இது அவன் திருவுரு

- முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு

இறை, உயிர், தளை என்று சைவசித்தாந்தம் கூறும் முப்பொருள்களுள் இறை ஏனையவற்றைக் காட்டிலும் பேராற்றல் வாய்ந்தது. தன்னுரிமை உடையது. உண்மை இயல்பு, பொது இயல்பு என்னும் இரண்டு இயல்புகளை உடையது. இறை தன்னையே நோக்கி நிற்கும் நிலையில் உண்மை இயல்புடையதாகும். உலகை நோக்கி நிற்கும் நிலையில் பொது இயல்பு உடையதாகும். உண்மை இயல்பில் சிவம் என்று கூறப்பெறும். பொது இயல்பில் தலைவன் (பதி) என்று கூறப்பெறும்.

உண்மை இயல்பு

உண்மை இயல்பில் சிவம் பரம் பொருளானது அருவம், உருவம், அருவுருவம் ஆகிய எதுவும் இல்லாதது. குணம் குறி அற்றது. மலமற்றது. தனிப்பொருளானது. தோற்றமும் அழிவும் இல்லாதது. உயிருக்கு உணர்வானது. அசைவுபடாதது. எல்லைகளுக்கு உட்படாதது. இன்ப வடிவமானது. இது இறைவனின் உண்மை இயல்பாகும்.

பொது இயல்பு

தலைவன் (பதி) உயிர்களுக்கு அருளும் பொருட்டு இச்சா சத்தி, ஞான சத்தி, கிரியா சத்தி, என்ற மூன்று ஆற்றல்களோடு கூடினிற்பான். திருவருளே திருமேனியாகக் கொள்வான். அப்பொழுது அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்று திருமேனிகளைக் கொள்வான்.

அருவம், அருவுருவம்

அருவம் உயிர்களால் அறிய இயலாதது. அருவத்திலிருந்து நேரே உருவம் தோன்றாது. அருவத்திற்கும் உருவத்திற்கும் இடைப்பட்டு நிற்பது, அருவுருவத்திருமேனி சாதாக்கியம் எனப்படும். இதுவே சிவலிங்கத் திருமேனியாகும். இத்திருமேனி சிவத்திற்கு அடையாளமாகும்.

     “காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
      நீணாகம் பூண்டார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”

எனச் சேக்கிழார் பெருமான் அருவத்திற்கும் உருவத்திற்கும் காரணமாகவும், சிவபெருமானுக்கு அடையாளமாகவும் இருப்பது சிவலிங்கம் என எடுத்துக் காட்டுகிறார். இலிங்கம் தூய தமிழ்ப்பெயர். இலங்குவது - இலிங்கம். விளங்கித் தோன்றுவது என்பது பொருளாகும்.

உருவம்

எந்த வடிவத்தையும் எடுக்கும் ஆற்றல் வாய்ந்தவன் இறைவன். உருவத்தில் இறைவன் வரமாட்டான் என்றாலோ அல்லது உருவம் இல்லை என்றாலோ அவன் உருவம் எடுக்கும் ஆற்றல் அற்றவன் என ஆகும். இதனை,

     “குறித்தது ஒன்று ஆகமாட்டாக் குறைவு இலன் ஆதலானும்
      நெறிப்பட நிறைந்த ஞானத் தொழிலுடை நிலைமையானும்
      வெறுப்பு ஒரு விருப்புத் தன்பால் மேவுதல் இலாமையானும்
      நிறுத்திடும் நினைந்த மேனி நின்மலன் அருளினாலே”

எனச் சிவஞானசித்தியார் குறிப்பிடுகிறது.

இறைவனுடைய திருமேனிகளை மாகேசுவரமூர்த்திகள் என்பர். இவை இருபத்தைந்து எனவும் கூறுவர்.

