திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       நட்பியல்

              அதிகாரம்: 87                   பகைமாட்சி
861. வலியார்க்கு மாறுஏற்றல் ஓம்புக: ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.

மு.வ உரை:
தம்மைவிட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும்; தம்மை விட மெலியவர் மேல் பகை கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.

862. அன்புஇலன் ஆன்ற துணைஇலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு?

மு.வ உரை:
ஒருவன் அன்புஇல்லாதவனாய், அமைந்த துணை இல்லாதவனாய், தானும் வலிமை இல்லாதவனாய் இருந்தால், அவன் பகைவனுடைய வலிமையை எவ்வாறு ஒழிக்க முடியும்?

863. அஞ்சும் அறியான் அமைவுஇலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு.

மு.வ உரை:
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால், அவன் பகைவர்க்கு மிக எளியவன்.

864. நீங்கான் வெகுளி நிறைஇலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.

மு.வ உரை:
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால், அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.

865. வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்புஇலன் பற்றார்க்கு இனிது.

மு.வ உரை:
ஒருவன் நல்வழியை நோக்காமல், பொருத்தமானவற்றைச் செய்யாமல், பழியையும் பார்க்காமல், நற்பண்பும் இல்லாமல் இருந்தால், அவன் பகைவர்க்கும் எளியனாவான்.

866. காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.

மு.வ உரை:
ஒருவன் உண்மை காணாத சினம் உடையவனாய், மிகப் பெரிய ஆசை உடையவனாய் இருந்தால், அவனுடைய பகை விரும்பி மேற்கொள்ளப்படும்.

867. கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்துஇருந்து
மாணாத செய்வான் பகை.

மு.வ உரை:
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.

868. குணன்இலனாய்க் குற்றம் பலஆயின் மாற்றார்க்கு
இனன்இலன்ஆம் ஏமாப்பு உடைத்து.

மு.வ உரை:
ஒருவன் குணம் இல்லாதவனாய்க் குற்றம் பல உடையவனானால், அவன் துணை இல்லாதவன் ஆவான்; அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.

869. செறுவார்க்குச் சேண்இகவா இன்பம் அறிவுஇலா
அஞ்சும் பகைவர்ப் பெறின்.

மு.வ உரை:
அறிவு இல்லாத அஞ்சும் இயல்பு உடைய பகைவரைப் பெற்றால், அவரை எதிர்த்துப் பகைகொள்பவர்க்கு இன்பங்கன் தொலைவில் நீங்காமல் நிற்கும்.

870. கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி.

மு.வ உரை:
கல்வி கற்காதவனைப் பகைத்துக் கொள்ளும் எளிய செயலைச் செய்ய இயலாத ஒருவனிடம், எக்காலத்திலும் புகழ் வந்து பொருந்தாது.

------


Back to Top