- முனைவர் அ.மா.இலட்சுமிபதிராசு
இறைவன் எட்டு வடிவங்களை உடையவன். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், திங்கள், கதிரவன், உயிர் ஆகியனவற்றைத் தனக்கு உருவமாகக் கொண்டவன். இவற்றுடன் ஒன்றாயும், உடனாயும், வேறாயும் நிற்கும் ஆற்றல் உடையவன். எப்பொருளுக்கும் உள்ளும், அப்பொருளைக் கடந்தும் நிற்கும் தன்மையாளனாகிய இறைவனைக் கடவுள் என்னும் அருமைத் திருப்பெயரால் நம்முன்னோர் அழைத்தனர் (கட + உள் = கடவுள்).
ஞாயிற்றின் ஒளியால் உலக உயிர்கள் வாழ்கின்றன. ஞாயிற்று வழிபாடு உலகம் முழுவதும் இருந்துள்ளது. தமிழர் ஞாயிற்றினைப் பண்டைக்காலம் முதல் வழிபட்டு வந்துள்ளனர். “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்””’” (சிலப்பதிகாரம் – மங்கல வாழ்த்துப் பாடல்) என இளங்கோவடிகள் ஞாயிற்றைப் போற்றியுள்ளார். சூரியன் இறைவனுடைய திருவுருவே எனத் திருமுறைகள் கூறுகின்றன. “அருக்கனாவான் அரன் உரு அல்லனோ” (5ஆம் திருமுறை) என்பது தேவாரம். மேலும் இறைவனுடைய வலக்கண் சூரியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சூரியன் ஒரு முகத்தையும் எட்டுக் கைகளையும் உடையவன். தாமரை, தூபம், மணி, கமண்டலம், செபமாலை, அபயம், வரதம் முதலியவற்றை உடையவன். பொன்னிறம் உடையவன். பொன்னாடைகளையும், பொன்னணிகளையும் உடுத்தவன். இத்தகு சூரியனுக்கு ஒளியைத் தருபவன் சூரியனில் நடுவில் வீற்றிருக்கின்ற சிவசூரியன் ஆவான். இவனைப் “பர்க்கன்” என வடமொழியினர் கூறுவர்.
சூரியனுடைய அமுத கதிர் மழையைப் பொழிவிக்கும். சுழுமுனைக் கதிர் சந்திரனுக்கும், அரிகேசம் நட்சத்திரங்களுக்கும், விச்வகன்மா புதனுக்கும், விச்சுவா வெள்ளிக்கும், சத்துவிசு செவ்வாய்க்கும், சருவாவிசு வியாழத்திற்கும், சுவராடு சனிக்கும் ஒளி தரும் எனப் புராணங்கள் கூறுகின்றன. சூரியனடமிருந்தே கோள்கள் ஒளியைப் பெறுகின்றன என்பது அறிவியல் உண்மையாகும்.
உயிர்கள் சிறந்ததொரு வாழ்க்கை வாழ ஐம்பெரும் பூதங்கள், திங்கள், கதிரவன் ஆகிய ஏழும் மிகத் தேவையாகும். உலகமும் உலகத்துப் பொருட்களும் ஐம்பெரும் பூதங்களால் ஆனவை என்பதைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
“நிலம் தீ நீர்வளி விசும்பொ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம்” (தொல். பொருள், நூ.எ. 635)
என்பார் தொல்காப்பியர். இங்கு உலகம் ஐந்தும் கலந்தது என்றும், ஐந்தும் மயங்கியது என்றும் இரண்டாகக் கூறுகிறார். உலகமென்பது உலகினையும் உலகில் உள்ள பொருள்களையும் குறிக்கும். உலகம் முத்தும், மணியும் கலந்தது போல நிலம், நீர், தீ, வளி, வானம் எனக் கலந்து நிற்கும். உலகத்துப் பொருட்கள் பொன், வெள்ளி, செம்பு இவற்றை ஒன்றாக உருக்கியது போல, நிலம், நீர், தீ, வளி, வானம் முதலியன வேற்றுமைப்படாது தம்முள் மயங்கி நிற்கும் (தொல். பொருள் – இளம் – நூ.எ.635 உரை) என உரையாசிரியர் கலந்த, மயக்கம் என்பனவற்றுக்கு உரை வகுத்துள்ளார்.