1. சேயிடைச் செல்வர் (சோமாஸ்கந்தர்)

2. ஆடல்வல்லான் (நடராசர்)

3. விடைப்பெருமான் (இடபாரூடர்)

4. மணவழகர் (கலியாண சுந்தரர்)

5. பிறைமுடிப்பெருமான் (சந்திர சேகரர்)

6. இரந்துண்ணியார் (பிட்சாடனர்)

7. காமனை வென்ற கண்ணுதற் கடவுள் (காமதகனர்)

8. காலகாலர் (காலாந்தகர்)

9. சலந்தரனைப் பிளந்தார் (சலந்தரவதர்)

10. முப்புரம் எரித்தார் (திரிபுராந்தகர்)

11. யானை உரிபோர்த்தார் (கசசம்காரர்)

12. வீரபத்திரர்

13. தென்முகப்பரமன் (தட்சிணாமூர்த்தி)

14. கானவேடர்திருவடிவு (கிராதமூர்த்தி)

15. திருநீலகண்டர்

16. கங்காளர்

17. சுடராழி ஈந்தோன் (சக்ரதானமூர்த்தி)

18. யானை முகனுக்கருள் செய்தோன் (கசமுக அனுக்கிரகர்)

19. சண்டீசருக்கு அருள் செய்தோன்

20. ஒற்றைக்காற் பெருமான் (ஏகபாதமூர்த்தி)

21. இலிங்கத்தே தோன்றியவர் (லிங்கோத்பவர்)

22. நல்லிருக்கை நாதர் (சுகாசனர்)

23. அம்மையப்பர் (உமாசகிதர்)

24. மாலொருபாகர் (அரிஅத்தர்)

25. உமையொருபாகர் (அர்த்தநாரீசுவரர்)

இவைபோக சரபமூர்த்தி, திரிபாதமூர்த்தி, பயிரவர் முதலிய பல மூர்த்திகளும் மாகேசுவர மூர்த்திகள் எனப்படுகின்றன.

மாகேசுவர மூர்த்தங்கள் இருப்பத்தைந்து என்றும், அறுபத்து நான்கு என்றும் ஆகமங்கள் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது. ஆகம முரண்களில் இதுவும் ஒன்று என்றே கொள்ள வேண்டியுள்ளது. (ஆகமங்கள் பல வகைகளில் முரண்பாடுடையன என்பது சிவஞானமுனிவர் கருத்து. இது குறித்துச் சிவஞான மாபாடியத்தில் விரிவாக எழுதியுள்ளார்)

இறைவன் மதுரை மாநகரில் பன்றிக்குட்டிகளுக்கு பால் கொடுக்கும் பொருட்டுத் தானே தாய்ப்பன்றியாகத் தோன்றிப் பால் கொடுத்தான். கயிலைமலையான் கரும்பன்றிகளுக்குப் பால் கொடுத்தது அவன் பேரிரக்கமே.

     “ஏனக் குருளைக்கு அருளினை போற்றி
      மானக் கயிலை மலையாய் போற்றி”

என மணிவாசகப் பெருமான் இந்நிகழ்ச்சியைக் கூறுகிறார்.

உயிர்களின் பொருட்டு இறைவன் எடுக்கின்ற அருள் திருமேனிகளை எண்ணிக்கை கொடுத்து ஒரு வரையறைப்படுத்த முயல்வது பொருத்தமில்லாதது. மாகேசுவரன் எடுக்கின்ற வடிவங்கள் அனைத்துமே மாகேசுவர மூர்த்தம் தான். அரன்தரும் சீர்நிலை (சிவஞானசித்தியார் 328) என்னும் தொடருக்கு உரை எழுதிய சிவஞானமுனிவர்“அரன்தரு சீர்நிலை என்றது அறுபத்து மும்மை நாயன்மார் முதலிய சிவபத்தர் பொருட்டாக ஆண்டாண்டு வெளிப்பட்டருளி மறையும் மூர்த்தங்கள் எல்லாவற்றினையும் எனவும் கொள்க” எனக் குறித்துள்ளமை சிறப்பான ஒன்றாகும். மூவகைத் திருமேனிகளையும் இறைவன் கொள்வது நாம் பிறவி நீங்கி வீடுபேறடைவதற்காகவே ஆகும்.

     “உருமேனி தரித்துக் கொண்டது என்றலும் உருஇறந்த
      அருமேனி அதுவும் கண்டோம் அருஉரு ஆனபோது
      திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தம்
      கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவுகாணே”

என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகிறது.

