திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       நட்பியல்

              அதிகாரம்: 85                   புல்லறிவாண்மை
841. அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதுஇன்மை
இன்மையா வையாது உலகு.

மு.வ உரை:
அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது.

842. அறிவிலான் நெஞ்சுஉவந்து ஈதல் பிறிதுயாதும்
இல்லை பெறுவான் தவம்.

மு.வ உரை:
அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.

843. அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது.

மு.வ உரை:
அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும்.

844. வெண்மை எனப்படுவது யாதுஎனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு.

மு.வ உரை:
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், `யாம் அறிவுடையேம்` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.

845. கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடுஅற
வல்லதூஉம் ஐயம் தரும்.

மு.வ உரை:
அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும்.

846. அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி.

மு.வ உரை:
தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும்.

847. அருமறை சோரும் அறிவுஇலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

மு.வ உரை:
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்துகொள்வான்.

848. ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவும்ஓர் நோய்.

மு.வ உரை:
தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும்.

849. காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டான்ஆம் தான்கண்ட வாறு.

மு.வ உரை:
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பான் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான்.

850. உலகத்தார் உண்டுஎன்பது இல்என்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.

மு.வ உரை:
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாகக் கருதி விலக்கப்படுவான்.

------


Back to Top