வழிபாடு மந்திரம் வேள்வி்

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

இன்றைய வாழ்க்கையின் வசதியான நிலையை அடைவதற்கு மக்கள் பல படி நிலைகளைக் கடந்து வந்துள்ளனர். தொடக்க காலத்தில் காட்டு விலங்குகளைப் போல் குகைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழ்ந்தனர். பின் கற்கருவிகளைப் பயன்படுத்தினர். அடுத்து உலோகங்களைப் பயன்படுத்தினர். நாடோடிகளாக வேட்டையாடுதல், கால்நடைகளை மேய்த்தல் முதலியவற்றை மேற்கொண்டனர். நிலையாகத் தங்கிப் பயிரிடுதலைத் தொடங்கினர். இறந்தோரைக் குழிகளில் புதைத்தனர். இவை எல்லாம் வரலாற்றுக்கு முற்பட்ட காலமாகும். அக்காலத்தில் நீர், நெருப்பு, காற்று முதலியவற்றிற்கு ஆற்றலிருப்பதாகக் கருதி வழிபட்டனர்.

கி. மு. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்ததாகக் கருதப்பெறும் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் முருக வழிபாட்டின் தொன்மைக்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. சேவல், வேல் முதலிய உருவங்கள் அங்கு கிடைத்துள்ளன. கி. மு. 2500-க்கும் கி. மு. 1500-க்கும் இடைப்பட்டதாகக் கருதப்பெறும் சிந்துவெளி நாகரிகத்தில் சிவலிங்கம், காளி முதலிய வழிபாட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன.

கொற்றவை, முருகன் ஆகியவை தமிழ் மக்களின் மிகத் தொன்மையான வழிபாட்டுத் தெய்வங்கள் என்பார் கலாநிதி. க. கைலாசபதி அவர்கள். இக் கொற்றவை வழிபாடு பிற்காலச் சக்தி வழிபாட்டுக்கு அடிப்படையாகும். சக்தியின் பிரதிநிதிகளே இன்றைய கிராம தேவதைகள் ஆவர். இப்பெண் தெய்வங்கள் யாவும் ஆரியர்க்கு முற்பட்ட செல்வாக்கு உள்ள தெய்வங்கள் என்பர் ஆய்வாளர். வைதிக இலக்கியத்தில் முதன் முதலாகக் க்னோபநிடதம் உமையம்மையைக் காண்கிறோம் என்பார் டாக்டர் எஸ். இராமகிருஷ்ணன். கோயிலோ, உருவ வணக்கமோ ரிக் வேதத்தில் இடம் பெறவில்லை.

பழந்தமிழர் கொற்றவை வழிபாட்டைச் சிறப்பாகப் போற்றினர். தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள் கொற்றவை வழிபாட்டைக் குறிப்பிடுகின்றன. போர்த்தெய்வமாகவே கொற்றவை போற்றாப் பெறுகின்றாள். பிரிந்து சென்ற தலைமகன் விரைவில் திரும்பி வந்து நீங்காது உடன் உறைதல் வேண்டும் என்றும் தலைவி கொற்றாவையை வேண்டுவதாகக் குறுந்தொகைப் பாடல் குறிப்பிடுகின்றது. கொற்றவையை வாழ்க்கைத் தெய்வமாகவும் வழிபட்டதை இதனால் அறியமுடிகின்றது.

முருகன் வழிபாடு பற்றி தொல்காப்பியமும், சங்க இலக்கியங்களும் விரிவாகக் குறிப்பிடுகின்றன. மக்கள் மீது முருகன் வந்து ஆடுவதை ‘வெறியாட்டு’ என்று சங்க காலத்தில் குறிப்பிட்டனர். முருகன் கோயில் பூசாரி கையில் வேலை வைத்து ஆடுவதால் வேலன் எனப்பட்டான். வேலனிடம் மந்திர சக்தி இருப்பதாக நம்பினர். திருமுருகாற்றுப்படையும் பரிபாடல்களும் முருகன் வழிபாட்டை விரிவாகக் கூறுகின்றன. அந்தணர் வழிபட்ட முறை, குன்றக்குறவர், குறத்தியர் வழிபட்ட முறை இரண்டும் திருமுருகாற்றுப்படையில் காணப்படுகின்றன.

பரிபாடலில் “யாம் இரப்பவை பொருளும், பொன்னும், போகமும் அல்ல, நின்பால் அருளும், அன்பும், அறனும் மூன்றும், உருள்இணர்க் கடம்பின் ஒலி தாரோயே!” என்ற உயர்ந்த வழிபாடும் உண்டு.

