடையது

உலக உயிரினங்களில் பசு தூய்மையான உடலை உடையது. ஆகவே அதன் உடலிலிருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களும் தூயதாகவே கொள்ளப்படுகிறது. பசுவின் உடலிலிருந்து கிடைக்கும் ஆனைந்தும் தூய்மை உடையன. பசு இறந்தன பின்னரும் அதனுடைய தோல் தெய்வப் பேரொலிகளை எழுப்பும் முரசு, பறை முதலிய ஒலிக்கருவிகளாக இருந்து தூய ஒலியினை எழுப்புகிறது. பசுவின் உடலிலிருந்து கிடைக்கும் கோரோசனம் என்னும் மணப் பொருள் தீரா நோய் தீர்க்கவல்லது. இறைவன் விரும்பிய பூசிக்கொள்ளும் பூச்சாகவும் ஆகிறது.

உயிர்களில் நல்ல உயிர்கள் பசுவாகப் பிறக்கின்றன. உமையம்மையும் ஒரு காரணத்தால் பசுவடிவுடன் வந்து திருவாவடுதுறையில் இறைவனைப் பூசித்தார் என்றும் அப்பூசையின் பயனாகப் பசுவடிவு நீங்கப் பெற்று அங்கு உறைகின்றார் என்றும் திருவாவடுத்துறைத் தல வரலாறு கூறுகிறது. இறைவனும் அங்கு பசுபதி என்னும் பெயர் பெற்றார் என்று வரலாறு கூறுகிறது.

கோயில்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்கள் பசுவின் வாயிலிருந்து வெளிப்படுவது போன்ற அமைப்புகள் தீர்த்தக் கரைகளில் அமைக்கப்பெற்றன. அதில் நீராடுவதும், தெளித்துக் கொள்வதும், பருகுவதுமான செயல்களை மக்கள் செய்வார். ஆவுடையாரிலிருந்து அபிடேக நீர் கீழே விழும் பகுதிக்குக் கோமுகம் என்று பெயர். இது பசுவின் முகஅமைப்பை ஒத்துள்ளதால் அவ்வாறு கொண்டனர்.

பசுவின் உடலில் தேவர்கள்

பசுவின் உடலுறுப்புகளில் தேவர்களும், முனிவர்களும் தீர்த்தங்களும் தங்கி இருக்கின்றனர். கொம்புகளின் அடியில் பிரமன், திருமால், நுனியில் தீர்த்தங்கள், தலையில் சிவம், நடு நெற்றியில் சத்தி, மூக்கின் நுனியில் முருகன், மூக்குக்குள் இந்திரன், கன்னங்களின் நடுவில் அச்சுவினி தேவர், இரு கண்களில் ஞாயிறு, திங்கள், பல்லில் வாயு நாவில் வருணன், நெஞ்சில் கலைமகள், மணிகளில் இமயன், இயக்கர், உதட்டில், சந்தியாதேவதை, முசுப்பில் அருக்கத் தேவர், மார்பில் சாத்தியர், கால்களில் அனில வாயு முழங்கள், குளம்பு நுனிகளில் மருத்துவர், குளம்பின் மேல் அரம்பையர், முதுகில் உருத்திரர், சந்திகளில் எட்டு வசுக்கள், யோனியில் சத்தமாதர், அபானத்தில் திருமகள், அடி வாலில் நாகாதியர், வால் மயிரில் ஆதித்தர், மயிர்களில் மாதவர், வயிற்றில் பூமி தேவி இவர்கள் வாழ்கின்றனர். கோசலத்தில் கங்கை, கோமயத்தில் யமுனை, தனத்தில் கடல்கள், வயிறு, இதயம், முகம் இவற்றில் முத்தீக்கள், வேள்விகள் எலும்பிலும் சுக்கிலத்திலும் உள்ளன.

ஆனைந்து எவை?

