திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       குடியியல்

              அதிகாரம்: 99                   சான்றாண்மை
981. கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு.

மு.வ உரை:
கடமை இவை என்று அறிந்து சான்றாண்மை மேற்கொண்டு நடப்பவர்க்கு நல்லவை எல்லாம் இயல்பான கடமை என்று கூறுவர்.

982. குணநலம் சான்றோர் நலனே: பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

மு.வ உரை:
சான்றோரின் நலம் என்று கூறப்படுவது அவருடைய பண்புகளின் நலமே; மற்ற நலம் வேறு எந்த நலத்திலும் சேர்ந்துள்ளதும் அன்று.

983. அன்புநாண் ஓப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால்பு ஊன்றிய தூண்.

மு.வ உரை:
அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்புகளும் சால்பு என்பதைத் தாங்கியுள்ள தூண்களாகும்.

984. கொல்லா நலத்தது நோன்மை: பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.

மு.வ உரை:
தவம் ஓர் உயிரையும் கொல்லாத அறத்தை அடிப்படையாகக் கொண்டது; சால்பு பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பை அடிப்படையாகக் கொண்டது.

985. ஆற்றுவார் ஆற்றல் பணிதல்: அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை.

மு.வ உரை:
ஆற்றலுடையவரின் ஆற்றலாவது பணிவுடன் நடத்தலாகும். அது சான்றோர் தம் பகைவரைப் பகைமையிலிருந்து மாற்றுகின்ற கருவியாகும்.

986. சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல்.

மு.வ உரை:
சால்புக்கு உரைகல்போல் மதிப்பிடும் கருவி எது என்றால் தமக்கு ஒப்பில்லாத தாழ்ந்தோரிடத்திலும் தோல்வியை ஏற்றுக் கொள்ளும் பண்பாகும்.

987. இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு?

மு.வ உரை:
துன்பமானவற்றைச் செய்தவர்க்கும் இனிய உதவிகளைச் செய்யாவிட்டால், சான்றோரின் சால்பு என்ன பயன் உடையதாகும்?

988. இன்மை ஒருவற்கு இளிவுஅன்று சால்புஎன்னும்
திண்மைஉண் டாகப் பெறின்.

மு.வ உரை:
சால்பு என்னும் வலிமை உண்டாகப் பெற்றால் ஒருவனுக்குப் பொருள் இல்லாத குறையாகிய வறுமை இழிவானது அன்று.

989. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.

மு.வ உரை:
சால்பு என்னும் தன்மைக்குக் கடல் என்று புகழப் படுகின்றவர், ஊழிக்காலத்தின் வேறுபாடுகளே நேர்ந்தாலும் தாம் வேறுபடாமல் இருப்பர்.

990. சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலம்தான்
தாங்காது மன்னோ பொறை.

மு.வ உரை:
சான்றோரின் சால்பு நிறைந்த பண்பு குறைபடுமானால் இந்தப் பெரிய நிலவுலகமும் தன் பாரத்தைத் தாங்க முடியாமற் போய்விடும்.

------


Back to Top