திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard
       பொருட்பால்                       அரணியல்

              அதிகாரம்: 75                   அரண்
741. ஆற்று பவர்க்கும் அரண்பொருள்: அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்.

மு.வ உரை:
(படையெடுத்துப்) போர்செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்; (படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னைப் புகலிடமாக அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.

742. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.

மு.வ உரை:
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.

743. உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல்.

மு.வ உரை:
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.

744. சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.

மு.வ உரை:
காக்கவேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய ஊக்கத்தை அழிக்கவல்லது அரண் ஆகும்

745. கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்குஎளிதாம் நீரது அரண்.

மு.வ உரை:
பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு முடியாததாய், தன்னிடம் உணவுப்பொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளியதாகிய தன்மை உடையது அரண்.

746. எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும்
நல்ஆள் உடையது அரண்.

மு.வ உரை:
தன்னிடம் உள்ளவர்க்கு (வேண்டிய) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல வீரர்களை உடையது அரண் ஆகும்.

747. முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்.

மு.வ உரை:
முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை உடையது அரண் ஆகும்.

748. முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.

மு.வ உரை:
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும் (உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு உரியது அரண் ஆகும்.

749. முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண்.

மு.வ உரை:
போர்முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளிருந்தவர் செய்யும்) போர்ச் செயல் வகையால் பெருமை பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

750. எனைமாட்சித்து ஆகிய கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.

மு.வ உரை:
எத்தகைய பெருமைகளை உடையதாக இருந்த போதிலும், செயல்வகையால் சிறப்பு இல்லாதவரிடத்தில் அரண் பயனில்லாததாகும்.

------


Back to Top