மூலம்:
591 . உடையர் எனப்படுவது ஊக்கம்அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று?
பரிமேழலகர் உரை:
உடையர் எனப்படுவது ஊக்கம்-ஒருவரை உடையர்
என்று சொல்லச் சிறந்தது ஊக்கம்; அஃது இல்லார்
மற்று உடையது உடையரோ- அவ்வூக்கம் இல்லாதார்
வேறு உடையதாயினும் உடையராவரோ, ஆகார்.
('வேறு உடையது' என்றது, முன் எய்திநின்ற
பொருளை. 'உம்'மை விகாரத்தால் தொக்கது. காக்கும்
ஆற்றல் இலராகலின் அதுவும் இழப்பர் என்பதாம்.) ---
மு.வ உரை:
ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது
ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும்
அதை உடையவர் ஆவரோ?
G.U.Pope:
'Tis energy gives men o'er that they own a true control;
They nothing own who own not energy of soul.
Explanation
Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?
மூலம்:
592 . உள்ளம் உடைமை உடைமை: பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும்.
பரிமேழலகர் உரை:
உள்ளம் உடைமை உடைமை - ஊக்கம் உடைமையே
ஒருவனுக்கு நிலைநின்ற உடைமையாவது; பொருள்
உடைமை நில்லாது நீங்கிவிடும் - மற்றைப் பொருள்
உடைமை நிலை நில்லாது நீங்கிப் போம்.
('உள்ளம்' ஆகுபெயர். ஊக்கம் உள்ளத்துப்
பண்பாகலின், அதற்கு நிலை நிற்றலும், பொருள்
உடம்பினும் வேறாய் அழிதல் மாலைத்து ஆகலின்,
அதற்கு நிலை நில்லாமையும் கூறினார். கூறவே,
அஃது உடைமையன்று என்பது பெறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்;
மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல்
நீங்கிவிடுவதாகும்.
G.U.Pope:
The wealth of mind man owns a real worth imparts,
Material wealth man owns endures not, utterly departs.
Explanation
The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not.
மூலம்:
593 . ஆக்கம் இழந்தேம்என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துஉடை யார்.
பரிமேழலகர் உரை:
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார்-இழந்தவராயினும்
யாம் கைப்பொருளை இழந்தோம் என்று அலமரார்;
ஒரு வந்தம் ஊக்கம் கைத்து உடையார்-நிலைபெற்ற
ஊக்கத்தைக் கைப்பொருளாக உடையார்.
('ஆக்கம்' ஆகுபெயர். ஒரு வந்தம் ஆய ஊக்கம்
என்க. கைத்து - கையகத்தாய பொருள்:
"கைத்துண்டாம் போழ்தே கரவாது அறம் செய்ம்மின்'
(நாலடி 19) என்றார் பிறரும். அல்லாவாமைக்கு ஏது,
வருகின்ற பாட்டால் கூறுப.) ---
மு.வ உரை:
ஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம்
(இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று
கலங்கமாட்டார்.
G.U.Pope:
'Lost is our wealth,' they utter not this cry distressed,
The men of firm concentred energy of soul possessed.
Explanation
They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property."
மூலம்:
594 . ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையா னுழை.
பரிமேழலகர் உரை:
அசைவு இலா ஊக்கம் உடையான் உழை-
அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம்
அதர்வினாய்ச் செல்லும்-பொருள் தானே வழி
வினவிக்கொண்டு செல்லும்.
(அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான்
தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்
தானே சென்று சாரும் என்பார், 'அதர் வினாய்ச்
செல்லும்' என்றார். எய்தி நின்ற பொருளினும் அதற்குக்
காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு
பாட்டானும் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே
அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.
G.U.Pope:
The man of en ergy of soul inflexible,
Good fortune seeks him out and comes a friend to dwell.
Explanation
Wealth will find its own way to the man of unfailing energy.
மூலம்:
595 . வெள்ளத்து அனைய மலர்நீட்டம்: மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.
பரிமேழலகர் உரை:
வெள்ளத்து அனைய மலர் நீட்டம்-நின்ற நீரின்
அளவினவாம் நீர்ப்பூக்களின் தாளினது நீளங்கள்;
மாந்தர்தம் உள்ளத்து அனையது உயர்வு-அது போல
மக்கள்தம் ஊக்கத்தளவினதாம் அவர் உயர்ச்சி.
('மலர்' ஆகுபெயர். நீர் மிக்க துணையும் மலர்த்தாள்
நீளும் என்பதுபட 'வெள்ளத்து அனைய' என்றார்.
இவ்வுவமையாற்றலான் ஊக்கம் மிக்க துணையும்
மக்கள் உயர்வர் என்பது பெறப்பட்டது. உயர்தல் -
பொருள் படைகளான் மிகுதல்.) ---
மு.வ உரை:
நீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும்;
மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.
G.U.Pope:
With rising flood the rising lotus flower its stem unwinds;
The dignity of men is measured by their minds.
Explanation
The stalks of water-flowers are proportionate to the depth of water; so is men's greatness proportionate to their minds.
மூலம்:
596 . உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்: மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
பரிமேழலகர் உரை:
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்-அரசராயினார்
கருதுவதெல்லாம் தம் உயர்ச்சியையே கருதுக; அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து-அவ்வுயர்ச்சி
பால்வகையாற் கூடிற்றில்லையாயினும், அக்கருத்துத்
தள்ளாமை நீர்மையுடைத்து.
