திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       நட்பியல்

              அதிகாரம்: 91                   பெண்வழிச்சேறல்
901. மனைவிழைவார் மாண்பயன் எய்தார்: வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.

மு.வ உரை:
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை அடையமாட்டார்; கடமையைச் செய்தலை விரும்புகின்றவர் வேண்டாத பொருளும் அதுவே.

902. பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

மு.வ உரை:
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்க செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

903. இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

மு.வ உரை:
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு எப்போதும் நல்லவரிடையே இருக்கும்போது நாணத்தைத் தரும்.

904. மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறுஎய்தல் இன்று.

மு.வ உரை:
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

905. இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

மு.வ உரை:
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.

906. இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்
அமைஆர்தோள் அஞ்சு பவர்.

மு.வ உரை:
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல் இவ்வுலகத்தில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை இல்லாதவரே ஆவர்.

907. பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

மு.வ உரை:
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

908. நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.

மு.வ உரை:
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தம்முடைய நண்பர்க்கு உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்; அறத்தையும் செய்யமாட்டார்.

909. அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.

மு.வ உரை:
அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும் மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.

910. எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்துஆம் பேதைமை இல்.

மு.வ உரை:
நன்றாக எண்ணுதல் பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.

------


Back to Top