‘கனவில் கண்டது நனவில் உண்மையாக வேண்டும்’ என்று வேண்டுதல், ‘கருவயிறு உறுக’ என்று வேண்டுதல், ‘செய் பொருள் வாய்க்க வேண்டும்’ என்று வேண்டுதல், ‘போரில் வெற்றிபெற வேண்டும்’ என்று வேண்டுதல் முதலிய வழிபாட்டு முறையும் பரிபாடலில் உண்டு. திருப்பரங்குன்றத்தின் அடியிலேயே சுற்றத்தாருடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்ற நிலை பரவலாகப் பேசப்படுகின்றது. தமிழை ஆய்ந்தவரே திருப்பரங்குன்றத்தின் பெருமையை அறிவர் என்றும் கூறப்படுகின்றது.

திருமால் வழிபாட்டிலும் இத்தகைய நிலை காணப்படுகிறது. மகளிர், பெற்றோர், கைக் குழந்தை, மனைவியார் ஆகியோருடன் சென்று தொழுங்கள் என்ற பொருளில்,

     “தையலவரொடும் தந்தாரவரொடும்
      கைம்மகவோடும் காதலவரொடும்
      தெய்வம் பேணித்திசை தொழுதனிர் செல்மின்”

என்று பரிபாடல் சுட்டுகின்றது.

யமுனை ஆற்றில் ஆயர் மகளிரொடு கண்ணன் விளையாடியதற்கு அகநானூற்றுப் பாடலே இந்திய இலக்கியத்தில் தொன்மையான சான்று என்பர் ஆய்வாளர். அவுணர் ஞாயிற்றைக் கொண்டு போய் மறைத்து வைத்தனர், உலகில் இருள் சூழ்ந்தது. அஞ்சன உருவன் (மாயோன்) ஞாயிற்றை மீட்டுக் கொணர்ந்து ஆகாயதில் நிறுத்தி உலகத்தவர் துன்பத்தைப் போக்கினான் என்ற புறநானூற்றுச் செய்தி வடமொழியில் யாண்டும் இல்லாத ஒன்று.

தமிழர் வழிபாடு இயற்கை வழிபாடு; மரங்கள், ஐம்பெரும்பூதங்கள், விலங்குகள், நாகங்கள் முதலியன வழிபட்ட முறை இலக்கியங்களிலும் இன்றைய முறையில் உண்டு. இவ்வழிபாடுகள் எல்லாம் தாய் மொழியான தமிழிலேயே செய்யப்பெற்றன. நடுவில் பூசாரி, குருக்கள் முதலியோர் இல்லை. மக்களே நேரில் வழிபட்டனர். தமிழகக்கோவில்களில் அகத்தியர் முதலியவர் வழிபட்ட கோவில்கள் உண்டு. எறும்பு முதலாக யானை ஈறாக உள்ள உயிரினங்கள் வழிபட்ட கோவில்களும் உண்டு. இன்றும் இந்தியாவில் உள்ள பன்னிரண்டு சோதிலிங்கங்களில் தமிழ்நாட்டில் உள்ள இராமேசுவரம் தவிர, ஏனைய 11 சோதிலிங்கங்களை நாமே நேரில் சென்று தொட்டு நமக்குத் தெரிந்த மொழியிலேயே வழிபடலாம்.

வழிபாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது மந்திரமாகும். உலக மக்களில் மகளிரால் பழங்காலத்தில் தம் தம் தாய்மொழியிலேயே மந்திரங்கள் கூறப்பெற்றன. மகளிர்களே அதிகம் மந்திர ஆற்றல் பெற்றிருந்தனர், இன்றும் பழங்குடிகளிடம் இத்தகு மரபு உண்டு என்பார் கலாநிதி க. கைலாசபதி அவர்கள். தமிழ் மக்கல் வழிபாட்டு மந்திரம் தொல்காப்பியம்

     “நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
      மறைமொழிதானே மந்திரம் என்ப”

என்று குறிப்பிடுகின்றது. மந்திரம் தமிழ்ச் சொல். ‘மந்த்ரம்’ வடசொல். இரண்டிற்கும் வேறுபாடு உண்டு.

‘மந்த்ரம்’ என்ற வடமொழிச் சொல்லிற்கு நினைப்பவரைக் காப்பாற்றுவது என்பது பொருள். அதாவது மந்திரத்தை உச்சாடனம் செய்தவர் அதை வேண்டுங்கால் பயன்படுத்தும் போது அது அவரைக் காப்பாற்றும். எனவே, இங்கே வடமொழி மந்த்ரம் எஜமானன், சொல்லுபவன் அதன் அடிமை.