இறைவன் எண்குணன்

இறைவன் எட்டுக் குணங்களைக் கொண்டவன்.

1. தன்வயம் உடைமை

2. தூய உடம்பு உடைமை

3. இயற்கை உணர்வு உடைமை

4. முற்றறிவு உடைமை

5. இயல்பாகவே பாசமின்மை

6. பேரருள் உடைமை

7. முடிவில் ஆற்றல் உடைமை

8. வரம்பில் இன்பம் உடைமை

இவை அக்குணங்களாகும்.

     “கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
      தாளை வணங்காத் தலை”

என வள்ளுவர் சிவபெருமானின் எண்குணங்களைச் சுட்டியுள்ளார். சிறந்த உரையாசிரியராகிய பரிமேலழகரும் இவை சிவபெருமானின் எட்டுக் குணங்களே என உறுதிப்படுத்தி உள்ளார். இவ்வெட்டுக் குணங்களில் பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை ஆகிய இரு குணங்களும் வெளிப்படையாகத் தெரியும்படி இறைத்திருமேனி அமைந்துள்ளது.

இறை உறுப்புகள்

இறைத் திருமேனியில் உள்ளவற்றை 1. அங்கம் 2. பிரத்யாங்கம், 3. சாங்கம், 4. உபாங்கம் எனக் கூறுவர். அங்கமாவது தலை, முகம், இதயம், முதலியன. பிரத்யாங்கமாவது கண், மூக்கு, கழுத்து, மார்ப்பு, தோள், கொப்பூழ், கை, கால், விரல்கள் முதலியன. சாங்கமாவது சூலம், மழு, மான், வாள், வச்சிரம், பாம்பு, முதலியன.(ச + அங்கம் = சாங்கம் - அங்கத்துடன் கூடியது) உபாங்கமாவது ஆடை, மாலை, அணிகலன், பூணூல் முதலியன.

சாங்கமாகவும் உபாங்கமாகவும் உள்ளவை இறைவனுடைய அளப்பரிய ஆற்றலையும், இரக்கத்தையும் வெளிப்படுத்துவனவாகும். இறைவன் முற்றறிவு உடையவன். அறிவின் பயன் இரக்கமாகும்.

     “அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின் நோய்
      தன்நோய் போல்போற்றாக் கடை”

என்பது திருவள்ளுவர் கூற்று. சிற்றறிவு உடைய உயிர்களே பிறிதொரு உயிரின் துன்பத்தைத் தன்துன்பமாகக் கருத வேண்டுமெனில், பேரறிவு உடைய பரம்பொருள் எத்தகு இரக்கத்தை உயிர்களின் மேல் செலுத்து என்பதைக் கூறவேண்டா.

உமையொரு பாகன்

இறைவன் அறிவு வடிவமானவன். அம்மை இரக்க வடிவமானவள். அறிவும், இரக்கமும் பிரிப்பின்றி இருப்பன. இதனை ஒன்றாக காட்டும் பொருட்டு உமையொருபாகர் திருவுருவம் அமைந்துள்ளது. இக்கோலமே அவருடைய பழைய திருவடிவமாகும்.

     “தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
      பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியும்
      சூலமும் தொக்கவளையும் உடைத் தொன்மைக்
      கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ”

என்று மணிவாசகப் பெருமான் இறைவனின் தொன்மைக் கோலத்தைக் கூறியுள்ளார்.

வெண்பிறை

     “இலங்கு வெண்பிறை சூடிஈசன் அடியார்க்குக்
      கலங்கு நெஞ்சமிலை காண்”

என்பது பழம்பாடல். இறைவன் திருமுடியில் பிறை இலங்கித் தோன்றுகிறது. இதை விளக்கமாகத் தெரிய வைத்தவன் இறைவன்.

