நான்மறை

- முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு

வேதம், சுருதி, மறை இவை சமயவாதிகளால் அடிக்கடி கூறப்பெறும் சொற்கள். வேதம் - வித் – அறிவு, சுருதி – காதால் கேட்கப் பெறுவது, மறை – மறைக்கப்பட வேண்டியன ( மறைந்து நிற்கும் பரம்பொருளை வெளிப்படுத்துவது என கதையளப்பவர்களும் உண்டு ) என இவை பொருள் பெறும். சிக்கல் இதில் இல்லை. மறை நான்கு என்பதிலும், அவை இருக்கு, யசூர், சாமம், அதர்வணம் என்பதிலும் தான் சிக்கல். முடிவு கூறுவது கட்டுரையின் நோக்கமன்று. முயற்சிப்பதே முதல் நோக்கம்.

வேதம் செய்தவர் யார்?

வேதம் எந்த ஒரு தனி மனிதனாலும் ஆக்கப் பெற்றது அன்று என்பர். அதனால் அதற்கு ‘அபெளர்ஷேயம்’ என்று பெயர். புருஷன் – மனிதன் – மனிதனால் ஆக்கப் பெறாதது என்பது இதன் பொருளாகும். எனில் வேதத்தைச் செய்தவர் யார்? வேதம் சிவபெருமானால் மொழியப் பெற்றது எனத் தமிழகத்துச் சமயவாதிகள் கூறுகின்றனர். ஆனால் வேதம் தான் தோன்றி (சுயம்பு) என வடமொழியாளர் கூறுகின்றனர். வேதத்தின் உறவினர்களே அதைச் சிவம் செய்யவில்லை என மறுக்கும்போது, (சிவத்தையும் மறுக்கிறார்கள் என்பது தனிச் செய்தி) வேதத்தைச் சிவனே செய்தார் என்று அந்நியர்களாகிய நாம் கூறுவது ஏற்புடையதா?

வேதம் மொழிந்தவர் சிவனா?

சிவன் வேதம் மொழிந்தார் எனத் திருமுறைகளில் பல இடங்களில் பேசப்பெற்றுள்ளது.

     “ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்கு
      ஈரிருவர்க்கு இரங்கி நின்று
      நேரிய நான்மறைப் பொருளை உரைத்தொளிசேர்
      நெறியளித்தோன் நின்ற கோயில்”

(திருஞானசம்பந்தர் – முதல் திருமுறை – பா. எண்: 1416)

என்று திருமுறை கூறுகின்றது. இங்கு குறிக்கப்பெற்ற நான்மறை எது? இருக்கு, யசூர், சாமம், அதர்வணம் என்றால், வேதத்தில் உள்ள கட்குடியன் பாட்டு, சூதாட்டக்காரன் பாட்டு, மாடு மேய்ப்போன் பாட்டு இவை எல்லம் சிவபெருமானால் செய்யப் பெற்றதா? இப்பாடல்கள் வேதத்தில் இல்லை என்று கூறமுடியுமா?

வேதம் நான்கா? மூன்றா? எண்ணற்றதா?

வேதம் நான்கு எனப் பொதுவாகக் கூறப்பெறும். ஆனால் வேதம் மூன்று என்பது ஒரு கொள்கையாக உள்ளது. “ஆரியர்கள் தமது வேதம் மூன்று என்ற கருத்தில் ‘வேதத்திரயி’ என்று வழங்குதல் காணப்படுகிறது” (திருநான்மறை விளக்கம் – ப. எண்: 42) என்ற அறிஞர் கருத்து இதனை உணர்த்துகிறது. இதுவேயன்றி, ‘வேதம் அனந்தம்’ என்ற பிறிதொரு வழக்கும் உண்டு. வேதம் எண்ணற்றது என்பது இதன் பொருளாகும். வேதத்திரயி, வேதம் அனந்தம் என்பன தமிழ்ச் சொற்களன்று. தமிழர்கள் கூறவில்லை. வேதம் நான்கா? மூன்றா? எண்ணற்றதா?

வேதமும் உபநிடதமும்:

வேதம் மந்திரம், பிராமணம், உபநிடதம் என்ற மூன்று கூறுகளாக உள்ளன எனக் கூறப்பெறுகிறது. “மந்திரங்கள் புலவர்களாலும், உபநிடதங்கள் தத்துவ ஞானிகளாலும் ஆக்கப்பட்டிருக்கக் கூடும்” (இந்தியத் தத்துவ ஞானம் – ப. எண்: 78) என்ற கருத்துக் குறிப்பிடத்தக்கது.