ஆனைந்து இறைவனுக்கு அபிடேகப் பொருளாகும். திருமுறைகளில் ஆனைந்து என்ற சொல்லாட்சி பல இடங்களில் கூறப்பெற்றுள்ளது. வடமொழியாளர் ஆனைந்தினைப் ‘பஞ்சகவ்வியம்’ என்பர். பால், தயிர், நெய், கோசலம் [பசுவின் சிறுநீர்], கோமயம் [சாணம்] ஆகிய ஐந்தும் ஆனைந்தாகும்.

திருமந்திரத்தில் திருமூலர் ‘ஆன் ஐந்து ஆட்ட’ என்று கூறுகிறார். திருஞானசம்பந்தர், ‘ஆன் அஞ்சு ஆடும் முடியான், ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர்’ என்கிறார். திருநாவுக்கரசர், ‘ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல், ஆவில் அஞ்சு உகந்தாடும் அவன்’ என்கிறார். சுந்தரர், ‘ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள் தம் பெருமான், ஆன் அஞ்சும் ஆட வல்லானை’ என்கிறார். ஆனால் திருமுறைகளில் எங்கும் ஆனைந்து எவை எனக் குறிக்கப்பெறவில்லை.

இதனால் சிலர் கருத்து வேறுபாடுகளைக் கூறத் தொடங்கினர். கோசலம், கோமயம் ஆகியவற்றுக்குப் பதிலாக வெண்ணைய், மோர் இவற்றைச் சேர்த்து ஆனைந்தாகக் கொள்கின்றனர். இது ஏற்கத்தக்கதன்று. இக்கால மரபிலக்கியப் புலவர்களும் இதனைக் கண்டித்துள்ளனர்.

     “ஆனைந்து திருமுறையில் அளவாக அமைத்துள்ளார்
                ஆவின்பால் வானெய்யுடன்
      அருமளையை அங்கங்கே அம்பாட்டில் அடக்கியுள்ளார்
                அடுத்தவிரண் டுரைக்க வில்லை
      தானைந்து பூசை செய்வோர் தக்கவாறு மோர் வெண்ணைய்
                தானாகவே வீணுரைப்பர்”       
[முனைவர். ந.இரா. சென்னியப்பனார், அருள்தரு பூங்கோதை அன்னை பிள்ளைத் தமிழ்]

என்னும் பாடற்பகுதி இதனை உணர்த்தும்.

பால், தயிர், நெய் முதலியவற்றை இறைவன் ஆடி உவப்பது போல வெண்ணைய் விழுதினையும் விரும்பி ஆடுகிறான் என்னும் குறிப்புத் திருமுறையில் காணப்படுகிறது.

     “நல்வெணய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
      நெல்வெணய் மேவிய நீரே”
 [திருமுறை 3]

எனத் திருஞானசம்பந்தர் இறைவன் நாள்தோறும் நறிய வெண்ணெய் முழுக்குக் கொள்கிறான் என்பதைச் சுட்டுகின்றார்.

அபிடேகப் பொருட்கள் பல. பால், தயிர், நெய், போல வெண்ணெய்யும் திருமுழுக்கு ஆட்டப்பெற்றது எனக் கொள்ளலாம். இதன் காரணமாக ஆனைந்தில் வெண்ணெய்யும் ஒன்று எனக் கருத இடமில்லை. வெண்ணெய்தான் நெய் ஆகின்றது. ஆதலால் இரண்டுக்கும் அதிக வேறுபாடில்லை. அது போன்றதே தயிரும், மோரும் இது இவ்வாறு இருக்கும்போது தம் கருத்துக்கு வலுச்சேர்க்கும் பொருட்டுப் பெரியோர்,

     “சோலையில் வண்டினங்கள் சுரும்போடிசை முரலச் சூழ்ந்த
      ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயும் ஆரூரில்
      பாலொடு நெய்தயிர்மோர் பயின்றாடும் பரமேட்டிபாதம்
      காலையும் மாலையும் போய்ப் பணிதல் கருமமே”
 [துடிசைகிழார். அ. சிதம்பரனார். சிவபூசை விளக்கம் ப. எ. 30]