27 நாள் மீன்களும் தக்கனுக்கு மக்கள். அவர்களைத் திங்களுக்கு மணம் முடித்து வைத்தான் தக்கன். அவர்களில் கார்த்திகை, உரோகிணி என்ற இரு பெண்டிரிடத்து மட்டும் அன்பு கொள்ளவில்லை. அதனால் வருந்திய அவர்கள் தந்தையிடம் முறையிட்டனர். தக்கன் பலமுறை எச்சரித்தும் பயனில்லை. இறுதியில் திங்களின் கலைகள் ஒவ்வொன்றாக அழியும்படி சபித்தான். கலைகளை இழந்த திங்கள், தேவர்கள், இந்திரன், பிரமா, திருமால் முதலியோரிடம் சென்று திருவடி பணிந்து வேண்டினான். அவர்கள் தக்கனுக்குப் பயந்து ஒருவர் மற்றொருவரிடம் அனுப்பினர். யாரும் உதவவில்லை. இறுதியாகத் திங்கள் ஒற்றைக் கலையுடன் இறைவன் திருவடியில் வீழ்ந்தது. அதன்பால் இரங்கிய கடவுள் அதனைத் தன் தலைமேல் சூடிக்கொண்டான். முன்பு யாருடைய கால்களில் எல்லாம் வீழ்ந்தானோ, அவர்கள் எல்லாரும் இப்போது இறைவனுடைய பிறையையும் சேர்த்துத் தொழுதார்கள். இக்கருத்துக்களை எல்லாம் தொகுத்து அறிந்திருந்த நம்பழந்தமிழ்ச் சான்றோர்,

     “பிறைநுதல் வண்ணம் ஆகிநின்று அப்பிறை
      பதினெண் கணனும் ஏத்தவும் படுமே”

- புறநானூறு கடவுள் வாழ்த்து

எனக் குறித்தனர்.

பதினெண் கணங்களாவன: 1. தேவர், 2. அசுரர், 3. முனிவர், 4. கின்னரர் , 5. கிம்புருடர், 6. கருடர், 7. இயக்கர், 8. இராக்கதர், 9. கந்தருவர், 10. சித்தர், 11. சாரணர், 12. வித்யாதரர், 13. நாகர், 14. பூதங்கள், 15. வேதாளங்கள், 16. தாரகைகள், 17. ஆகாயவாசிகள், 18. போகபூமியோர் என்போராவர்.

என் கால்களில் வீழ்ந்து அடைக்கலமானவனைத் தலையிலே வைத்து உயர்த்துவேன் என்ற பேரிரக்கத்தை இச்செயல் உணர்த்துகிறது. “பித்தா பிறைசூடிப் பெருமானே” அருளாளா எனச் சுந்தரர் சுட்டிகாட்டியுள்ளார்.

கறைமிடறு

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். வாசுகி என்னும் அப்பாம்பு நஞ்சினைக் கக்கியது. இரண்டு நஞ்சுகளும் சேர்ந்து ஆலம் + ஆலம் = ஆலாலம் ஆயிற்று. (ஆலம் - நஞ்சு) நஞ்சின் வேகம் தாங்காது தேவர் அஞ்சி ஓடினர். அசுரர் உடல் கறுத்தனர். தேவர் இறைவனிடம் முறையிட்டு அழுதனர். சிற்றுயிர்க்கு இரங்கிய இறைவன் அதனைத் திரட்டித்தரத் தான் உண்டான். இறைவனுடைய இப்பேரிரக்கத்தைப் போற்றாதார் இலர்.

     “உண்டாய் நஞ்சை உமையோர் பங்கா என்றுள்கித்
      தொண்டாய்த் திரியும் அடியார் தங்கள் துயரங்கள்
      அண்டா வண்ணம் அறுப்பான் எந்தை”

எனத் திருஞானசம்பந்தரும்,

     “பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினைப்
      பங்கி உண்டதோர் தெய்வம் உண்டோ சொல்லாய்”

எனத் திருநாவுக்கரசரும்,

     “வங்கமலி கடல்நஞ்சை வானவர்கள் தாம்உய்ய
      நுங்கி அமுது அவர்க்களருளி”

எனச் சுந்தரரும்,

     “தேசுடையாய் என்னை ஆளுடையாய் சிற்றுயிர்க்கு இரங்கிக்
      காய்சின ஆலம் உண்டாய் அமுதுண்ணக் கடையவனே”

என மாணிக்கவாசகரும் இக்கருணைத் திறத்தை பாடியுள்ளனர். பக்திக் காலத்தில் மட்டுமின்றி மிகப் பழங்காலம் தொட்டு இறைவனின் இப்பேரிரக்கத்தை நம் முன்னோர் கருத்தில் கொண்டுள்ளனர்.