ஆனால், தமிழில் கூறப்படும் மந்திரம் என்ற சொல் வடமொழியில் கூறப்படும் மந்த்ரம் என்ற சொல்லின் வேறானது. மந்த்ரம் என்ற வடமொழிச் சொல்லின் தற்சமம் அல்லது தமிழ் ஆக்கம் அல்ல தமிழ் மந்திரம்... நிறைமொழி மாந்தர் சொல்லே மந்திரம், அவர் சொல்லே ஆணை. அச்சொற்கள் சொன்னவற்றைப் பயந்துவிடும்.

எனவே, மேற்கூறிய தொல்காப்பியச் சூத்திரத்திற்கு உரை வரைந்த பேராசிரியர் ‘நிறைமொழி மாந்தர்’ என்பது சொல்லிய சொல்லின் பொருண்மை யாண்டும் குறைவின்றிப் பயக்கச் சொல்லும் ஆற்றலுடையார் என்று விரித்துரைத்தார். நிறைமொழி உடைய அருளாளர்களை மாந்தர் என்ற சொல்லால் குறித்தார் தொல்காப்பியர். சாதாரண மானிடன் இறை இன்ப அனுபவம் பெற்று அதில் திளைத்து மாந்தும் போது மாந்தன் ஆகின்றான் – ஆக, இறையின்ப அனுபவத்தில் மாந்திய மாந்தர்கள் உரைத்த நிறைமொழி மந்திரம் எனப் பெயர் பெற்றது என்பார் ஆய்வாளர் சத்தியவேல் முருகனார். பேராசிரியர் தொல்காப்பிய உரையிலே தமிழ் மந்திரம் என்றும் சுட்டுவார்.

பாட்டு, உரை, நூல், வாய்மொழி, பிசி, அங்கதம், முதுசொல் ஆகியன யாப்பின் வகை என்பார் தொல்காப்பியர். இவற்றுள் வாய்மொழி என்பதனை உரையாசிரியர்கள் அனைவரும் மந்திரம் என்றே குறிப்பிடுவர். உளங்கூர் இளம்பூரணர் என்ற உரையாசிரியர், ‘வாய்மொழி எனினும் மந்திரம் எனினும் ஒக்கும்’ என்பார். அனுபவம் மிக்க சான்றோர் அருளிக் கூறிய வாய்மொழி அனைத்தும் மந்திரமே.

     “கண்ட பெருமந்திரமே மூவர் பாடல்
      கைகாணா மந்திரம் கண்ணுதலோன் கூறல்”

என்று உமாபதி சிவாச்சாரியார் தேவார மூவர் வாக்குகளை மந்திரம் என்று பாராட்டிப் போற்றியுள்ளார்.

‘திருவாசகம் தமிழ் மக்களின் வேதம்’ என்பார் ஜி. யு. போப் எனவே திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், ஆலால சுந்தரர் முதலியோர் வாக்குகளே மந்திரங்களே. அவை பற்பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளன.

வட இந்தியாவிலிருந்த ஆரியர் வடமொழியாலான தம் வேதங்களுடனும் வேத கால வழிபாடுகளுடனும் தமிழகம் புகுந்தனர். தமிழரசர்கள் அவர்கட்கு நிலங்களையும் ஊர்களையும் மானியமாக அளித்தனர். அவர்களைக் கொண்டு அதுகாறும் தமிழகத்தில் இல்லாத இராச சூயயாகம், அசுவமேதயாகம் முதலிய யாகங்களைச் செய்யத் தலைப்பட்டனர்.

இந்த யாகங்களில் வேதியரே புரோகிதராக இருந்தனர். நாளடைவில் அரசரிடம் செல்வாக்குப் பெற்ற காரணத்தால் வடமொழிப் புரோகிதர்களும் குருக்களும் தமிழகத்தில் கோவில்களில் அர்ச்சகராக இடம்பெற்றனர். அவர்களால் வடமொழி தமிழகக் கோவில்களில் புகுத்தப்பெற்றது. பூசைக்குரிய மந்திரங்கள் வட மொழியிலேயே சொல்லப்பெற்றன. சிறுகச் சிறுகத் தமிழ்நாட்டுக் கோவில்களில் வடமொழியும், வடவர் வழிபாட்டு முறைகளும் காலப்போக்கில் வேரூன்றிவிட்டன என்பார் வரலாற்றறிஞர் மா. இராசமாணிக்கனார் அவர்கள்.