என்னும் திருஞானசம்பந்தர் பாடலை எடுத்துக்காட்டி இறைவன் திருமுழுக்கில் மோர் பயன்படுத்தப்படுகிறது என்பது போல் எழுதியுள்ளனர். ஆனால் மோர் என்ற சொல் தருமையாதீனப் பதிப்பு, திருப்பனந்தாள் பதிப்பு, அ.ச.ஞா பதிப்பு என எதிலும் காணப்பெறவில்லை.

கோசலம், கோமயம் இரண்டையும் நீக்கி வேறு இரண்டைச் சேர்க்கக்காரணம் அவை பசுவின் கழிவுப் பொருட்கள் எனக் கருதியமை எனலாம். கோசலம், கோமயம் என்ற இரண்டும் பசுவின் கழிவிப் பொருள்கள் எனக் கருதி அவற்றை நீக்கி வெண்ணெய், மோர் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்கின்றனர். ஏனைய விலங்குகளின் கழிவுப் பொருட்கள் கெட்ட நாற்றம் உடையன. பசுவின் கழிவுப் பொருள்களான மூத்திரம், சாணம் நறுமணம் உடையன. சிறந்த கிருமிநாசினி ஆகும். [முனைவர். ந.இரா. சென்னியப்பன், வழிபாடு-மந்திரம்-வேள்வி. ப.எ.66] என்னும் அறிஞர் கருத்து குறிக்கத்தக்கது.

பெரிய புராணப் பேருரை ஆசிரியர் சிவக்கவிமணி அவர்கள் அரிவாள்தாயனார் புராணத்தில் ஆனைந்து பற்றி விரிவாக எழுதியுள்ளார். மேலும்,

     “திருவண்ணாமலை உடையார்க்குப் பஞ்ச கவ்வியம்
      ஆடியருள நித்தமும் சிறுகாலை சந்தியில் திருவண்ணா
      மலை என்னும் நாழியில் கோமூத்திரம் உழக்கும்,
      கோமயம் ஆழாக்கும், பால்நாழி உழக்கும், தயிர்
      நாழி உரியும், நெய் நாழியும் ஆக இப்படி நித்தமும்”

என்ற கல்வெட்டினையும் எடுத்துக்காட்டித் திருவண்ணாமலையார்க்குப் பஞ்சகவ்வியம் ஆட்டப் பெற்றதைக் கூறியுள்ளார். மேலும் கச்சியப்ப முனிவர்,

     “...................................கவ்வியங்கள்
      அளவில் சீர்தரும் அந்நல்லாய்! அறிக! பால்தயிர் நெய்
      வளநிலாவிய கோசலம் மயம் இவையாகும்”
 [திருவானைக்காபுராணம்-தீர்த்த நீராடல் பருவம்.பா.எ.6]

என்றும்

     “வடக்குறு துவாரம் இரு மருங்கடுப்ப வதிந்த பன்னிரண்டு கும்பத்துள்
      தொடக்கெலாம் அறுக்கும் பால்தயிர் இழுது தூயகோசலம் மயம்”
[விநாயகபுராணம்-உபாசனா காண்டம்-பட்டாபிடேகப் படலம்.பா.எ.58]

என்றும் ஆனைந்து இவை எனத் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே ஆனைந்து பற்றிய கருத்து வேறுபாடு கொள்ள இடமில்லை.

பஞ்சகவ்வியம் சிறந்த கிருமிநாசினி ஆவதை இக்காலத்து இயற்கை விஞ்ஞானிகள் பலரும் பயிர்களுக்குத் தெளித்துப் பூச்சி புழுக்கள் அழிவதை உறுதிப்படுத்தி உள்ளனர். ஆனைந்து பற்றிய விரிவான விளக்கத்தை முனைவர். ந.இரா. சென்னியப்பனார் அவர்கள் எழுதியுள்ள பஞ்ச கவ்வியத்தின் உண்மை என்ற கட்டூரை மூலம் அறியலாம்.

