திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       படையில்

              அதிகாரம்: 78                   படைச்செருக்கு
771. என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் ! பலர்என்ஐ
முன்நின்று கல்நின் றவர்!

மு.வ உரை:
பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.

772. கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது.

மு.வ உரை:
காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.

773. பேராண்மை என்ப தறுகண்:ஒன்று உற்றக்கால்
ஊராண்மை மற்றுஅதன் எஃகு.

மு.வ உரை:
பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.

774. கைவேல் களிற்றோடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும்.

மு.வ உரை:
கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில்பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.

775. விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்துஇமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.

மு.வ உரை:
பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ?

776. விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து.

மு.வ உரை:
வீரன் கழிந்த தன் நாட்களைக் கணக்கிட்டு விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன்படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.

777. சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து.

மு.வ உரை:
பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.

778. உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும்சீர் குன்றல் இலர்.

மு.வ உரை:
போர் வந்தாலும் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவார்.

779. இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர்?

மு.வ உரை:
தாம் உரைத்த சூள் தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை, அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்?

780. புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து.

மு.வ உரை:
தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.

------


Back to Top