     “கறைமிடறு அணியலும் அணிந்தன்று அக்கறை
      மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே”

என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து கறைமிடற்றைச் சிறப்பிக்கின்றது.

மேலும் நீலமணி மிடற்று ஒருவன் (புறம்), மணிமிடற்று எண்கையாய் (கலித்தொகை), காரி உண்டிக் கடவுள் (மலைபடுகடாம்), மணிமிடற்று அந்தணன் (அகம்) என்னும் தொடர்கள் சங்க இலக்கியங்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. இளங்கோவடிகளும் இக்கருத்தில் தம் சிந்தையைச் செலுத்தியுள்ளார்.

     “விண்ணோர் அமுதுண்டும் சாவ ஒருவரும்
      உண்ணாத நஞ்சுண்டு இருந்தருள் செய்குவாய்”

என்பது சிலப்பதிகாரமாகும்.

கங்கை

பகீரதன் வேண்டிக் கொள்ள கங்கை ஆகாயத்திலிருந்து ஆயிரம் முகத்தோடு பூமியில் பாய்ந்தாள். பாய்ந்து வரும் வெள்ளத்தால் பூமி தாங்காது என்பதனால், சிவபரம் பொருள் தன் சடையின் ஒருமயிர் நுனியில் கங்கையை அடக்கினான். பின்னர் சிறிது வெளியே விழும்படி அருளினான். கங்கையை இறைவன் சடையில் அடக்கியமை அவன் பேராற்றலையும், உலகம் அழியாமல் காத்தமை அவன் பேரிரக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.

இறைவன் கங்கையை அடக்கியதையும், அவ்வாறு செய்திராவிட்டால் ஏற்படும் கேட்டினையும் மாணிக்கவாசகர்,

     “மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
      சலமுகத்தால் அவன்சடையில் பாயுமது என்னேடீ
      சலமுகத்தால் அவன்சடையில் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
      பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ”

என்று கூறியுள்ளார். கங்கையை இறைவனின் மனைவி எனக்கூறும் இலக்கிய வழக்கம் உண்டு. “ஏலவார் குழலிமார் தங்கள் நாயகனே” – திருவாசகம்.

கரியின் உரி

இறைவன் யானைத் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர். கயாசுரன் என்ற அரக்கன் யானை வடிவு கொண்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் செய்தான். இறைவன் யானையைத் திருவடிகளால் மிதித்துக் கைகளால் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார்.

தாருகாவனத்து முனிவர் அபிசார வேள்வி செய்து யானையைத் தோற்றுவித்து இறைவனை அழிக்க ஏவினர். அவர் யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார். இவ்வாறு இருவகையான வரலாறுகள் கூறப்பெறுகின்றன. இறைவனின் இவ்வரிய செயலை,

     “பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்”

என்று அப்பரடிகளும்,

     “குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழற்சடையன்””

என்று சுந்தரமூர்த்திகளும் குறித்துள்ளனர்.

யானையின் தோலை உரித்தல் இயலாது. யானையின் பசுந்தோல் மனிதர் உடம்பில் பட்டால் கொல்லும் என நச்சினார்க்கினியர் சீவகசிந்தாமணி உரையில் குறித்துள்ளார். யானை உரி போர்த்தது சிவபரம் பொருளின் பேராற்றலைக் குறிக்கிறது.

முனிவர் ஏவிய பிற

தாருகாவனத்து முனிவர் தம் வேள்வியில் உடுக்கை, நெருப்பு, மான், சிங்கம், புலி, பாம்பு, முயலகன் முதலிய பலவற்றை உண்டாக்கினர். இறைவனை அழிக்க ஏவினர். உடுக்கை, நெருப்பு, மான் இவற்றை இறைவன் தன் கைகளில் ஏற்றார். சிங்கம், புலி முதலியவற்றைக் கொன்று தோலை உரித்தார். புலித்தோலை ஆடையாக உடுத்திக் கொண்டார்.