ஆனைந்து வழிபாடு

இல்லத்திலோ, கோயிலிலோ சடங்கு [கிரியை] சார்ந்த வழிபாட்டினைச் செய்யும் போது பூசையின் முற்கூறு [ பூர்வாங்கம்] வழிபாட்டைச் செய்வது மிகவும் முக்கியம். முக்கூறு வழிபாடாவன: 1. திருவிளக்கு வழிபாடு, 2. புனித நீர் வழிபாடு, 3. ஆனைந்து வழிபாடு, 4. மூத்த பிள்ளையார் வழிபாடு. இவற்றுள் ஆனைந்து வழிபாடு செய்யும் முறையினை ஈண்டு அறிவோம்.

வழிபாட்டுக்கு ஆனைந்தினைத் தனித்தனியே ஒரே அளவுள்ள கலங்களில் பால் முழு அளவு, தயிர் பாதி அளவு, நெய் கால் பங்கு, கோசலம் அரைக்கால் பங்கு, கோமயம் நெல்லிக்காய் அளவு அல்லது இலந்தைக் கனி அளவு வைத்துக் கொள்ள வேண்டும்.

[படம்]

பாலில் சந்திரனும், தயிரில் வாயும், நெய்யில் திருமாலும், கோசலத்தில் வருணனும், கோமயத்தில் அக்கினியும் வாழ்வதாக நூல்கள் கூறுகின்றன. வழிபடும்போது பாலில் ஈசான மூர்த்தியையும், தயிரில் தத்புருட மூர்த்தியையும், கோமயத்தில் சத்யோசாத மூர்த்தியையும் பூசிக்க வேண்டும். தருப்பை நீரை மூல மந்திரம் கூறிப் பூசிக்க வேண்டும். முறையே இம் மூர்த்திகளை எழுந்தருளச் செய்து, நறும்புகை, விளக்கொளி, அமுது, கற்பூரம் காட்டுதல் வேண்டும்.

     பாலும் நறுநெய்யும் தயிரும் பயின்றாடி
      ஏலும் சுடுநீறும் என்பும் ஒளிமல்கக்
      கோலம் பொழிற் சோலைக் கூடிமட அன்னம்
      ஆலும் வடூகூரில் ஆடும் அடிகளே”

     பாலுநெய் முதலா மிக்க பசுவில்ஐந் தாடுவானே
      மாலுநான் முகனுங் கூடிக் காண்கிலா வகையுள் நின்றாய்
      ஆலுநீர் கொண்டல் பூகம் அணியணா மலையுளானே
      வாலுடை விடையாய் உன்றன் மலரடி மறப்பிலேனே”

     ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே
                அளவில் பெருமை உடையாய் நீயே
      பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
                போர்க் கோலங் கொண்டெயில் எய்தாய் நீயே
      நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
                நண்ணி யடியென்மேல் வைத்தாய் நீயே
      தேவ ரறியாத தேவன் நீயே
                திருவையா றகலாத செம்பொற்சோதீ”

     நெய்யும் பாலும் தயிரும் கொண்டு
                நீத்தல் பூசனை செய்ய லுற்றார்
      கையில் ஒன்றும் காணமில்லைக்
                கழல டிதொழுது உய்யின் அல்லால்
      ஐவர் தொண்டிங்கு ஆட்ட ஆடி
                ஆழ்குழிப் பட்டழுந்து வேனுக்கு
      உய்யு மாறுஒன்றருளிச் செய்யீர்
                ஓண காந்தன் தளிய”

முதலிய பாடல்களை ஓதல் வேண்டும். மலரிட்டுக் கற்பூரம் காட்டுக.