வழிபாட்டிலும் சடங்குகளிலும் வேள்வி முக்கிய இடத்தைப் பெற்றது. தமிழில் வேள்வி என்றால் விரும்பிச் செய்வது என்பது பொருள். கேட்டல் – கேள்வி என்றாற்போல, வேட்டல் – வேள்வி ஆயிற்று. வடமொழியில் யக்ஞம் எனப்படும். தமிழ் வேள்விக்கும் வடமொழி யக்ஞத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், திருக்குறள் முதலியவற்றில் வேள்வி குறிப்பிடபடுகிறது.

     “இனைத்துணைத்து என்பதொன் றில்லை விருந்தின்
      துணைத்துணை வேள்விப் பயன்”

என்று திருவள்ளுவர் விருந்தோம்பலை வேள்வியாகக் குறிப்பிட்டுள்ளார்.

வடமொழி வேள்வியில் மாமிசங்களால் ஆன அவிகளை வேதிகை மேடையில் பரப்பி வைத்தனர். ரிக்வேதம் மண்டலம் 15-ம் பிரிவு, சுலோகம் 15 “அக்கினியே! நீ வேதிகையில் வைக்கப்பட்டுள்ள அவிகளைப் பார்க்கவும்”- இது போன்ற பல சுலோகங்கள் உண்டு. கலசங்களைப் பயன்படுத்த ஆரம்பித்தபோதும் கலசங்களில் நீர் நிறைத்தார்களிலில்லை. கலசங்களில் மதுவை நிரப்பி வைத்தனர். சான்று வருமாறு:

ரிக்வேதம் 5-ம் மண்டலம் 29-ஆம் பிரிவு சுலோகம் 8; “நீ முந்நூறு எருமைகளைப் புசித்து மகவானான நீ மூன்று கலச சோமத்தைப் பருகி அஹியைக் கொன்றவுடன்...”

சுலோகம்-9: இந்திரன் மதுவால் களிக்கப்பட்ட மூன்று கலசங்களில் உள்ள சோமத்தை விருத்திரனைக் கொல்லப் பருகினான்.

அதுமட்டுமல்ல, யாக அக்கினியில் நெய் சொரிவது போல மதுவைச் சொரிந்திருக்கிறார்கள். சான்று வருமாறு; ரிக் வேதம் 5-ம் மண்டலம் 51-ம் பிரிவு சுலோகம்-2: “சத்தியச் செயலுள்ள தேவர்களான நீங்கள், எங்கள் யக்ஞத்திற்கு வாருங்கள், சத்தியத்தை ஏந்துபவர்களான நீங்கள் அக்கினியின் நாக்கால் சோமத்தைப் பருகுங்கள்.

இவ்வாறெல்லாம் சைவத்திருவாளர் மு. பெ. சத்தியவேல் முருகனார் சான்றுகாட்டி விளக்கியுள்ளார்.

வேள்வியில் சோமம் என்னும் கொடியிலிருந்து சாறு பிழிந்து கடவுளர்க்குப் படைத்துப்பின் பருகுவதைச் சிறப்பாகப் போற்றினர். ரிக் வேதத்தின் பத்து மண்டலங்களில் ஒன்று (9-வது) சோமக்கொடியின் அதிதேவதையான சோமனைப் பரவும் சூக்தங்களை உடையது என்பார் டாக்டர். எஸ். இராமகிருஷ்ணன். வேள்வி ஆசிரியர்கள் சோம பானம் பருகினர் என்பதைப் பாண்டியர் செப்பேடும் பறைசாற்றுகின்றது. சோமபானம் செய்து மனத் தெளிவு அடைந்த காடக சோமயாஜியார்க்கு நிலதானங்கொடுத்ததைத் தளவாய்புரச் செப்பேடு, ‘சோமபான மனோசுத்தராகிய காடகஸ் ஸோமயாஜியார்க்கு ஏகபோகமதுவாக எழிற்செப்பேடு குடுத்தனன்–’ என்று குறிப்பிடுகின்றது.

வடமொழி வேள்வியில் அக்கினி தேவன் பிறதேவர்களுக்குப் பிரதிநிதியாக இருந்து அந்தந்தத் தேவர்களுக்கு அளிக்கப்படும் ஆகுதிகளைப் பெற்று அந்தந்தத் தேவர்களுக்குச் சென்றளித்தான். ஆனால் தமிழ் வேள்வியில் அக்கினியே சிவாக்கினியாக மாறி நிற்க அங்கே சிவபெருமானே ஆவாகனம் செய்யப்பட, சிவன் எழுந்தருளி நின்று அருள்புரிகிறான். தமிழர் வேள்வியில் காணப்படும் தீ பதிலியல்ல கடவுள், ஆரியர் வேள்வியில் காணப்படும் தீ பிறதேவரின் தூதுவன் என்பது ஆய்வாளர் கண்ட முடிபு.

