- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
சிவ வழிபாடு மிகத் தொன்மை வாய்ந்தது. பண்டைக் காலத்தில் சிவ வழிபாடு உலகு எங்கிலும் பரவியிருந்தது. அனைத்து மக்களும் சிவ வழிபாட்டை மேற்கொண்டிருந்தனர். அமெரிக்காவில் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன்கோயில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. யு.எஸ்.மியூசியம் ஆஃப் நேச்சுரல் ஹிஸ்டரி ( U .S. Museum of Natural History ) என்ற அமைப்பைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்த மிகத் தொன்மையான சிவன் கோவிலைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது.
23-11-1937 – இல் நியூஸ் ரிவ்யூ ஆஃப் லண்டன் (News Review of London) என்ற நாளேட்டில் அச் சிவன் கோயிலைப் பற்றிய செய்தி வந்துள்ளது. அமெரிக்காவில் மக்கள் செல்ல முடியாத கொலாராடோ என்ற மலைப்பகுதியில் “மறைந்து போன உலகம்” என்ற ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள். அம் மலைப் பாறையின் மேல் ஏறக்குறைய அரை மைல் சதுரப் பரப்பில் பழைய சிவன் கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நில மட்டத்திலிருந்து ஏறக்குறைய 9 ஆயிரம் அடிக்கு மேல் மலைப் பாறையில் அச்சிவன் கோயில் அமைந்துள்ளது என்பது அந்நாளேட்டில் வந்த செய்தியாகும். சிவவழிபாடு பரவியிருந்த நிலையையும் அதன் பழமையையும் இதனால் அறியலாம்.
சங்க இலக்கியங்களில் முப்புரம் எரித்தது, பிறையைத் தலையில் சூடியது, நஞ்சுண்ட நீலகண்டம், நெற்றிக்கண், இடபக்கொடி, இடபவாகனம், உமையொரு பாகன், இராவணன் கயிலையை எடுத்தது, ஐம்பூதங்களை உண்டாக்குதல் முதலிய செய்திகள் ஆங்காங்கே வருகின்றன.
சங்கக் காலத்தில் மக்கள் வாழும் ஊர்களில் பொதுவான இடங்களில் தெய்வம் உறையும் தறியாகிய தூண் ( சிவலிங்கம் ) நட்டப்பெற்றிருந்தது. நீராடித் தூயவராகிய மகளிர் அம்பலத்தை மெழுகித் தூய்மை செய்து இரவு நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். புதியவராய் வந்தவர்கள் அக்கோயிலிலேயே தங்கினர்.
“கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்கம் ஏறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியில்”
என்று பட்டினப்பாலையில் வருகின்றது. “மகளிர் பலரும் நீருண்ணும் துறையிலே சென்று முழுகி மெழுகும் மெழுக்கத்தினையும், அவர்கள் அந்திக் காலத்தே கொளுத்தின அவியாத விளக்கத்தினையும், உடைய பூக்களைச் சூட்டின தறியினையுடைய அம்பலம். கந்து – தெய்வம் உறையும் தறி, வம்பலர் சேக்கும் பொதியில் – புதியவர்கள் பலரும் ஏறித் தொழுதற்குத் தங்கும் பொதியில். பொதியிலை மெழுகி விளக்கும் இட்டிருக்க வம்ப மகளிர் வைத்தார். அதனால் தமக்குப் புகழ் உளதாம் என்று கருதி, ” என்று நச்சினார்க்கினியார் உரை விளக்கம் தந்துள்ளார். இன்றைய சிவலிங்கமே – கந்து – தெய்வம் உறையும் தறியாகும். கன்றாப்பூர் நடுதறி என்று தேவாரப் பாடல்களில் குறிக்கப் பெறுவதும் இத்தகையதே.
தமிழகத்தில் மரங்களின் கீழ் முதலில் சிவலிங்கங்கள் அமைத்து வழிபடப் பெற்றன. சிவலிங்கங்களை மக்கள் மட்டுமல்லாமல் அஃறிணை உயிர்களும் வழிபட்டுள்ளன. குரங்கு வழிபட்ட கோயில்கள், குரக்குக்கா, வட குரங்காடுதுறை, தென் குரங்காடுதுறை எனவும், நாறை வழிபட்ட கோயில் திருநாறையூர் எனவும், நண்டு வழிபட்டது திருந்துதேவன்குடி எனவும், யானை, சிலந்தி வழிபட்டது திருவானைக்கா எனவும், ஈ வழிபட்டது திருவீங்கோய் மலை எனவும், எறும்பு வழிபட்டது திருவெறும்பூர் எனவும், பசு வழிபட்டது ஆவூர், பட்டீச்சுரம், கருவூர், பேரூர் எனவும், பாம்பு வழிபட்டது திருப்பாம்புரம் எனவும், கழுதை வழிபட்டது கரவீரம் எனவும், கரிக்குருவி வழிபட்டது வலிவலம் எனவும், ஆடு, ஆனை வழிபட்டது திரு ஆடானை எனவும், குரங்கு, அணில், காக்கை வழிபட்டது குரங்கணில் முட்டம் எனவும், மயில் வழிபட்டது மயிலாப்பூர் எனவும் இன்றும் வழக்கத்திலுள்ள அஃறிணை உயிர்கள் வழிபட்ட தலங்களாகும்.