மண் அணுக்கள் சேர்ந்தது நிலம். நிலத்தில் ஓங்கிய வானம், வானத்தைத் தடவி நிற்கும் காற்று, காற்றை இடமாகக் கொண்டு எரியும் நெருப்பு, நெருப்புக்கு மாறுபட்டு விளங்குவது நீர். இவ்வாறு ஐந்து பூதங்களும் தனித்தனித் தன்மை உடையன. ஒன்றை ஒன்று பற்றி நிற்பன. இதனை,
“மண்தி ணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை” (புறம் 2)
எனச் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.
உயிரினங்கள் சுவாசிப்பதற்கு மிகவும் முக்கியமானது காற்றாகும். பூமியின் மேற்பரப்பிலிருந்து 120 கி.மீ உயரம் வரையில் வளிமண்டலம் உள்ளது. காற்று மிகுந்த வலிமை உடையது என்பதைச் சங்ககால மக்கள் மிகவும் நன்றாக அறிந்திருந்தனர். “வளிமிகின் வலியுமில்லை” (புறம். பா. எண் 51) என்ற கருத்து இதனை வலியுறுத்தும்.
நாம் வளிமண்டலத்தில்தான் வாழ்கிறோம். வளிமண்டலம் நான்கு முக்கிய அடுக்குகளாக உள்ளது.
1.ட்ரோபோஸ்பியர் (புவியிலிருந்து 10. கி.மீ. உயரம் வரை)
2.ஸ்ட்ரேட்டோஸ்பியர் (10 கி.மீ – 50 கி.மீ. உயரம் வரை)
3.மீசோஸ்பியர் (50 கி.மீ. – 80 கி.மீ. உயரம் வரை)
4.தெர்மோஸ்பியர் (80 கி.மீக்கு மேல் உள்ளது)
என்பன அவை. காற்று என்பது பல வாயுக்கள் கலந்துள்ள கலவையே ஆகும்.
பிராண வாயு எனப்படும் உயிர்வளி அறிவியல் மொழியில் ஆக்சிஜன் எனக் கூறப்படுகிறது. இயல்பாக அமைந்துள்ள ஆக்சிஜனைப் பிறவிநிலை ஆக்சிஜன் என்பர். இதன் குறியீடு ‘O’ ஆகும். ஆனால் ஆக்சிஜனை O2 என்னும் குறியீட்டாலேயே அறிவியல் அறிஞர் குறிக்கின்றனர். இதனையே உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் சுவாசிக்கின்றன. எனவே இது உயிர்க்காற்று எனக் கொள்ளப்பெற்றது.
உயிர் வாழ்க்கைக்குத் தேவையான ஆக்சிஜன தாவரங்களால் மட்டுமே உண்டாக்கப்படுகிறது. காற்று மண்டலத்தில் 21 சதவிகிதம் ஆக்சிஜன் உள்ளது. மனிதர், விலங்கு, தாவரங்களால் சுவாசித்தலின் போது உள்ளிழுக்கப்படும் ஆக்சிஜன உடலிலிருந்து கார்பன்-டை-ஆக்சைடாக (CO2) வெளியேறுகிறது. பச்சையம், கார்பன்-டை-ஆக்சைடு, சூரிய ஒளி மூன்றையும் சேர்த்துத் தாவரங்கள் உணவு தயாரிப்பதை ஒளிச்சேர்க்கை என்கிறோம். இந்த ஒளிச் சேர்க்கையின் போது கார்பன்-டை-ஆக்சைடு பயன்படுத்தப்பட்டு ஆக்சிஜன் வெளியாகிறது.