     “பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து” – சுந்தரர்

சடை, மார்பு, வயிறு, இடுப்பு முதலிய இடங்களில் பாம்புகளை அணிகலங்களாக அணிந்து கொண்டார். முயலகனைக் காலின் கீழே போட்டு எழுந்திராமல் மிதித்துக் கொண்டார். இவையனைத்தும் இறைவனின் வரம்பில் ஆற்றல் உடைமையை உணத்துகின்றன.

திருமேனி – ஒரு நகைச்சுவை

இறைவன் திருவுருவில் பாதியைக் கொண்டுள்ள அம்மை மேனியில் கிடந்த பாம்பைக் கண்டு மதிமயங்கினார். தலைமேல் கிடந்த பாம்பு அம்மையை மயில் எனக் கருதி ஐயுற்றது. பாம்பைக் கண்டு பிறை தன்னை விழுங்கி விடுமோ என ஏங்கியது. இவையனைத்தும் கண்டு இறைவன் திருமுடிமேல் இருந்த வெண்தலை சிரித்து.

     “கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுறக்
      கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுறக்
      கிடந்த நீர்ச் சடைமிசை பிறையும் ஏங்கவே
      கிடந்த தான் நகுதலைக் கெடில வாணரே”

இவ்வாறு இறைவன் திருமேனியை ஒரு நகைச்சுவை நாடகமாக்கி வெண்தலையை மட்டுமின்றி நம்மையும் சிரிக்கவைக்கிறார் அப்பர் பெருமான்.

பகை தீர்த்த பண்பன்

இறைவன் கொள்கின்ற உருவத் திருமேனிகளைப் போகவடிவம், வேகவடிவம்(கோர வடிவம்), யோகவடிவம் என மூன்றாகக் கொள்வது மரபு. இவை ஒன்றோடு ஒன்று ஒவ்வா வடிவங்கள்.

     “ஒன்றோடு ஒன்று ஒவ்வா வேடம் ஒருவனே தரித்துக் கொண்டு
      நிற்றலால் உலகம் நீங்கி நின்றனன்”

எனச் சிவஞானசித்தியார் இக்கருத்தை எடுத்துக் காட்டுகிறது. இதுகாறும் நாம் திருமேனியில் கண்ட அங்கம், பிரத்யாங்கம், சாங்கம், உபாங்கம் இவைகளும் ஒன்றோடு ஒன்று ஒவ்வாதனவே.

     “ஆர்க்கின்ற நீரும் அனலும் மதியும் ஐவாயரவும்
      ஓர்க்கின்ற யோகும் உமையும் உருவும் அருவும் வென்றி
      பார்க்கின்ற வேங்கையும் மானும் பகலும் இரவுமெல்லாம்
      கார்க்கொன்றை மாலையினார்க்கு உடன்ஆகிக் கலந்தனவே”

என்பது பொன்வண்ணத்தந்தாதி. (கங்கை) நீரும் நெருப்பும், நிலவும் பாம்பும், இறையின் யோக நிலையும் உடன் உமையம்மையும், உருவமும் அருவமும், புலியும் மானும், பகலும் (வலக்கண் கதிரவன்) இரவும் (இடக்கண் திங்கள்), என இவை அனைத்தும் தமக்குள் மாறுபட்டனவே. ஆனால் இவற்றின் பகைதீர்த்து அருளும் பண்பனாக இறைவன் இருந்தருள் செய்கிறான். அறிவின் முன் வேறுபாடில்லை, இரக்கத்தின் முன் பகையில்லை என்பதே இதன் கருத்தாகும்.

     “அன்றும் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
      இன்றும் திருவுருவம் காண்கிலேன் – என்றுந்தான்
      எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
      எவ்வுருவோ நின்னுருவம் ஏது?”

-காரைக்காலம்மையார

 


--திருச்சிற்றம்பலம்--

Back to Top