- முனைவர் அ. மா. இலட்சுமிபதிராசு
நட்சத்திரங்கள் 27 என்பது அனைவரும் அறிந்ததே. அவற்றுள் சிறப்புடையன இரண்டு. ஒன்று திருவாதிரை. மற்றது திருவோணம். திரு என்பது அடைமொழி. ஆதிரை, ஓணம் என்பதே அவற்றின் பெயர். திரு - அழகு, செல்வம், இலக்குமி, தெய்வீகம், மங்கல மொழி, மேன்மை எனப் பல பொருள் உடையதெனினும் கண்டாரால் விரும்பப்படும் தன்மை என்னும் சிறப்புப் பொருளும் உடையது. திருஞானசம்பந்தரின் திருவவதாரத்தை விளக்க வந்த சேக்கிழார்,
“அருக்கன் முதற் கோளனைத்தும் அழகிய உச்சங்களிலே
பெருக்க வலியுடன் நிற்கப் பேணிய நல்லோரை எழத்
திருக்கிளரும் ஆதிரை நாள் திசை விளங்க”
ஞானசம்பந்தப் பெருமான் அவதரித்ததாக கூறுகிறர். திருக்கிளரும் ஆதிரை நாள் - செம்மை மிகும் திருவாதிரைத் திருநாள் என்றும், சிவபெருமான் உகந்த திருவாதிரைத் திருநாள் என்றும் உரை விளக்கம் தருகிறார் சிவக்கவிமணி. மேலும் திரு - சிவத்தன்மை - செம்மை, விண்மீன்களுள் திரு என்ற சிறப்படைமொழி பெற்றது இந்நாள் என்பது குறிப்பு எனவும் கூறுகிறார்.
சைவர்களுக்கு மார்கழித் திருவாதிரை சிறப்புடைய நாளாகும். பண்டைக் காலந்தொட்டுத் திருவாதிரையில் முதுமுதல்வனாகிய சிவபிரானுக்கு விழாச் செய்வது மரபாக உள்ளது. சிவபெருமான் சிவந்த நிறமுடையவன். “சிவனென்னும் நாமம் தனக்கே உடைய செம்மேனி அம்மான்” என்னும் அப்பரடிகளின் அருள்வாக்கு இதனை உணர்த்தும். சிவந்த நிறமுடைய பெருமானுக்குச் செம்மீனாகிய திருவாதிரை உடைமைப் பொருளாயிற்று. செம்மீனுக்குச் சிவபிரான் உரியவனானான். இறைவன் பேரண்டம் முழுமையுமே உடைமைப் பொருளாய் உடையவன் தானே? ஆதிரை ஒன்றை மட்டுமா உடையவன்.
“மன்னிய நாள்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப் - பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால்
ஊர்திரை நீர்வேலி உலகு”
என்பது முத்தொள்ளாயிரத்துக் கடவுள் வாழ்த்து.
அசுவனி முதலான நட்சத்திரங்களையும், திங்களையும், கனலுதலைச் செய்கின்ற கனலியை(ஞாயிறு)யும் முற்காலத்திலேயே படைத்தவன் இறைவன். ஆனால் இவ்வுலகம் அவன் ஆதிரை மீன் ஒன்றை மட்டுமே படைத்தது போல் ஆதிரையான் ஆதிரையான் என்று சொல்லிச் சொல்லி மயக்கம் அடைகிறது என்பது மேற்கண்ட பாடல் கொண்டுள்ள பொருளாம்.
ஆதிரைமீன் சிவனைப் போல எப்பொழுதும் ஆடிக் கொண்டிருப்பதாலும், சிவந்த நிறம் உடைமையாலும், பிறை நிலாவினோடு இடையே நோக்குங்கால் அரனைப் போல்த் தோன்றுதலாலும் ஆதிரை நாள்மீன், இறை இயல்பைக் கொண்டமை அறிக.
பிரமன், சரசுவதி தேவியைச் சிருட்டித்துத் தான் புணரச் செல்லுகையில் சரசுவதி மானுருக் கொண்டோடினாள். பிரமனும் அவ்வுருக்கொண்டு தொடர்ந்தான். தேவர் வேண்டுகோளால் சிவமூர்த்தி வேடுருக் கொண்டு ஆண்மானை எய்ய, அதினின்றும் ஒரு சோதி தோன்றி ஆதிரை நாளாயிற்று. இது ஆதிரை நாள்மீனின் தோற்றம் பற்றி அபிதானசிந்தாமணியின் கூற்று.
ஆதிரை நாளில் சந்திரன் ஞாயிறுக்கு நேர் எதிரே நிற்கிறது. இவ்விரண்டுக்கும் நடுவிலிருந்து ஆதிரைக் கூத்தன் அருளைப் புரிகின்றான். இந்நிலையில் சந்திரன் மிதுனராசியில் இருக்கின்றான். மிதுனராசி என்பது மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம் ஆகிய மூன்று நட்சத்திரங்களும் பங்கு கொள்ளும் இடமாகும். மிருகசீரிடத்திற்கு உரிய கோள் செவ்வாய். இது சிவந்த நிறமுடையது. புனர்பூசத்திற்க்குரியது வியாழன். இது பொன் நிறமுடையது. திருவாதிரை இவை இரண்டுக்கும் நடுவிருந்து இவற்றின் ஒளியை விளங்கச் செய்கிறது.