பின்பு கோமயத்தைக் கோசலத்திலும், கோசலத்தை நெய்யிலும், நெய்யினைத் தயிரிலும், தயிரைப் பாலிலும் கலந்து கொள்ளவும். பின்னர் தருப்பை நீரைப் பாலில் கலக்கவும். இக்கலவை உள்ள கலத்தை வைத்துக் கற்பூரம் காட்டி மாவிலை, தருப்பை கொண்டு நன்றாகக் கலக்கவும். அதன் பின்னர் பூசைப்பொருட்கள், நிறைகுடங்கள், வேள்விக் குண்டம், வழிபடும் இடம் இவற்றின் மேல் ‘அத்திரமாவது அஞ்செழுத்துமே’ எனக் கூறித் தெளிக்கவும். நிலத்தேவர் [வாஸ்த்து சாந்தி] வழிபாட்டில் வைக்கோல் பொம்மையை இழுத்து வரும் போது ‘ஆழ்க தீயதெல்லாம்’ எனக் கூறித் தெளிக்கவும்.

ஆனைந்து அபிடேகப் பயன்

ஆனைந்தினை இறைவனுக்கு ஆட்டினால் அது சிவபுண்ணியமாகும். இறைவனும் அத்திருமுழுக்கினை விரும்பி ஏற்கிறான். “கொன்றை மாலையினை அணிந்த சிவனுக்கு அன்போடு பசுவினிடத்துள்ள ஆனைந்தினால் அபிடேகம் செய்தோர் இந்திர விமானம் ஏறி தேவருலகடைந்து அதன்மேல் உருத்திரர் உலகம் அடைந்து வாழ்வர் என்றும், தூய பசுவின் ஆனைந்தை ஒளியுடைய சிவலிங்கத்திற்கு அபிடேகம் செய்தோர் தங்கள் உள்ளத்தின் தூய்மையால் உருத்திரர் உலகம் அடைவர்” [சிவபுண்ணியத் தெளிவு பா.எண்.55, 56] என்றும் ஆனைந்தின் சிறப்பினையும், அதனை அன்புடன் இறைவனுக்கு அபிடேகம் செய்வோரின் பயனையும் நூல்கள் கூறுகின்றன.

பால்

பால் வெண்மை நிறமும் மஞ்சள் நிறமும் உடையது. இனிய சுவை கொண்டது. உடலுக்கு உறுதியளிப்பது. தாய்ப்பாலற்ற குழந்தைகளுக்கு உயிர்க்காக்கும் உணவாவது. இதனால் பசு பசுத்தாய் [கோமாதா] என்னும் பெயர் பெற்றது. குழந்தை, இளையோர், வயதானவர் என்ற அனைவருக்கும் பால் உடலுக்கு ஏற்ற உணவாகும். இறைவன் பால் அபிடேகத்தை விரும்பி ஏற்கிறார். இதனை,

     “செய்ய மேனியன் தேனொடு பால்தயிர்
      நெய்ய தாடிய நீலக் குடியரன்”
 [திருமுறை 5]

என அப்பரடிகள் குறிப்பிடுவதால் அறியலாம்.

இறைவன் திருக்கோயில் தீர்த்தக் கரையில் பத்தாயிரம் பசுக்களைத் தானம் செய்வதால் அடையும் பயனைப் பசுவின் பாலால் இறைவனுக்கு அபிடேகம் செய்தால் பெறலாம் எனப் பெரியோர் கூறுகின்றனர்.

தயிர்

பாலிருந்து தயிர் உருவாக்கப் பெறுகிறது. தயிரிலிருந்து மோர் கிடைக்கிறது. தயிரும், மோரும் உடலுக்குக் குளிர்ச்சி தருவன. இவை சிறந்த உணவாக உள்ளன. இறைவன் தயிர் அபிடேகத்தை ஏற்றுக் கொள்வதை “ ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்” [திருமுறை 3] எனத் திருஞானசம்பந்தர் கூறுவது கொண்டு அறியலாம். வெள்ளிய தயிரைக் கொண்டு இறைவனுக்கு அபிடேகம் செய்தோர் திருமால் உறையும் வைகுண்டத்தை அடைவர் என நூல்கள் கூறுகின்றன.