திருமுறைகளில் வேள்வித் தீயாகவே இறைவன் உள்ளான் என்ற கருத்துப் பரவலாகக் காணப்படுகின்றது. ‘வேதமும் வேள்வியுமாய நன்குடையான்’, ‘வேள்வியானானை’ ‘வேதியர் வேதமும் வேள்வியுமாவன’. ‘அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவன் அரனுருவல்லனோ’, ‘எரிசுடராய் நின்ற ஈசா போற்றி’ – இத்தகைய ஆதாரங்கள் திருமுறைகளில் மிகுதியாக உள்ளன.

‘இணர் எரித் தேவுந்தானே எருவளர்ப்பவனும் தானே’ என்பார் பரஞ்சோதி முனிவர். வேதம், உபநிடதம், ஆகமம் ஆகியவற்றை நன்கு கற்று உணர்ந்தவரும் வடமொழி, தமிழ் மொழி இரண்டிலும் புலமை மிக்கவரும் தமிழில் மாபாடியம் எழுதியவருமான சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில்,

     “வேள்வியுந்தானே, வேள்விப் பொருள்களுந்தானே, வெய்ய
      வேள்வி வேட்பவனுந்தானே வேள்விகொள் இறையுந்தானே
      வேள்வியின் பயனுந்தானே”

என்று பாடியுள்ளார்.

தமிழில் வேள்வித் தீயும், வேள்விப் பொருள்களும் இறைவனே என்ற கொள்கை பிற்காலப் புராணங்களில் விரிவாகப் பேசப்படுகின்றது.

வடமொழி வேள்வியில், வேள்விக் குண்டத்திற்குப் பக்கத்தில் வேள்விச் சாலையில் ‘யூபம்’ என்ற தூண் நடப்படுவதுண்டு. வேள்வியில் பலியிடப்பெறும் ஆடு, மாடு, குதிரை முதலியன கட்டப் பயன்படுவது யூபம் என்ற தூண் ஆகும். இவ்வாறு வேள்வியில் உயிர்ப் பலி கூடாது என்பதனை,

     “அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
      உயிர்செகுத்து உண்ணாமை நன்று”

என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். சங்க காலப் பாண்டியர்களில் முதுகுடுமிப் பெருவழுதி ஒருவன், பல யாகங்களைச் செய்ததால் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என அழைக்கப்பட்டான்.

     “.............................................ஒன்னார்
      ஒண்படைக்கடுத்தார் முன்பு தலைக் கொண்மார்
      நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய
      வசைபட வாழ்ந்தோர் பலர் கொல்? புரையில்
      நற்பனுவல் நால்வேதத்து
      அருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
      நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
      வீயாச சிறப்பின் வேள்வி முற்றி
      யூபம் நட்ட வியன் களம் பல கொல்?
      யாபல கொல்லோ? பெரும!”

என்ற புறநானூற்றுப் பகுதி, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி பகைவர் பலரை வென்றான். வேள்வி முற்றிய பின் வேள்வித்தூண் பல நட்டான் – வென்ற பகைவர் தொகை அதிகமா? நட்ட யூபமாகிய தூண் அதிகமா! என்று கேட்கின்ற முறையில் அமைந்துள்ளது. தமிழில் வேள்வி முற்றிய பின் யூபம் நடப்பெறுவது முறையாகும்.

வழிபாடு, மந்திரம், வேள்வி ஆகியவை தமிழ், வடமொழி இரண்டிலும் வேறு வேறான முறையுடையன. தமிழில் அனைத்தையும் திருமுறைகள் முறையிலேயே செய்யலாம். அதனால் எந்தவிதமான குறையும் உண்டாகாது.

திண்டிவனத்திற்கு அருகில் பல்லவர் காலக் கோயில் வயிரபுரச் சிவன் கோயில் ஆகும். அங்கு ஆகம முறைப்படி பூசை செய்தோர் கோயிலை விட்டு விட்டுச் சென்றுவிட்டனர். சில காலம் பூசையும் நடைபெறவில்லை. அண்மைக்காலத்தில் திருநெறிய தமிழ் முறைப்படி திருக்குட நன்னீராட்டுப் பேருர் மணிவாசகர் அருட்பணி மன்றத்தார் செய்தனர். தற்போது தமிழ்முறைப்படி பூசையும் நடைபெற்று வருகின்றது. மழை நன்றாகப் பெய்கிறது. மக்களும் நன்றாக உள்ளனர்.

 

--திருச்சிற்றம்பலம்--

Back to Top