பஞ்ச கவ்வியத்தின் உண்மை

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

இறைவனுக்குச் செய்யும் அபிடேகத்தில் பஞ்ச கவ்வியம் மிகச் சிறப்பு உடையது. பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருள்களுக்குப் ‘பஞ்ச கவ்வியம்’ என்று பெயர். பஞ்சம் – ஐந்து, கவ்வியம் – கோவி (பசு) லிருந்து உண்டாவது, பால், தயிர், நெய், கோசலம் (பசுமூத்திரம்), கோமயம் (பசுச்சாணி) ஆகிய ஐந்தும் ‘பஞ்ச கவ்வியம்’ என்று வழங்கப் பெறும். தற்காலத்தில் கோமயம் என்பது பசு மூத்திரத்தைக் குறித்து வழங்கப் பெறுகிறது.

சைவத் திருமுறைகளில் ஆன் ஐந்து என்றே வழங்கப் பெறுகிறது. ‘ஆன் ஐந்து ஆட்ட’ என்ற திருமூலர் தம் திருமந்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். திருஞானசம்பந்தர்,

     “ஆன் அஞ்சு ஆடும் முடியான்”

     “ஆனில் அம்கிளர் ஐந்து”

     “ஆனின் நல்ஐந்து உகந்து ஆடுவர்” என்றும்,

திருநாவுக்கரசர்,

     “ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்”

     “அஞ்சுகொலாம் அவர் ஆடினதாமே” என்றும்

சுந்தரர்,

     “ஆனஅஞ்சும் ஆடும் அமரர்கள்தம் பெருமானை”

     “பாலொடு ஆன்அஞ்சும் ஆடவல்லானை” என்றும்

தேவாரப் பாடல்களில் ஆங்காங்கே பாடியுள்ளனர்.

ஐந்து யாவை? என்பதனைப் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. சிலர் கோசலம், கோமயம் என்ற இரண்டிற்குப் பதிலாக வெண்ணெய், மோர் சேர்த்து, பால், தயிர், நெய், வெண்ணெய், மோர் என்ற ஐந்தும் பஞ்ச கவ்வியம் என எழுதியுள்ளனர். இன்றும் சிலர் அவ்வாறு கொள்வதே ஏற்றுது எனப் பலவிடங்களில் கூறி வருகின்றனர்.

திருமுறைகளில் பலவிடங்களில் ஆன் ஐந்து எனப் பொதுவாகவே சுட்டப்படுகின்றது. பால், தயிர், நெய் என்ற மூன்றை மட்டும் பெயர் சொல்ல ஏனைய இரண்டையும் பொதுவாகவே குறிப்பிட்டுள்ளமையால் இத்தகைய கருத்து வேறுபாடு தோன்றலாயிற்று.

தவத்திரு சாந்தலிங்க சுவாமிகள் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வீரசைவ ஞானியாவார். கொலை மறுத்தல், வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோத உந்தியார் என்ற நான்கு நூல்களை இயற்றியுள்ளார். அவர் காலத்திலேயே வாழ்ந்த தவத்திரு சிதம்பர சுவாமிகள் நான்கு நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.

     “கீர்ஆதி ஐந்தும் ஈயும் தூய அழகிய ஆன்...”

என்ற கொலை மறுத்தல் பகுதிக்கு உரை எழுத வந்த சிதம்பர சுவாமிகள் பால், தயிர், நெய், கோசலம், கோமயம் என்னும் பஞ்ச கவ்வியங்களையும் உலகின்கண் வழங்கா நிற்கும் நிர்மலதேகி என்னும் சிறப்பினையுடைய பசு என்று எழுதியுள்ளார், சிவதருமோத்தரம், சிவஞான தீபம், காசிக் காண்டம் முதலிய நூல்களிலிருந்து மேற்கொளும் காட்டியுள்ளார். பஞ்ச கவ்வியம் ஐந்தின் சிறப்பு, அவற்றில் உறையும் தேவர்களின் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன.