மரங்களைத் தெய்வமாகவும், தெய்வங்கள் வாழுமிடமாகவும் கொண்டு பண்டைய தமிழர் வணங்கினர். அவர்களது அறிவியல் அறிவு சுற்றுச் சூழலைக் காத்தது. “மரம், செடி, கொடிகள் பாதுகாக்கப் பெற வேண்டியவை. வீணாக அழிக்கக் கூடாது என்று எண்ணிய தமிழ்ச் சான்றோர் கடவுளரோடு அவற்றைத் தொடர்புபடுத்தினர்” (சென்னியப்பனார் அவர்களின் வழிபாடு-மந்திரம்-வேள்வி. ப.எண்.30) என்னும் கருத்து சிந்திக்கத்தக்கது. சென்னை, டில்லி, மும்பை, பெங்களூரு பெருநகரங்களில் ஆக்சிஜனை மக்களுக்குச் சுவாசிக்கக் கொடுக்கும் மையங்கள் உள்ளன. அங்கு சென்று சுவாசித்துப் புத்துணர்ச்சி பெறும் அவலமாக்கள் மரம், செடி, கொடிகளை வளர்த்துத் தாமும் வாழ்ந்து, எதிர்கால மக்களையும் வாழ்விக்கலாமே.
ஓசோன் என்னும் வாயு ஆக்சிஜனுடைய வேற்று வடிவம் ஆகும். ஆக்சிஜனைப் போல ஒன்றரை மடங்கு அடர்த்தி உடையது. நீல நிறத்தை உடையது. குளோரினை ஒத்த மணம் கொண்டது. 1785ஆம் ஆண்டு “வான்மாரும்” என்னும் அறிஞர் இதனைக் கண்டுபிடித்தார். 1840 ஆம் ஆண்டு “சான்பெயின்” என்னும் அறிஞர் இதற்கு “ஓசோன்” (மணம் உடையது) என்னும் பெயரிட்டார். வளிமண்டலத்தில் உள்ள இரண்டாம் அடுக்கான ஸ்ட்ரேட்டோஸ்பியரில் ஓசோன் வாயு உள்ளது.
மார்கழி மாதம் அதிகாலை நேரம் ஓசோன் மிகுதிப்படுவதாகவும், பூமிக்கு மிகவும் அருகே வருவதாகவும் அறிஞர் கூறுகின்றனர். பிளாஸ்டிக் கழிவு, குளிர்பதனப் பெட்டிகளிலிருந்து வெளியாகும் நச்சு வாயு ஓசோனைப் பாதிக்கின்றது. “கார்பன் மோனாக்சைடு ஒரு அணுவானது ஒரு இலட்சம் ஓசோன் வாயு மூலக்கூறினை அழிக்கிறது” (இரா. பரமேசுவரன் – சுற்றுச் சூழல் கல்வி – ப. எண். 186) என்ற கருத்து மிகவும் குறிக்கத்தக்கது.
இவ்வாயு சூரியனுடைய ஒளியிலிருந்து வெளிப்படுகின்ற புற ஊதாக் கதிர்களை வடிகட்டித் தூய கதிர்களை (UV Rays) பூமிக்கு அனுப்பும் முக்கியமான பணியைச் செய்கிறது.
ஓசோன் படலத்தில் உள்ள துளைகளின் வழியே பூமியில் விழும் கதிர்களில் புற ஊதாக்கதிர்கள் உள்ளன. இக்கதிர் உயிரினங்களின் மேல் படுவதால் தோல் புற்றுநோய் உண்டாகிறது. உடலில் எதிர்ப்புத் தன்மை குறைகிறது. கண்புரை நோய் ஏற்படுகிறது. தொற்று நோய்கள் அதிகரிக்கின்றன. தரமற்ற விதைகள் உருவாகின்றன. ஓசோன் வாயுப் படலத்தைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும் இல்லை எனில் உயிரினங்கள் பேரழிவைச் சந்திக்க நேரிடும்.
பேரறிவும் பேரன்பும் ஒருங்கே வாய்ந்த நம் பழந்தமிழ்மக்கள் அறிவியல் சிந்தனையில் முதன்மை பெற்று விளங்கியவர்கள் என்பதை உலகம் அறியாது. இன்றைய தமிழர்களும் அறியார்.