நெய்

தயிரைக் கடைவதன் மூலம் மோரிலிருந்து பிரிந்து வெண்ணெய் கிடைக்கிறது. இதனை உருக்குவதால் நெய் கிடைக்கும். பசு நெய் மஞ்சள் நிறமுடையது. கொழுப்புச் சத்து நிறைந்தது. ‘நெய்யில்லா உண்டி பாழ்’ என ஒளவையார் குறிப்பிடுகிறார்.

நெய் உடம்புக்கு ஒளி தருவது. பாவத்தைப் போக்குவது. தெய்வங்களுக்கு வேள்வியின் மூலம் உணவாவது. காமதேனுவினிடம் பிறந்தது என்பர். இறைவன் நெய்யினால் திருமுழுக்குக் கொள்கிறான் என்பதை, ‘பாலும் நறுநெய்யும் தயிரும் பயின்றாடி’ [ திருமுறை 1] எனத் திருஞானசம்பந்தர் கூறியுள்ளார்.

கோசலம்

பசுவின் சிறுநீர் பல சித்த மருந்துப் பொருட்களைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுகிறது என்பது கண்கூடு. மேலும் சில மருந்துகளில் கூட்டுப் பொருளாகவும் பயன்படுகிறது. நூலாசிரியரின் தாயார் புலவர். கி. இந்திராணி அம்மையார் சித்த மருந்துகளில் கூட்டுப் பொருளாகக் கோசலத்தைப் பயன்படுத்தி மருந்து தயாரிப்பதை நூலாசிரியர் பலமுறை கண்டுள்ளார். ஆயுர்வேதத்திலும் பசுவின் சிறுநீர் சிறப்பிடம் பெறுகிறது. அரித்துவாரில் உள்ள பாபாராம்தேவ் ஆயுர் வேத மருத்துவமனைக்காகப் பசுவின் சிறுநீரை ரூபாய் ஐந்துக்கு உத்ரகண்ட் மாநில அரசு கொள்முதல் செய்கிறது [தினமணி நாளிதழ்-9 பிப்ரவரி 2008] என்பது குறிக்கத்தக்கது.

கோமயம்

சாணம் பிற உயிரினங்களின் மலம் போன்றதன்று. பிற உயிரினங்களின் மலம் தூய்மையான இடத்தை அசுத்தமாக்கும். பசுவின் சாணம் அசுத்தமான இடத்தைத் தூய்மையாக்கும். வீடுகளில் உள்ள நச்சுக் கிருமிகளைக் கொல்லும் தன்மை கொண்டிருப்பதால் வீட்டை மெழுகுவதற்கும், வாயிலைத் தூய்மைப்படுத்துவதற்கும் சாணத்தைப் பயன்படுத்துகிறனர். புதிதாக ஈயம் பூசம்பெற்ற பாத்திரத்தில் உள்ள நஞ்சினைப் போக்கச் சாணம் பூசி வைப்பர். பண்டைக்காலத்தில் எரு சிறந்த எரிபொருளாக மக்களுக்குப் பயன்பட்டது. இக்காலத்தும் சாண எரிவாயு பயன்பாட்டில் உள்ளது. இதுவன்றியும் எருவைக் கொண்டு உலோகங்களைப் பசுப்பம் [ பொடி ] ஆக்கும் முறை சித்த மருத்துவத்தில் உண்டு. சாணம் இயற்கை உரமாக உழவர்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது.