பாலுக்குச் சந்திரனும், தயிர்க்கு வாயுவும், நெய்க்குத் திருமாலும், கோசலத்துக்கு வருணனும், கோமயத்துக்கு அக்கினியும் தெய்வங்கள் ஆவர். அதேபோல், ஒவ்வொன்றின் பயனும் குறிப்பிடப்படுகின்றது. கோசலம், கோமயம் என்ற இரண்டும் பசுவின் கழிவுப் பொருள்கள் எனக் கருதி அவற்றை நீக்கி வெண்ணெய், மோர் ஆகியவற்றைச் சேர்த்துக் கொள்கின்றனர். வெண்ணெய்தான் நெய் ஆகின்றது. இரண்டிற்கும் வேறுபாடு அதிகம் இல்லை. மோர் அபிடேககத்திற்கு ஏற்றது என்று சொல்ல முடியாது.

ஏனைய விலங்குகளின் கழிவுப் பொருள்களுக்கும், பசுவின் கழிவுப் பொருள்களுக்கும் வேறுபாடு உண்டு, ஏனைய விலங்குகளின் கழிவுப் பொருட்கள் கெட்ட நாற்றம் உடையன. பசுவின் கழிவுப் பொருளான மூத்திரம், சாணம் நறுமணம் உடையன. பசுவின் கழிவுப் பொருளான மூத்திரம், சாணம் நறுமணம் உடையன. தூய்மை ஆக்குவதனாலேயே இன்றும் வீடுகளில் தூய்மையாக்க கோமூத்திரம் தெளிக்கப்படுகின்றது பசுச்சாணம் கொண்டு மெழுகப்படுகின்றது.

காலை எழுந்ததும் வீட்டிற்கு முன் வாசலில் பசுச்சாணம் கரைத்துத் தெளிக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. வெளியிலிருந்து காலையில் வீட்டிற்குள் காற்றின் வழியாக நோய்க் கிருமிகள் வரக்கூடாது என்பதற்காகவே நம்மூதாதையர் இத்தகைய முறையை அமைத்துக் கொண்டனர்.

கோயில் கருவறைகள் வெளிச்சம் படாமல் இருட்டாக இருப்பதால் சிறு புழுக்கள், நோய்க்கிருமிகள் எளிதில் தங்கிக் கொள்ளும். மேலும் பஞ்சாமிர்தம் போன்ற இனிப்புப் பொருள்கள் அபிடேகம் செய்வதால் புழுக்கள் உண்டாகிவிடும். பசுச்சாணம், பசுமூத்திரம் அபிடேகம் செய்வதால் புழுக்கள், நோய்க்கிருமிகள் உண்டாகமல் தடுக்கப்படுகின்றன. அவ்வாறு அபிடேகம் செய்தமைக்கு இலக்கியங்களும் கல்வெட்டுகளும் ஆதாரங்களாக உள்ளன.

பெரிய புராணத்தில் பலவிடங்களில் பஞ்ச கவ்வியம் (ஆன் ஐந்து) அபிடேகம் செய்த செய்திகள் வருகின்றன.

சோழ நாட்டில் கணமங்கலம் என்ற ஊரில் அவதாரம் செய்தவர் தாயனார் ஆவார். வேளாளர் குலத்தில் தோன்றிய அவர், சிவபெருமானுக்கு நாள்தோறும் செந்நெல்லால் ஆன திருவமுது, செங்கீரை, மாவடு ஆகியவற்றைப் படைத்து வந்தார். வறுமை வந்துற்ற காலத்தும் கூலிக்கு நெல்லறுக்கச் சென்று அதனால் வருவதைக் கொண்டு இறைவனுக்கு அமுது படைத்து வந்தார்.

மனைவியும் தாமும் நீர் அருந்திப் பசியோடு கிடைத்த செந்நெல்லைக் கொண்டு அமுதாக்கி அத்துடன் கீரை, மாம்பிஞ்சு ஆகியவற்றையும் கூடையில் வைத்துச் சுமந்து முன்சென்றார். மனைவியார் பஞ்சகவ்வியம் ஏந்திப் பின் சென்றார்.

‘பின்புபோம் மனைவியார் ஆன்பெற்ற அஞ்சு ஏந்திச் சென்றார்’ என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார். சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் அவர்கள் பெரிய புராணத்துக்குப் பேருரை எழுதியுள்ளார். இப்பகுதிக்கு, அவர்-பால், தயிர், நெய், கோசலம், கோமயம் ஆகிய ஐந்துமே ஆன் ஐந்து என்று எழுதியுள்ளார். அத்துடன் திருவண்ணாமலைக் கல்வெட்டு ஒன்றையும் மேற்கொள் காட்டியுள்ளார்.