முதன்மை வாய்ந்த இறைவனை, ஆதிரையின் ஒளி உலகில் பரவுங்காலத்து வழிபடுதல் அருள் பெறுவதற்கு நல்லதெனக் கண்டு வழிபட்டு ஆதிரை விழாக் கொண்டாடினர் நம் பண்டைத் தமிழ்ச் சான்றோர். ஆதிரை நாள் விழாவின் பழமையை நாம் திருந்து மொழிப் புலவர் அருந்தமிழ் ஆய்ந்த சங்கம் என்னும் துங்க மலி கடலுள் அரிதின் எழுந்த பரிபாட்டமுதம் எனச் சான்றோரால் புகழ்ப் பெற்ற பரிபாடலின் மூலம் அறியலாம்.
“கனைக்கும் அதிர்குரல் கார்வானம் நீங்கிப்
பனிப்படு பைதல் விதலைப் பருவத்து
ஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து
மாயிருந்திங்கள் மறுநிரை ஆதிரை
விரிநூல் அந்தணர் விழவு தொடங்க
புரிநூல் அந்தணர் பொலங்கலம் ஏற்ப”
என்பது பரிபாடல். கார்காலத்து முகில்கள் முழங்க, திசைகள் அதிர்வதற்குக் காரணமான இடியொலி நீங்காமல் நின்றது. மிகுந்த பனியினாலே குளிரால் நடுக்கஞ் செய்யும் முன்பனிக்கலாம். ஞாயிறு சுடுதல் இன்றிக் குளிர்ந்த கடைமாரியை உடைய மார்கழிக் காலம். மிகப்பெரிய திங்கள் தன்னகத்துள்ள களங்கத்தோடே வளர்ந்து நிறைந்த திருவாதிரைத் திருநாள். அந்நாளில் மெய்நூல்களை அறிந்துணர்ந்த சான்றோர் அத்திருவாதிரைக்குத் தெய்வமாகிய இறைவனுக்குத் திருவிழாவினைத் தொடங்கினார். முப்புரிநூலுடைய அறவோர் அவ்விழாவில் இறைவனுக்குப் பலிப்பொருள் இட்ட பொற்கலங்களை ஏந்தி நின்றனர் எனப் பண்டைக்கால ஆதிரை நாள் விழா பரிபாடலில் பேசப்படுகிறது. மேலும் பரிபாடலில் திருவாதிரை நாள் “மீன் சடை” என்னும் பெயரால் குறிக்கப்படுகிறது. சடை - சடையை உடைய சிவபெருமானைத் தெய்வமாக உடைய திருவாதிரையைக் குறிக்கிறது. சிவனை “ஆதிரை முதல்வன்” என்றும் பரிபாடல் அழகுறக் கூறுகிறது.
மண்ணில் பிறந்தார் பெறும்பயன் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு காண்பதல்லவா? அத்தகு விழாக்கள் பல எனினும் திருவாதிரைத் திருவிழா முதன்மைத் தன்மையைப் பெறுகிறது.
“ஊர்திரை வேலை உலாவும் உயர்மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றங்கொள்சே ரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்”
என ஞானசம்பந்தப் பெருமான் குடத்தில் எலும்பாய்க் கிடந்த பூம்பாவையினை ஆதிரை நாள் காணாமல் நீ அழியலாமா? என அழைத்து மண்ணினில் பிறந்தார் பெறும் உண்மைப் பயனை உணர்த்தினார்.
திருநாவுக்கரசர் பெருமான் திருவாதிரைத் திருநாளின் பெருமையை விளக்குவதற்காகத் திருவாதிரைத் திருப்பதிகம் ஒன்றை அருளிச் செய்துள்ளார்.
“துன்பம் நம்மைத் தொழாத நாள்கள் என்பாரும்
இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும்
நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும்
அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்”
என்கிறார் நாவுக்கரசர். திருவாரூரில் ஆதிரை நாள் விழாக் கொண்டாடப் பெறுகிறது. முத்துவிதானத்தோடு, பொற்காம்புடைய கவரி வீசப்பெறும் சிறப்போடு பெருமான் திருவாதிரை நாளில் திருவீதியில் திருக்காட்சி நல்குகிறான். ஆடவரும், பெண்டிரும், விரதியரும் சூழ்ந்து நிற்கின்றனர். உம்மை நாங்கள் வழிபடாத நாட்கள் துன்பம் தரும் நாட்கள். ஆதலால் உம்திருவடித் தொண்டில் எம்மை எப்போதும் செயற்படுத்துங்கள் என விண்ணப்பித்தனர். நமது விண்ணப்பமும் அது தானே?
திருவாதிரை நாள்மீனின் தன்மை, ஆதிரை நாள் விழாவின் தொன்மை, அந்நாளில் கோள்கள் நிற்கும் நிலை, அற்றை நாள் வழிபாட்டு விண்ணப்பம் இவை இச்சிந்தனையில் இயன்ற அளவு கூறப்பெற்றன. இத்தகு சிறப்புடைய திருவாதிரைத் திருநாளில் ஆதிரை நன்னாளானை வழிபட்டு உய்தல் நம்மனோர் கடன்.
--திருச்சிற்றம்பலம்--