வேதத்தின் முடிவே உபநிடதம் (வேதாந்தம்) என்பர். அப்படியென்றால் வேதத்தின் முடிந்த முடிபான கருத்துக்களை உபநிடதம் கூறவேண்டுமே அன்றி மாறுபட்ட கருத்துக்களைக் கூறக்கூடாது. ஆனால் உபநிடதங்கள் வேதத்தை மறுத்து எழுந்தனவே என்பது புலப்படுகின்றது. “மந்திரங்களிலே காணப்படும் கருத்துக்களின் தொடர்ச்சியாகவும், பிராமணங்களில் கூறப்படுவனவற்றுக்கு மறுப்பாகவும் எழுந்தவையே உபநிடதங்கள்” (இந்தியத் தத்துவ ஞானம் – பக்கம். எண்: 18, 19) என்ற கருத்து இதனை வலுப்படுத்தும். எனவே வேதம் தோன்றிச் சிறிது காலத்திற்குள்ளேயே அவை தமக்குள் முரண்பட்டு ஒரு பகுதி பிறிதொரு பகுதியால் மறுக்கப் பெற்றுள்ளமை புலனாகிறது.

இந்நிலையில் தேவாரம் வேதம் என்றும், திருவாசகம் உபநிடதம் என்றும் கூறப்பெறும் கருத்தை எண்ணினால் நகையே தோன்றுகிறது. திருவாசகம், தேவாரத்தை மறுக்க எழுந்தது என்ற கருத்தல்லவா வெளிப்படும்.

முதன்மையான மூன்று:

இந்து சமயத்திற்கு அடிப்படையாக மூன்று நூல்கள் கூறப் பெறுகின்றன. அவை 1. உபநிடதங்கள், 2. பிரம்ம சூத்திரம், 3. பகவத் கீதை என்பன. இவை முதன்மையான மூன்று (பிரஸ்தானத்திரயம்) எனப் பெறும்.

இம்முதன்மையான நூல்களுள் நான்கு வேதங்கள் சேர்க்கப் பெறாததற்குக் காரணம் என்ன? உபநிடதம் வேதம் தான். உபநிடதத்தைச் சேர்த்தாலே வேதத்தைச் சேர்த்தது போலத்தான் என்றால் பிரஸ்தானத்திரயத்தைத் தொகுத்தவர்கள் வேதம் முழுமையும் சேர்த்திருக்கலாமே என்ற வினா எழுகிறது.

வேத நெறியைக் கண்டித்து எழுந்தவை உபநிடதங்கள். வேதம் பிராமணர்கள் கூறிய கன்ம நெறியையும், உபநிடதம் தத்துவ ஞானத்தையும் பேசுவன. எனவே வேதநெறி வேறு, உபநிடத நெறி வேறு என்பது புலப்படும். ஆகவே உபநிடதங்களைத் தத்துவ ஞானம் பேசும் சிவாகமங்களோடு இணைக்கலாமே அன்றி வேதத்தோடு இணைக்க வழியில்லை என்பது பெறப்படும்.

நால்வேதம் யாது?

நால்வேதம் என்பது பொதுவாக இருக்கு, யசூர், சாமம், அதர்வணம் என்பனவற்றையே குறிக்கிறது. ஆனால் அவற்றைத்தான் குறிக்குமா என்பதில் ஐயம் உள்ளது. பாரத்துவாசர் குடியில், அந்தணர் மரபில் பிறந்த நச்சினார்க்கினியர், “மறையாவன : தைத்திரியமும், பெளடியமும், தலவகாரமும், சாமுவேதமுமாம். இனி, வேத வியாதர் வரையறைப்படுத்திய காலத்து ஓதுகின்ற நான்கு வேதமுமாம்” (கலித்தொகை – கடவுள் வாழ்த்து உரை) எனக் கூறியுள்ளது சிந்திக்கத்தக்கது.

எனவே நான்மறை என்பதில் இருவகைகள் உள்ளன என்பன தெரியவருகிறது. முதலில் கூறப்பட்ட நால்வேதம் ஒரு தொகுப்பு என்பதும், வேத வியாசர் தொகுத்த நால்வேதம் வேறு தொகுப்பு என்பதுமாக இருப்பது காணக் கிடைக்கிறது. இதுவன்றி,

     “சாந்தோகன் பெளழியன் ஐந்தழல் ஓம்பு
      தைத்திரியன் சாம வேதி”

(நாலயிர திவ்வியப் பிரபந்தம் – பெரிய திருமொழி – வெருவாதாள் – பா.எண்:9)

எனப் பெரியாழ்வாரும் இருக்கு முதலிய வேதங்களாகத் திருமால் இருக்கிறான் எனக் கூறாமல் வேறு நால் வேதங்களைக் குறித்துள்ளார் என்பது அறியத்தக்கது.