‘... திருவண்ணாமலை உடையார்க்குப் பஞ்ச கவ்வியம் ஆடியருள நித்தமும் சிறுகாலை சந்தியில் திருவண்ணாமலை என்னும் நாழியால் கோமூத்திரம் உழக்கும், கோமயம் ஆழாக்கும், பால் நாழிஉழக்கும், தயிர் நாழிஉரியும், நெய் நாழியும் ஆக இப்படி நித்தமும்... ’ என்பது கல்வெட்டுப் பகுதியாகும்.

திருவண்ணாமலை இறைவனுக்கு நாள்தோறும் காலை வழிபாட்டு அபிடேகத்தின்போது பஞ்சகவ்வியம் ஆட்டப்பெற்றது.

அளவை நாழிக்கு (படிக்கு) திருவண்ணாமலை நாழி என்று பெயர்.

5 செவிடு = 1 ஆழாக்கு, 2 ஆழாக்கு = 1 உழக்கு, 4 உழக்கு = 1 நாழி, 2 உழக்கு = 1 உரி, 2 உரி= 1 நாழி என்பது பண்டைய அளவு முறை. நாழி என்பது 1 படியாகும். இன்றைய முறையில் 1 ¼ லிட்டர் அளவு ஆகும்.

ஆண்டவன் கோயிலில் அக்காலத்தில் ஆன்ஐந்து அளவு வைத்து அபிடேகம் செய்தமுறை தெரிய வருகிறது.

பசு மூத்திரம், பசுச்சாணி ஆகியவற்றைச் சேர்த்துக் கொண்ட முறையைக் கல்வெட்டும் சான்று பகிர்கின்றது.

இத்தனைச் சான்றுகள் இருந்தும் இன்று பலர் வெண்ணெய், மோரையே சேர்த்துப் பஞ்சகவ்வியம் என்று பூசையில் பயன்படுத்தி வருகின்றனர். இம்முறை தமிழ் இலக்கியம், கல்வெட்டு ஆகியவற்றிற்கு மாறானது ஆகும்.

திருநீறு செய்யப் பசுச் சாணமும், மூத்திரமும் பயன்படுத்தும் முறை பண்டைக்காலம் தொட்டே இருந்து வந்துள்ளது.

நல்ல பசுக்கள் இட்ட சாணத்தை எடுத்து முதற் பகுதியையும், கடைசிப் பகுதியையும் நீக்கிப் பஞ்சகவ்வியம் இட்டுப் பிசைந்து காயவைத்துக் காய்ந்த எருமுட்டிகளை நெருப்பிலிட்டுச் சுட்டு நீறாக்கிப் பயன்படுத்த வேண்டும் என்று கச்சியப்ப முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

தாயனாரும் அவர்தம் மனைவியாரும் செந்நெல் அமுது, கீரை, மாம்பிஞ்சு பஞ்சகவ்வியம் கொண்டு சென்றபோது பசி மயக்கத்தால் தாயனார் கால்இடறி விழத் தொடங்கினார். பக்கத்திலிருந்த மனைவியார் தாங்கிப் பிடிக்கவும் அமுது, கீரை முதலியன வயலில் கீழே சிந்தின.

தாயனார் கொண்டு வந்தவை இறைவனுக்குப் பயன்படாமல் போயிற்றே என்று வருந்தி அரிவாளை எடுத்துத் தன் ஊட்டியை (குரல்வளை) அரியத் தொடங்கினார். இறைவன் வயல் வெடிப்பிலிருந்து கையை நீட்டித் தாயனார் கையைப் பற்றி மாம்பிஞ்சைக் கடித்து ‘விடேல்’ என்று ஓசையைக் காட்டி அருள் புரிந்தார்.

அரிவாள் கொண்டு அறுக்கத் தொடங்கி அருள் பெற்றதால் அரிவாள் தாயனார் – அரிவாட்டாயனார் எனப் பெயர் பெற்றார்.

வேளாள மரபினைச் சார்ந்துள்ள நாயனார், நாள்தோறும் கோயிலுக்கு அமுதம் பஞ்சகவ்வியமும் கொண்டு சென்றுள்ளார் என்றால், அக்காலத்தில் கோவில்களில் அனைவரும் சென்று வழிபட்ட முறை தெரியவருகிறது.

--திருச்சிற்றம்பலம்--

Back to Top