(உம்மை, தள்ளாமை பெரும்பான்மையாதல்
விளக்கிற்று. தள்ளிய வழியும் தாளாண்மையில்
தவறின்றி நல்லோரால் பழிக்கப் படாமையின், தள்ளா
இயற்கைத்து என்பதாம். மேல் 'உள்ளத்து அனையது
உயர்வு' என்றதனையே வற்புறுத்தியவாறு.) ---
மு.வ உரை:
எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ணவேண்டும்;
அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை
விடக்கூடாது.
G.U.Pope:
Whate'er you ponder, let your aim be loftly still,
Fate cannot hinder always, thwart you as it will.
Explanation
In all that a king thinks of, let him think of his greatness; and if it should be thrust from him (by fate), it will have the nature of not being thrust from him.
மூலம்:
597 . சிதைவுஇடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.
பரிமேழலகர் உரை:
களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும்-களிறு
புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன்
பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து
ஒல்கார்-அது போல ஊக்கமுடையார் தாம் கருதிய
உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம்
பெருமையை நிலை நிறுத்துவர்.
(புதை - அம்புக்கட்டு; பன்மை கூறியவாறு. 'பட்டால்'
என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை
களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும்
சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது
முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம்
உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன்
பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர்
அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார்.
G.U.Pope:
The men of lofty mind quail not in ruin's fateful hour,
The elephant retains his dignity mind arrows' deadly shower.
Explanation
The strong minded will not faint, even when all is lost; the elephant stands firm, even when wounded by a shower of arrows.
மூலம்:
598 . உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.
பரிமேழலகர் உரை:
உள்ளம் இல்லாதவர்-ஊக்கம் இல்லாத அரசர்; உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு எய்தார்-இவ்வுலகத்தாருள்
வண்மையுடையேம் என்று தம்மைத்தாம் மதித்தலைப்
பெற்றார்.
(ஊக்கம் இல்லையாகவே முயற்சி, பொருள், கொடை
செருக்கு இவை முறையே இலவாம் ஆகலின்,
'செருக்கு எய்தார்' என்றார். கொடை வென்றியினாய
இன்பம் தமக்கல்லாது பிறர்க்குப் புலனாகாமையின்
தன்மையால் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
G.U.Pope:
The soulless man can never gain
Th' ennobling sense of power with men.
Explanation
Those who have no (greatness of) mind, will not acquire the joy of saying in the world, "we have excercised liaberality".
மூலம்:
599 . பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
பரிமேழலகர் உரை:
பரியத கூர்ங்கோட்டது ஆயினும் - எல்லா விலங்கினும்
தான் பேருடம்பினது, அதுவேயும் அன்றிக் கூரிய
கோட்டையும் உடையது ஆயினும்; யானை புலி
தாக்குறின் வெரூஉம் - யானை தன்னைப் புலி
எதிர்ப்படின் அதற்கு அஞ்சும்.
(பேருடம் பான் வலி மிகுதி கூறப்பட்டது. புலியின்
மிக்க மெய்வலியும் கருவிச் சிறப்பும் உடைத்தாயினும்,
யானை ஊக்கம் இன்மையான் அஃதுடைய அதற்கு
அஞ்சும் என்ற இது, பகைவரின் மிக்க மெய்வலியும்
கருவிச் சிறப்பும் உடையராயினும், அரசர்
ஊக்கமிலராயின், அஃதுடைய அரசர்க்கு அஞ்சுவர்
என்பது தோன்ற நின்றமையின், பிறிது மொழிதல்.) ---
மு.வ உரை:
யானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை
உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு
அஞ்சும்.
G.U.Pope:
Huge bulk of elephant with pointed tusk all armed,
When tiger threatens shrinks away alarmed!
Explanation
Although the elephant has a large body, and a sharp tusk, yet it fears the attack of the tiger.
மூலம்:
600 . உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கை: அஃதுஇல்லார்
மரம்மக்கள் ஆதலே வேறு.
பரிமேழலகர் உரை:
ஒருவற்கு உரம் உள்ள வெறுக்கை-ஒருவற்குத்
திண்ணிய அறிவாவது ஊக்கமிகுதி; அஃது இல்லார்
மரம்-அவ்வூக்க மிகுதி இல்லாதார் மக்களாகார்,
மரங்களாவார்; மக்களாதலே வேறு - சாதி மரங்களோடு
இம்மரங்களிடை வேற்றுமை வடிவு மக்கள் வடிவே:
பிறிது இல்லை.
('உரம்' என்பது அறிவாதல், "உரனென்னுந்
தோட்டியான்" (குறள். 24) என்பதனானும் அறிக. மரம்
என்பது சாதியொருமை. மக்கட்குள்ள நல்லறிவும்
காரிய முயற்சியும் இன்மைபற்றி 'மரம்' என்றும்,
மரத்திற்குள்ள பயன்பாடின்மைபற்றி 'மக்களாதலே
வேறு' என்றும் கூறினார். பயன், பழம் முதலியவும்;
தேவர் கோட்டம், இல்லம், தேர், நாவாய்கட்கு
உறுப்பாதலும் முதலியன. இவை மூன்று பாட்டானும்,
ஊக்கமில்லாதாரது இழிபு கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம்
இல்லாதவர் மரங்களே; (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே
வேறுபாடு.
G.U.Pope:
Firmness of soul in man is real excellance;
Others are trees, their human form a mere pretence.
Explanation
Energy is mental wealth; those men who are destitute of it are only trees in the form of men.