கோவில் கோபுரமும் விமானமும் ஒன்றா?

- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்

வரலாற்றுக்கு முற்பட்ட காலந்தொட்டு மக்கள் கடவுள் நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்து வந்துள்ளனர். தமிழில் மிகத் தொன்மையான தொல்காப்பியத்தில் கோயில், கடவுள் வாழ்த்து, வழிபடு தெய்வம் முதலியன சுட்டப்படுகின்றன. சங்க காலத்தில் முருகப் பெருமான், சிவபெருமான், துர்க்கை (கொற்றவை), திருமால் முதலியோர்க்குக் கோவில்கள் இருந்ததைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

முருகப் பெருமானுக்குத் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), ஆவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமி மலை), பழமுதிர்ச்சோலை முதலிய இடங்களில் கோவில்களிருந்தமையையும், அங்கு நடைபெற்ற வழிபாட்டு முறையையும் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் பாடியுள்ளார். ‘ஆய்வேள் நீலநாகத்தின் சட்டையைச் சிவபெருமானுக்குக் கொடுத்தான்’ என்று புறநானூறு கூறுகின்றது. நன்னன் மலையில் காரியுண்டிக் கடவுள் (நஞ்சுண்ட பெருமான்) கோவில் இருந்த்தை மலைபடுகடாம் குறிப்பிடுகின்றது. கொற்றவைக்கு அயிரை மலையில் – (இன்றைய ஐவர் மலையில்) சேர மன்னன் கோவில் அமைத்ததைப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகின்றது. பள்ளிகொண்ட பெருமாள் கோவிலைப் பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது. சங்க காலக் கோவில்கள் மண், செங்கல், மரம், உலோகம் ஆகியவற்றால் ஆனவை.

     “அமரர் தருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம்
      புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம், பகல் வாயில்
      உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க்கோட்டம் வேற்கோட்டம்
      வச்சிரக்கோட்டம், புறம்பணையான் வாழ்கோட்டம்
      நிக்கந்தக் கோட்டம், நிலாக்கோட்டம்”

ஆகிய கோவில்கள் புகார் நகரில் இருந்தன என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகின்றது.

அமரர் தருக்கோட்டம்–    கற்பகத்தரு நிற்கும் கோவில்
வெள்யானைக் கோட்டம்–    ஐராவதம் என்னும் வெள்ளை யானைக்குரிய கோவில்
வெள்ளை நாகர் கோட்டம்–    பலதேவன் கோவில்
உச்சிக் கிழான் தோட்டம்–    சூரியன் கோவில்
ஊர்க்கோட்டம்–    ஊர்மக்கள் வழிபடும் பொதுக் கோவில்
வேற்கோட்டம்–    முருகப் பெருமானின் வேல் நின்ற கோவில்
வச்சிரக் கோட்டம்–    இந்திரனின் வச்சிராயுதம் இருந்த கோவில்
புறம்பணையான் வாழ்கோட்டம்–    ஐயனார் கோவில்
நிக்கந்தக் கோட்டம்–    அருகதேவன் கோவில்
நிலாக் கோட்டம்–    சந்திரன் கோவில்

அறந்தொழில் வல்ல அந்தணர், ஆசிரியர், சோதிடர், கட்டிடத் தொழில்வல்ல கம்மியர் ஆகியோருடன் சிற்பக் கலைஞர் சேர்ந்து பத்தினிக்குக் கோவில் அமைத்ததையும் சிலப்பதிகாரம் சுட்டுகின்றது. கோச்செங்கணான், மாடக்கோவில்கள் எழுபது கட்டினான் என்று ஆழ்வார் பாடியுள்ளார்.

‘அழியக்கூடிய மண், மரம், செங்கல், உலோகம் ஆகியவற்றால் கோவில் அமைக்காமல், அழியாத நிலையில் கடவுளர்க்குக் கற்கோவில்கள் அமைத்தான் மகேந்திரவர்மன்’ என்று மண்டகப்பட்டுக் கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது. சங்க காலத்தையடுத்த பல்லவர் காலத்தில் முதலில் மண், செங்கல், மரம் முதலியவற்றால் ஆன கோவில்களே இருந்தன என்பது தெரிய வருகிறது. கருவறை, நடு மண்டபம், முன் மண்டபம் முதலியன அமைந்திருந்தன. பின் அவை கல்லால் ஆக்கப் பெற்றன.

குடிமல்லம், குடுமியான் மலை ஆகிய இடங்களில் உள்ள சிவலிங்கங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆய்வாளர்கள் குறித்துள்ளனர். அங்கெல்லாம் கோவில்கள் இருந்தன. தேர் உருளை பூட்டப் பெற்ற தேர்க் கோவில்கள் சாய்க்காடு, மேலை கடம்பூர், திருவதிகை முதலிய இடங்களில் உள்ளன. பல்லவர்கள் மலைச் சரிவுகளைக் குடைந்து குடைவரைக் கோயில்களை அமைத்தனர். மாமல்லபுரம் தேர்க்கோவில்கள் தனிச் சிறப்புடையன. ஒற்றைக் கற்கோவில் மீது தனி விமானம் அமைக்கப் பெற்றது. கருவறை மீது அமைக்கப்பெறும் விமானத்திற்கு மாமல்லபுரத் தேர்க்கோவிலே முன்னோடியாகும்.

மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரைக் கோவில்கள் கட்டப்பெற்ற கற்கோவில்களாகும். இவற்றிலும் விமான அமைப்பு உண்டு. காஞ்சி கயிலாசநாதர் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், வைகுந்தப் பெருமாள் கோவில் ஆகியவை பல்லவர் காலக் கட்டுக் கோவில்களாகும். கருவறை மீது விமானத்தை உயர்த்துக் கட்டும் முறை பல்லவர் காலத்தில் தோன்றியது. அக்காலத்தில் கோவில்களின் முன் உயர்ந்த கோபுரம் கட்டும் வழக்கம் இல்லை.

பிற்காலச் சோழர் காலத்தில் தேவாரப் பாடல் பெற்ற கோவில்கள் பல கற்றளிகளாக (கற்கோவில்) மாற்றப் பெற்றன. செம்பியன் மாதேவியார் பல கோவில்களைக் கற்றளிகளாக மாற்றியமைத்தார். இராசராசன் உலகப் புகழ் பெற்ற தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினான்.

அக்கோவில் கருவறை மீது அமைந்த விமானமே உயர்த்திக் கட்டப்பெற்றது. விமானத்தின் உயரம் 216 அடியாகும். அதன் உச்சியில் 80 டன் எடையுள்ள ஒரே கருங்கல் போடப் பெற்றுள்ளது. விமானத்தின் உச்சியின் மீது 3083 பலம் நிறையுள்ள செப்புக் குடம் அமைக்கப் பெற்றுள்ளது. கருவறையின் மீது முழுவதும் கல் வேலைப்பாட்டாலான மிக உயர்ந்த விமானம் இதுவேயாகும். கங்கை கொண்ட சோழபுரக் கோவில், தாராசுரக் கோவில், திரிபுவனக் கோவில் முதலியனவும் சோழர் காலத்தில் உயர்த்திக் கட்டப் பெற்ற விமான்ங்களை உடையனவாகும்.

கோவில் அமைப்பில் விமானம் வேறு, கோபுரம் வேறு. கருவறையின் மீது கட்டப்பெறுவது விமானமாகும்.

விமானத்தில் நாகரம், வேசரம், திராவிடம் என்று மூன்று வகை உண்டு என்று சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில் பாடியுள்ளார். கோவில் கட்டிட அமைப்பு முறையின்படி இவை வெவ்வேறு அமைப்பு உடையன. விமானம் சதுர அமைப்புக் கொண்டிருந்தால் நாகர விமானம் என்று பெயர். உருண்டுள்ள வட்டமான விமானமாக இருந்தால் வேசர விமானம் என்று பெயர். எட்டுப் பட்டை கொண்ட விமானமாக இருந்தால் திராவிட விமானம் என்று பெயர். ஒரு நிலை (ஏகதள விமானம்), இருநிலை விமானம் (துவிதளம்), மூன்று நிலை விமானம் (திதி தளம்), ஐந்துநிலை விமானம் (பஞ்சதளம்) முதலிய பாகுபாடுகளும் உண்டு.

கோபுரம் என்பது கோவிலின் நுழைவாயிலில் உயர்த்துக் கட்டப் பெறுவதாகும்.

சோழர் காலத்தில் சிதம்பரக் கோவிலுக்குக் கோபுரம் உயர்த்துக் கட்டுவது முதன் முதலில் தொடங்கிற்று. விஜய நகரப் பேரரசு காலத்தில் தான் கோபுரங்கள் அதிகமாகக் கட்டப்பெற்றன. கிருட்டிண தேவராயர் காலத்தில் கோபுரம் கட்டும் பணி செல்வாக்குப் பெற்றது. அதனால் முன் பகுதியில் உயர்த்துக் கட்டப்பெறும் கோபுரத்திற்கு இராய கோபுரம் என்று பெயர் வழங்கலாயிற்று. இராசகோபுரம் என்றும் வழங்கப்பெறும்.

திருவண்ணாமலைக்கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில் முதலிய இடங்களில் நான்கு திசைகளிலும் கோபுரங்கள் கட்டப்பெற்றன. ஐந்துநிலை, ஏழுநிலை, ஒன்பதுநிலை, பதினொரு நிலை என்ற நிலையில் கோபுரங்கள் உயர்ந்தன. கோபுரங்கள் அகன்று நீள் சதுரமாக அமைந்திருக்கும். மேலே செல்லச் செல்ல அளவு குறைந்து கொண்டே சென்று உச்சியில் கலசங்கள் அமைக்கப்பட்டிருக்கும். எத்தனை நிலை உண்டோ அத்தனை கலசங்கள் உச்சியில் அமைந்திருக்கும்.

கோபுரம் உயர்த்துக் கட்டும்போது அதன் கனத்தைத் தாங்குவதற்கு ஏற்ப அடிப்பகுதியில் ஆழமாகக் குழி எடுத்து மணல் பரப்பி அதன்மேல் கட்டுவதே பண்டைய முறையாகும். அவ்வாறு கட்டப்பட்ட அடிநிலையின் மீதே தற்காலத்தில் மிக உயர்த்தி அவிநாசியிலும், திருவரங்கத்திலும் கோபுரங்கள் கட்டப் பெற்றன.

தற்காலத்தில் விமானம், கோபுரம் வேறுபாடு தெரியாமல் அனைத்தையும் கோபுரம் என்றே அழைக்கின்றனர்.

கருவறையின் மீது அமைந்திருப்பது விமானம். கோவிலின் நுழைவாயிலில் உயர்த்துக் கட்டப் பெறுவது கோபுரம். இரண்டும் வேறு வேறு தன்மையுடையன, அமைப்பிலும் மாறுபாடு உடையன.

 

--திருச்சிற்றம்பலம்--

Back to Top