திருக்கோயில் அமைத்துப் பிறர்க்காகச் செய்யப்படும் வழிபாடு பரார்த்தம் எனப்படும். தன் பொருட்டுத் தானே செய்யும் வழிபாடு ஆன்மார்த்தம் என்ப்படும். ஆன்மார்த்த லிங்கம் சல லிங்கம் என்று வழங்கப்படும். ஆன்மார்த்த லிங்கம் வெளியில் செல்லும்போது வேண்டும் இடங்களில் கொண்டு சென்று பூசை செய்யப் பெறும். பூசையின்போதும், பூசையின் நிறைவிலும் இடம் மாற்றி வைக்கப் பெறும். சலம் – அசைவுடையது. சல லிங்கமும் இரண்டு வகைப்படும். கணிகம், திரம் என்று இருவகைப்படும். கணிகம் நிலையில்லாதது, வேண்டும் போது ஆக்கி அமைத்து பூசை நிறைவெய்தியதும் விட்டுவிடுவது. திரம் – நிலையுள்ளது. உலோகம், கல் முதலியவற்றால் ஒருமுறை எழுந்தருளவித்தால் வாழ்நாள் முழுதும் விடாமல் பூசிப்பது ஆகும்.
திருமூலர் திருமந்திரத்தில் ஆன்மார்த்த பூசைக்குரிய லிங்களை விரிவாகக் கூறியுள்ளார். முத்து, மாணிக்கம், பவளம், கொத்தி ஒழுங்கு செய்யப்பட்ட மரக்கொம்பு, கல், திருநீறு, இரத்தினம், இறைவன் புகழ் பாடும் நூல், அன்னம், அரிசி, பூ, மணல் ஆகியன சிவலிங்கம் அமைத்தற்குரிய பொருள்களாகும்.
“முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்
கொத்து அக்கொம்பு சிலை நீறு கோமளம்
அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்
உய்த்ததன் சாதனம் பூ மணல் லிங்கமே”
என்பது பாடல். மொய்த்த பவளம் – ஒளிமிகுந்த பவளம், கொத்தும் அக்கொம்பு – கொத்தி ஒழுங்கு செய்யப்பட்ட மரக்கொம்பு, மரத்தால் செய்யப்பட்ட லிங்கம். சிலை – கல், நீறு – திருநீறு – திருநீறு வைத்துள்ள சம்படம் முதலியனவாகும். கோமளம் – அழகு, ஈண்டு இரத்தினத்தை உணர்த்திற்று. அத்தன்தன் ஆகமம் – இறைவனைப் பற்றிப் புகழ்ந்து பேசும் ஆகமம், திருமுறை முதலியன. சைவ சித்தாந்த நூல்களும் ஆகும்.
அன்னம் – சோற்று உருண்டை, அரிசி – அரிசித்திரள், பூ – தனிப்பூவும், கட்டிய மாலையும் ஆகும். மணல் – மண், மணல் ஆகியவற்றால் செய்யப்பட்ட லிங்கம் ஆகும். லிங்கம் உய்த்து அதன் சாதனமாம் – லிங்கம் செய்வதற்குச் சாதனப் பொருள்களாகும் என்று கொள்க.
தயிர், நெய், பால், சாணம், செம்பு, நெருப்பு, இரசக்கல், சந்தனம், செங்கல், வில்வக்காய், பொன், உருத்திராக்கம் ஆகியவற்றையும் ஆன்மாத்த பூசையில் சிவலிங்கமாகக் கொள்ளலாம்.