ஒரு கருத்து ஆய்வுக்கூடத்தில் பலமுறை சோதிக்கப்பட்டு அது உண்மை என அறியப்பட்டால் மட்டுமே அது அறிவியல் உண்மை என நம்பப்படும் என்ற நிலை இன்றுள்ளது. ஆதலால் இலக்கியங்களோடும் நடைமுறை வாழ்க்கையோடும் இணைத்துக் கூறப்பெற்ற தமிழரின் அறிவியல் சிந்தனைகள் உலக மக்களைக் கவரவில்லை எனலாம். எனினும் தமிழர் அறிந்திருந்த “ஓசோன் வாயு” இலக்கியங்கள் பலவற்றில் வானமண்டலத்தில் இருக்கும் முனிவர்களாகக் குறிப்பிடப்படுவது சுவை மிகுந்த பகுதி மட்டுமல்ல, அறிவியல் உண்மை செறிந்த பகுதியும் ஆகும்.
சங்க காலத்திலேயே சூரியனுடைய கடுமையான வெப்பம், நச்சுக் கதிர் (புற ஊதாக்கதிர்) இவற்றை ஏதோ ஒரு பொருள் வடிகட்டி பூமிக்கு அனுப்புகிறது என அறிந்துள்ளனர். பூமியில் வாழ்வோர் சூரியனுடைய கடுமையான வெப்பத்தால், பெருந்துன்பம் அடைகின்றனர். உயிர்களின் துன்பம் நீங்கச் சடைமுடிகளை உடைய முனிவர் சிலர் அவ்வெப்பத்தைத் தாங்கள் ஏற்றுக் கொள்கின்றனர். மேலும் அம்முனிவர்கள் காற்றை உணவாக உட்கொள்கின்றனர். சூரியனோடே சுற்றி வருகின்றனர் என்ற கருத்தைத் தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் கூறியுள்ளார். இதனை,
“நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
கால்உண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரும்” (புறம். பா. எண் 43)
என வரும் இலக்கியப் பகுதியால் அறியலாம்.
சூரியனுடைய வெப்பம், நச்சு ஆகியவற்றால் உயிர்கள் துன்பம் அடைதல் அறிவியல் உண்மை. அத்துன்பம் உயிர்களை வருத்தாமல் இருக்க அதனை வடிகட்டி அனுப்புவது ஓசோன் வாயு என்பதும் அறிவியல் உண்மை. ஆனால் அப்பணியை முனிவர் செய்வதாக இலக்கியம் கூறுகிறது. அம்முனிவர் காற்றை உணவாகக் கொள்கின்றனர் என்ற கூற்று மிகவும் ஆராயத்தக்கது. வெப்பம், நச்சு இவற்றைக் காற்று (ஓசோன் வாயு) தூய்மைப்படுத்துவதை அவர்கள் முழுமையாக அறிந்திருந்தார்கள் என்றே எண்ணம் வேண்டியுள்ளது. இன்னும் சற்று வேறு விதமாகச் சிந்திக்கலாம். பேராற்றல் வாய்ந்தது சிவம். (சிவசூரியன்) அதனுடைய ஆற்றலை உயிர் நேரே தாங்க முடியாது. சத்தியின் வழியாகவே சிவத்தின் அருள் உயிருக்குக் கிடைக்கும் என்பது சைவ சித்தாந்தம். அவ்வகையில் பார்க்கும்போது சிவசூரியனின் பேராற்றலைத் தான் பொறுத்துக் கொண்டு உயிர்களுக்குத் தேவையான அளவு வரையறை செய்யும் சத்தியின் செயலாகவும் இது தோன்றுகிறது. செம்மேனி அம்மானின் (சிவசூரியன்) ஆற்றலைத் தாங்கும் அம்மை நீல நிறம் உடையவள். நீலமேனி வாலிழை பாகம் (ஐங்குறுநூறு – கடவுள் வாழ்த்து) என்பது இதனை வலியுறுத்தும். ஓசோன் வாயு நீலநிறமுடையது என்பதையும் சிந்திக்க.