வேதத்தை மறுத்த வேதவித்து:

அந்தணர்களுக்குப் பூணூல் சடங்கு முக்கியம் என்பர். தந்தையார் மனம் வாடக்கூடாது என்பதற்காக ஞானசம்பந்தர் இதற்கு உடன்பட்டார். பூணூல் சடங்கின் போது அந்தணர் நான்மறை ஓதினர். அவர்தம் வேதங்களை மறுத்து ஞானசம்பந்தர் எண்ணிறந்த புனித வேதங்களை ஓதினார்.

     “வருதிறத்தன் மறைநான்கும் தந்தோம் என்று
      மந்திரங்கள் மொழிந்தவர்க்கு மதுர வாக்கால்
      பொரு இறப்ப ஓதினார் புகலிவந்த
      புண்ணியனார் எண்ணிறந்த புனித வேதம்”

(பெரியபுராணம் – பா.எண்: 2167)

என்று கூறியுள்ளமை இதனைப் புலப்படுத்தும்.

அந்தணர் மறையினை நான்மறை என்றும், ஞானசம்பந்தர் ஓதியதனைப் புனித வேதம் என்றும் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். வேதம் எண்ணிறந்தன என்றும் கூறுகிறார். அவை தமிழ் வேதமா? வடமொழி வேதமா? என்பது தனி ஆராய்ச்சி.

மேலும் அதன்பின் ஞானசம்பந்தர் அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே என்றே அருளினார். காயத்ரி மந்திரம் ஓதவில்லை. இதனால் வேத வித்தான ஞானசம்பந்தர் வேத மந்திரங்களை விடப் புனிதமாகப் புனிதன் நாமம் (நமசிவாய) உள்ளது எனக் கொண்டிருந்தமை வெளிப்படுகிறது.

வைதிகர்களுக்கும் நான்மறையில் நம்பிக்கை இல்லை:

இன்று பொதுவாகச் சமயவாதிகள் நால்வேதத்தையும் சிறப்புடையதாகவே கருதுகின்றனர். ஆனால் வைதீகப் பிராமணர்கள் அவ்வாறு கருதுவதில்லை. பூணூல் அணியும் சடங்கைத் தாங்கள் பின்பற்றும் ஏதேனும் ஒரு வேதத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டுள்ளனர்.

யசூர் வேதிகள் ஆவணி அவிட்டத்திலும், இருக்கு வேதிகள் ஆவணி அவிட்டத்திற்கு முந்தைய நாளிலும், சாம வேதிகள் விநாயகர் சதுர்த்தி நாளிலும் பூணூல் அணிகின்றனர். ஆயிரத்தில் ஒருவரே அதர்வண வேதத்தைப் பின்பற்றிப் பூணூல் அணிகிறார் எனக் கூறப்படுகிறது.

இதிலிருந்து தெரிவது என்ன? வேதத்தைப் பின்பற்றி நடக்கிறோம் எனக் கூறிக்கொள்பவர்களும் நான்கு வேதங்களையும் உடன்பட்டு நடப்பதில்லை என்பது தானே. அதர்வண வேதத்தைப் பின்பற்றுபவர்கள் குறைவதற்குக் காரணம் உண்டு. அது நல்ல மந்திரங்களை உடையதாக இல்லை என்று அவர்களே கருதுகிறார்கள். “அதர்வம், வேள்வி முதலிய ஒழுக்கம் கூறாது பெரும்பான்மையும் உயிர்கட்கு ஆக்கமேயன்றிக் கேடும் சூழும் மந்திரங்களும் பயிறலின்” (தொல்காப்பியம் – பொருள் – புறம் – நூல். எண். 20- உரை) என நச்சினார்க்கினியர் கூறியுள்ளமை கொண்டு இதனை அறியலாம்.

இறுவாய்:

வேதம் சிவனால் செய்யப் பெறவில்லை. வேதம் எண்ணற்றன. வேதம், உபநிடதம் இவை வேறுவேறு நோக்கும் போக்கும் உடையன. பிரஸ்தானத்திரயத்தில் வேத்திற்கு இடமில்லை. நான்மறை – இருக்கு, யசூர், சாமம், அதர்வணம் அன்று. சைவ சித்தாந்தியான திருஞானசம்பந்தரும், வைதீகப் பிராமணர்களும் நால்வேதத்தையும் உடன்படவில்லை என்பன பற்றி ஒருவாறு சிந்திக்கப்பெற்றது. அறிவாளர், ஆய்வாளர், சமயவாதிகள், சைவ சித்தாந்திகள் மேலும் சிந்தியுங்கள்.

     “ஆதி மறை ஓதி அதன் பயன் ஒன்றும் அறியா
      வேதியர் சொல் மெய்யென்று மேவாதே”

- உமாபதி சிவாச்சாரியார


--திருச்சிற்றம்பலம்--

Back to Top