கோமயமாகிய சாணத்திலிருந்து இச்சை, ஞானம், கிரியை என்னும் மூன்று தளிர்களுடன் கூடிய வில்வ இலை தோன்றியது. வில்வத்தில் திருமகள் விரும்பித் தங்குகிறாள். வில்வத்தைச் சிவபிரான் எப்போதும் விரும்பி அணிகிறார். வில்வத்தால் அர்ச்சனை புரிபவர்களின் பாவத்தை இறைவன் நீக்குகிறார்.

திருநீறு

நம் சைவ சமய சாதனங்களுள் முதலிடம் பெறுவது திருநீறு. திருநீற்றுக்கு நம்முன்னோர் பல பெயர்களை வைத்துள்ளனர். தீவினைகளை நீறாக்குவதால் நீறு, பெருஞ் செல்வமாவதால் விபூதி, உயிர்களின் மலமாகிய குற்றத்தை நீக்குவதால் சாரம், வளரும் அறிவைத் தருவதால் பசிதம், பேய், பூதம், வேதாளம் முதலியவற்றின் துன்பங்களை நீக்குவதால் காப்பு என்று திருநீற்றுக்குப் பல பெயர்களுண்டு. [பேரூர்ப்புராணம்- உபதேசப்படலம், பா.எண் 42, 43]

திருநீற்றின் பெருமைகளைத் திருஞானசம்பந்தர் பலபட எடுத்துக் கூறியுள்ளார். திருநீற்றுக்கென்றே ஒரு பதிகத்தையும் அருளியுள்ளார்.

     “காண இனியதுநீறு கவினைத் தருவது நீறு
      பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
      மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
      சேனந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே”
 (திருமுறை 2)

என்று திருஞானசம்பந்தர் திருநீற்றின் பெருமையைக் கூறுகிறார். திருநாவுக்கரசர் தாம் திருவாளன் திருநீறு ஒன்றை அணிவதால் மட்டுமே இறைவன் முத்தி தர வேண்டும் எனக் கேட்கிறார்.

     “திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
      தருவாய் சிவகதிநீபா திரிப்புலி யூர்அரனே”
 (திருமுறை 4)

என்பது அவரது கோரிக்கையாகும். நீற்றுக்கவசம் என்று மாணிக்கவாசகரும், கவசத் திருநீறு என்று திருமூலரும் கூறுகின்றனர்.

இத்தகு திருநீறு பசுவின் சாணத்தைக் கோசலம் ஊற்றிப் பிசைந்து, காயவைத்து, நெருப்பிலிட்டு எரித்துப் பெறுவது. கிளிஞ்சல், அட்டை, தாள் விறகுச் சாம்பல், நெற்பதர் முதலியவை சாம்பல் செய்யப் பெற்று திருநீறு என்ற பெயரில் விலைக்குக் கிடைக்கின்றது. அவற்றை அணிவதும், பிறர்க்கு அணிவிப்பதும் பெரும்பாவமாகும். திருவாவடுதுறை ஆதினம் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தம் ஆதினத்துப் பசுக்களின் மூலம் பெறப்பட்ட பசுஞ்சாணத் திருநீற்றினையே அடியார்களுக்கு அருட்காப்பாக வழங்குவது வணங்கத்தக்க தொண்டாகும்.

சைவ அடியார்கள் இத்திருத் தொண்டில் முழுக்கவனம் செலுத்திப் பசுஞ்சாணத் திருநீற்றையே அணிவதும், அணிவிப்பதும் வேண்டும். தன்னலமற்ற தொண்டர்களைக் கொண்டுள்ள சைவ மன்றங்கள் பசுஞ்சாணத் திருநீறு செய்வதற்குரிய வழிவகைகளைத் தக்கோர் மூலம் அறிந்து செயல்படுவது உடனடித் தேவையாகும்.

     வாழ்க அந்தணர் வானவர் ஆனினம்
      வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக
      ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே
      சூழ்க வையக முந்துயர் தீர்க்கவே
 (திருஞானசம்பந்தர்)

 

 

--திருச்சிற்றம்பலம்--

Back to Top