முருகப் பெருமானிடம் பொன்னும் பொருளும் போகமும் வேண்டாது அன்பும் அறனும் அருளும் வேண்டிப் பெற்றவர் பண்டைய மக்கள். பொருள் நாடாது அருள் நாடிய சிந்தையுடையது திருமுருகாற்றுப்படை. திருச்சீரலைவாய் முருகனின் மூவிரு முகங்களும், பன்னிரு கரங்களும் நக்கீரரால் வியந்து போற்றப்படுகிறது. பன்னிரு கரங்களில் ஒரு கரம் அபய கரம். அது எக்காலத்தும் வானில் இயங்கும் முறைமையுடைய தெய்வ முனிவர்களின் பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டது.
“விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒருகை” (திருமுருகாற்றுப்படை – அடி – 107, 108)
என நக்கீரர் குறிப்பிடுகிறார். “ஞாயிற்றின் வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தலாற்றா என்று கருதித் தமது அருளினால் சுடரொடு திரிந்து அவ்வெம்மையைப் பொறுக்கின்ற முனிவரைப் பாதுகாக்கவே உலகத்தைத் தாங்கிக் காத்ததாயிற்று” (திருமுருகாற்றுப்படை – நச்சினார்க்கினியர் உரை) என்னும் உரைப்பகுதி. புறநானூற்றுச் செய்திக்கும் மேலான ஒரு புதிய செய்தியைத் தருகிறது. சூரியனோடு திருகின்ற முனிவரைப் பாதுகாத்தால் அது உலகத்தைப் பாதுகாப்பதற்குச் சமம். ஆகையால் அபயகரம் உலக உயிர்களுக்கு பாதுகாப்பு அளித்தது எனக் கூறாமல் முனிவர்களுக்குப் பாதுகாத்து அளித்தது எனக் கூறினார்.
இதனால் ஓசோன் வாயுப்படலம் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதையும், அது பாதுகாப்பாக இருக்குமானால் உயிர்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதையும் நக்கீரர் புராணச் செய்தியாகக் கூறியுள்ளார் எனக் கொள்ள இடமுண்டு.
சஙக இலக்கியங்களை அடுத்துத் தோன்றியது குடிமக்களின் காப்பியமான சிலப்பதிகாரம். மதுரைக் காண்டம் – வேட்டுவ வரியில் இளங்கோவடிகள் ஐயை (கொற்றவை) பற்றிய செய்திகளை மிகவும் விரித்துப்பாடி உள்ளார். ஐயன் – தலைவன் (சிவன்), ஐயை – தலைவி. சிவபெருமானின் கிரியா சக்தியாக ஐயை உள்ளமையால் சிவனுரு, செயல் முதலியவற்றை ஐயை மேல் ஏற்றுக் கூறுகிறார் குணவாயிற் கோட்டத்து அடிகள்.
கொற்றவைத் தெய்வமே! விண்ணவர்களாகிய தேவர்கள் சாவா மருந்தாகிய அமுதத்தை உண்டும் சாகின்றார்கள். ஒருவராலும் உண்ண முடியாத நஞ்சை உண்டும் நீ சாகாது இருந்து அருளைச் செய்கின்றாய். அனைவருக்கும் நீ அருளைச் செய்கின்ற ஆற்றல் உடையவள். குறிப்பாகக் கதிரவனுடன் இருந்து அவனுடைய வெம்மையைத் தாங்குகின்ற தெய்வ இருடிகள், தேவர்கள் ஆகியோருக்குத் துன்பம் வாராமல் காக்கும் உன் ஆற்றல் அளப்பரியது. அத்தகைய தன்மை உடைய உன்னை நாங்கள் பணிகின்றோம் என இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இதனை,
“சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும்
இடர்கெட அருளும் நின்இணையடி தொழுதேம்” (சிலம்பு - வேட்டுவவரி – பா. எண்.18)
என்னும் அரிய பாடலால் அறிய இயலும். இப்பகுதிக்கு அடியார்க்கு நல்லார் எழுதியுள்ள உரை படித்து இன்புறத்தக்கதாகும்.
