திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       நட்பியல்

              அதிகாரம்: 82                   தீ நட்பு
811. பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.

மு.வ உரை:
அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து குறைவது நல்லது.

812. உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?

மு.வ உரை:
தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன? இழந்தாலும் என்ன?

813. உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.

மு.வ உரை:
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக் கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும், கள்வரும் ஒரு நிகரானவர்.

814. அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.

மு.வ உரை:
போர் வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை போன்றவரின் உறவைவிட, ஒரு நட்பும் இல்லாமல் தனித்திருத்தலே சிறந்தது.

815. செய்துஏமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

மு.வ உரை:
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

816. பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்
ஏதின்மை கோடி உறும்.

மு.வ உரை:
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

817. நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்துஅடுத்த கோடி உறும்.

மு.வ உரை:
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி மடங்கு நன்மையாகும்.

818. ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்ஆடார் சோர விடல்.

மு.வ உரை:
முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை, அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட வேண்டும்.

819. கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

மு.வ உரை:
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.

820. எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.

மு.வ உரை:
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய அளவிலும் அணுகாமல் விடவேண்டும்.

------


Back to Top