திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       நட்பியல்

              அதிகாரம்: 88                   பகைத்திறந்தெரிதல்
871. பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

மு.வ உரை:
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன் சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.

872. வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்ஏர் உழவர் பகை.

மு.வ உரை:
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது.

873. ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

மு.வ உரை:
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன், பித்துப் பிடித்தவரைவிட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.

874. பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

மு.வ உரை:
பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கும் பண்புடையவனது பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.

875. தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

மு.வ உரை:
தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றை இனிய துணையாகக் கொள்ள வேண்டும்

876. தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

மு.வ உரை:
இதற்குமுன் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும், தெளியாவிட்டாலும், அழிவு வந்தகாலத்தில் அவனைத் தெரியாமலும் நீங்காமலும் வாளா விடவேண்டும்.

877. நோவற்க நொந்தது அறியார்க்கு: மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

மு.வ உரை:
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச் சொல்லக் கூடாது; பகைவரிடத்தில் மென்மை மேற்கொள்ளக்கூடாது.

878. வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

மு.வ உரை:
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு தற்காப்புத் தேடிக்கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத் தானாகவே அழியும்,

879. இளைதுஆக முள்மரம் கொல்க: களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

மு.வ உரை:
முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்; காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது வருத்தும்.

880. உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

மு.வ உரை:
பகைத்தவருடைய தலைமையைக் கெடுக்க முடியாதவர் திண்ணமாக மூச்சுவிடும் அளவிற்கு உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.

------


Back to Top