திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       அரசியல்

              அதிகாரம்: 63                   இடுக்கணழியாமை
621. இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃதுஒப்பது இல்.

மு.வ உரை:
துன்பம் வரும்போதும் (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.

622. வெள்ளத்து அனைய இடும்பை அறிவுஉடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.

மு.வ உரை:
வெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.

623. இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

மு.வ உரை:
துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.

624. மடுத்தவாய் எல்லாம் பகடுஅன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

மு.வ உரை:
தடைப்பட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.

625. அடுக்கி வரினும் அழிவுஇலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்.

மு.வ உரை:
விடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும்.

626. அற்றேம்என்று அல்லல் படுபவோ பெற்றேம்என்று
ஓம்புதல் தேற்றா தவர்?

மு.வ உரை:
செல்வம் வந்தபோது `இதைப் பெற்றோமே` என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது `இழந்தோமே` என்று அல்லல்படுவாரோ?

627. இலக்கம் உடம்புஇடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல்.

மு.வ உரை:
மேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார்.

628. இன்பம் விழையான் இடும்பை இயல்புஎன்பான்
துன்பம் உறுதல் இலன்.

மு.வ உரை:
இன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன் துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை.

629. இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

மு.வ உரை:
இன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை.

630. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.

மு.வ உரை:
ஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.

------


Back to Top