திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard
       பொருட்பால்                       நட்பியல்

              அதிகாரம்: 93                   கள்ளுண்ணாமை
921. உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும்
கள்காதல் கொண்டுஒழுகு வார்.

மு.வ உரை:
கள்ளின்மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தமக்கு உள்ள புகழையும் இழந்துவிடுவார்.

922. உண்ணற்க கள்ளை: உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

மு.வ உரை:
கள்ளை உண்ணக்கூடாது; சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

923. ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்: என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி?

மு.வ உரை:
பெற்ற தாயின் முகத்திலும் கள்ளுண்டு மயங்குதல் துன்பம் தருவதாகும்; குற்றம் கடியும் இயல்புடைய சான்றோரின் முகத்தில் அது என்னவாகும்?

924. நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்என்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.

மு.வ உரை:
நாணம் என்று சொல்லப்படும் நல்லவள், கள் என்று சொல்லப்படும் விரும்பத்தகாத பெருங்குற்றம் உடையவர்க்கு எதிரே நிற்காமல் செல்வாள்.

925. கையறி யாமை யுடைத்தே பொருள் கொடுத்து
மெய்அறி யாமை கொளல்.

மு.வ உரை:
விலைப்பொருள் கொடுத்துக் கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

926. துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுஉண்பார் கள்உண் பவர்.

மு.வ உரை:
உறங்கினவர், இறந்தவரைவிட வேறுபட்டவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

927. உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ஒற்றிக் கண்சாய் பவர்.

மு.வ உரை:
கள்ளை மறைந்திருந்து குடித்து அறிவு மயங்குபவர், உள்ளூரில் வாழ்கின்றவரால் உள்ளான செய்திகள் ஆராயப்பட்டு எந்நாளும் சிரிக்கப்படுவர்.

928. களித்துஅறியேன் என்பது கைவிடுக: நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

மு.வ உரை:

929. களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ யற்று.

மு.வ உரை:
கள்ளுண்டு மயங்கினவனைக் காரணம் காட்டித் தெளிவித்தல், நீரின்கீழ் மூழ்கின ஒருவனைத் தீவிளக்குக் கொண்டு தேடினாற் போன்றது.

930. கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணும்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

மு.வ உரை:
ஒருவன் தான் கள் உண்ணாதபோது கள்ளுண்டு மயங்கினவனைக் காணுமிடத்தில் உண்டு மயங்குவதால் வரும் சோர்வை நினைக்கமாட்டானோ?

------


Back to Top