திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard
       பொருட்பால்                       அமைச்சியல்

              அதிகாரம்: 65                   சொல்வன்மை
641. நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.

மு.வ உரை:
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது. ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

642. ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு.

மு.வ உரை:
ஆக்கமும் கேடும் சொல்கின்ற சொல்லால் வருதலால் ஒருவன் தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.

643. கேட்டார்ப் பிணிக்குந் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.

மு.வ உரை:
சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.

644. திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின்ஊங்கு இல்.

மு.வ உரை:
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்; அத்தகைய சொல்வன்மையைவிடச் சிறந்த அறமும் பொருளும் இல்லை.

645. சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.

மு.வ உரை:
வேறொரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக இல்லாதிருத்தலை அறிந்த பிறகே சொல்லக் கருதியதைச் சொல்லவேண்டும்.

646. வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசுஅற்றார் கோள்.

மு.வ உரை:
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்லும் போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

647. சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

மு.வ உரை:
தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய், சொல்லும் போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.

648. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

மு.வ உரை:
கருத்துக்களை ஒழுங்காகக் கோத்து இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.

649. பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

மு.வ உரை:
குற்றமற்றவையாகிய சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர், உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க விரும்புவர்.

650. இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
உணர விரித்துஉரையா தார்.

மு.வ உரை:
தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

------


Back to Top