“துன்றும் தயிர், நெய், பால், துய்யமெழுகுடன்
கன்றிய செம்பு, கனல், இரதம்,சந்தம்
வன்றிறல் செங்கல், வடிவுடை வில்வம், பொன்
தென் திருக்கொட்டை தெளி சிவலிங்கமே... ”
தயிர், நெய், பால் ஆகியவை வைத்திருக்கும் பாத்திரங்கள் ஆகும். சிறிய பாத்திரங்களில் ஊற்றி வைத்துச் சிவலிங்கமாகக் கருதி வழிபாடு செய்யும் முறையாகும். மெழுகு என்பது மெழுகுதலுக்குப் பயன்படும் பசுவின் சாணமாகும். சாணத்தைப் பிடித்து வைத்துப் பூசிக்கலாம். கன்றிய செம்பு – உருக்கி வார்க்கப் பெற்ற தாம்பிரலிங்கம். கனல் – நெருப்பு, தீயும் விளக்குமாகும். இரதம் – இரசக்கல், சந்தம் – சந்தனம், வன்றிறல் செங்கல் – உடையாத வலிமை பொருந்திய செங்கல், சுட்ட செங்கல் ஆகாது. வடிவுடை வில்வம் – வில்வக்காய், வில்வப் பழம் ஆகும். பொன் – பொன்னால் செய்யப்பட்ட லிங்கம், திருக்கொட்டை-உருத்திராக்கம்.
ஆன்மார்த்த பூசை எளிதில் செய்து பயன்பெற வேண்டும் என்பதற்காகவே இவ்வளவு பொருட் சிவலிங்கம் கூறப்பட்டன. பூசைக்குரிய நேரத்தில் எளிதில் கிடைக்கக் கூடியவற்றை ஆன்மார்த்த லிங்கமாக அமைத்துக் கொள்ளலாம். வழிபாட்டில் பரார்த்தம், ஆன்மார்த்தம் இரண்டிலும் பதினாறு வகை உண்டு. அவை : அபிடேகம், பூ, வாசனை, தூபம், தீபம், நீர், அமுது, ஆடை, வெற்றிலை பாக்கு, கண்ணாடி, கவரி, குடை, ஆலவட்டம், விசிறி, ஆடல், வாச்சியம் என்பனவாகும்.
“மாசில் உபசாரம் மஞ்சனம் பூ கந்தம்
நேசமிகு தூபம் ஒளி நீர் அமுது – தூசு அடைக்காய்
ஆடி குடை கவரி ஆலவட்டம் விசிறி
ஆடலொடு வாச்சியம் ஈரெட்டு”
என்று மறைஞான தேசிகர் குறிப்பிட்டுள்ளார்.
இடம், காலம், சூழ்நிலை ஆகியவற்றிற்கேற்ப இவை குறையும். பூவும் நீரும் மிகமிக இன்றியமையாதவையாகும்.
“புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு” (திருமந்திரம்).
“கற்றுக் கொள்வன வாயுள நாவுள; இட்டுக் கொள்வன பூவுள நீருள”
என்பது தேவாரப் பாடல் ஆகும்.
“பத்தியின் பணைத்த மெய்யன்பொடு
நொச்சியாயினும் கரந்தையாயினும்
பச்சிலையிட்டுப் பரவும் தொண்டர்
கருவிடைப் புகாமல் காத்தருள் புரியும் திருவிடை மருத! ”
“போதும் பெறாவிடில் பச்சிலையுண்டு புனல் உண்டு
எங்கும் ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டு”
என்பதனால் மனதில் ஞானபூசை செய்யலாம் என்பது பெறப்படுகிறது.
பூசையில் ஞானபூசை மிகச் சிறந்தது ஆகும். ஞானபூசைக்குக் கோவில் வேண்டுவதில்லை. திருவுருவங்கள் வேண்டுவதில்லை, ஒன்றிய ஞானமிருந்தால் போதும். ஞானத்தால் தொழும்போது உள்ளத்தில் இறைவனை எழுந்தருளச் செய்து ஞானத்தாலேயே அபிடேகம் செய்து ஞானத்தலேயே மலர்களைச் சூட்டலாம்.
“தம்மில் சிவலிங்கம் கண்டதனைத் தாம் வணங்கித்
தம்மன்பால் மஞ்சனநீர்தாம் ஆட்டித் – தம்மையொரு
பூவாக்கிப் பூவழியாமால் கொடுத்துப் பூசித்தால்
ஓவாமை அன்றே உளன்” என்பது சாத்திரம்.
புறப்பூசையில் புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியா வட்டம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய எட்டு இட்டு வழிபடுவதைப் போலவே அகப்பூசையில் கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு ஆகியவற்றை மலராக இட்டு வழிபடுவதைச் சிவஞான மாபாடியம் குறிப்பிகின்றது.
“காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
வாய்மையே தூய்மையாக மனமணிலிங்கமாக
நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி
பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே”
என்பது ஞான பூசையாகும்.
--திருச்சிற்றம்பலம்--