சிவபரம் பொருளே இவ்வுலகத்திலுள்ள இருதிணைப் பொருளையும் காத்து வருகிறது. கருவிலிருக்கும் குழந்தைக்கும் அவனே காவலாகின்றான் என்பதைக் “காயக் கருக்குழியில் காத்திருந்தும்” (போற்றிப் பஃறொடை – கண்ணி :18) என்னும் சாத்திரப் பகுதியால் அறியலாம்.
இந்த உலகத்தையும் உயிர்களையும் மட்டுமா சிவம் பாதுகாவல் கொள்கிறது. நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்த பேரண்டம் முழுவதையும் காவல் செய்கிறது. அண்டங்களைத் தாங்கிக் கொண்டுள்ள ஆகாயத்தைக் காவல் காக்கிறது. இதுவன்றியும் ஆகாயத்தில் சூரியனைச் சுற்றி வருகின்ற முனிவர்களைக் காவல் காக்கின்றது என்பதை மாணிக்கவாசகர் அழகாகக் கூறியுள்ளார்.
“ஏகாசம் இட்ட இருடிகள் போகாமே
ஆகாசம் காவல் என்று உந்தீபற
அதற்கு அப்பாலும் காவலென்று உந்தீபற” (திருவாசகம் – திருவுந்தியார் பா.எண்.20)
வானத்தில் வாழும் முனிவர்கள் யோக வேட்டியை (ஏகாசம் – மேலுடை) மேலுடையாக அணிந்து கொண்டிருக்கிறார்கள். அந்த முனிவர்கள் அழிந்து போகமல் இறைவன் காவல் புரிகிறான் என்பது இப்பாடலின் முக்கிய கருத்தாகும்.
இதுகாறும் நான்கு பண்டைய இலக்கியங்கள் கூறும் கருத்துக்களை அறிந்தோம். சூரியனுடைய வெப்பத்தை முனிவர் தாங்குகின்றனர் என்பதை நான்கு இலக்கியப் புலவர்களும் உடன்படுகின்றனர். ஆனால் நால்வரும் ஒவ்வொரு விதமாக இக்கருத்தை வளர்த்துள்ளனர் என்பது கருதத்தக்கது.
புறநானூறு, முனிவர்கள் காற்றை உணவாகக் கொள்கின்றனர் என்ற கருத்தை முதன்மைப்படுத்தியது. திருமுருகாற்றுப்படை முனிவர்களை முருகப் பெருமான் காப்பதால் இது உலகக் காவலாயிற்று எனக் கூறியது. சிலப்பதிகாரம் முனிவர்களுக்கு வரும் துன்பத்தை அம்மை நீக்குகிறாள் எனக் கூறியது. திருவாசகம் முனிவர் அழிந்து போகாமல் சிவபெருமான் காப்பார் எனக் கூறியது. இது அவருடைய ஞான வெற்றியாகும். (திருவுந்தியார் சிவனது ஞான வெற்றியைக் கூறுவது).
இலக்கியங்கள் காட்டும் முனிவர்கள் ஓசோன் வாயுவே என்பதை இக்கட்டுரை ஆராய்ந்து இருக்கிறது. எனது அன்புக்குரிய வாசகர்கள் பலருக்கும் இக்கருத்துகள் வலிந்து கூறப்பெற்றுள்ளதாகத் தோன்றலாம். சிலருக்குப் பொருத்தமாக இருப்பதாகவும் தோன்றலாம். இரண்டும் இனியதே. எதுவும் தோன்றாமல் இருப்பதற்குப் பதிலாகச் சிந்திப்பது சிறந்ததல்லவா?
மரங்களை வளர்த்து மழையையும், உயிர்க்காற்றையும், ஓசோனையும் பெருக்குங்கள். அதுவே சீவனின் ஞான வெற்றியாகும். இல்லாவிட்டால் திரோதானமும், சங்காரமும் உறுதியாகும்.
--திருச்சிற்றம்பலம்--