திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       அரசியல்

              அதிகாரம்: 47                   தெரிந்துசெயல்வகை
461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

மு.வ உரை:
(ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், அழிந்தபின் ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.

462. தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

மு.வ உரை:
ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.

463. ஆக்கங் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்.

மு.வ உரை:
பின் விளையும் ஊதியத்தைக் கருதி இப்போது உள்ள முதலை இழந்துவிடக் காரணமான செயலை அறிவுடையவர் மேற்கொள்ளமாட்டார்.

464. தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

மு.வ உரை:
இழிவு தருவதாகிய குற்றத்திற்கு அஞ்சுகின்றவர் ( இன்ன ஊதியம் பயக்கும் என்னும்) தெளிவு இல்லாத செயலைத் தொடங்கமாட்டார்.

465. வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.

மு.வ உரை:
செயலின் வகைகளை எல்லாம் முற்ற எண்ணாமல் செய்யத் தொடங்குதல் பகைவரை வளரும் பாத்தியில் நிலைபெறச் செய்வதொரு வழியாகும்.

466. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்.

மு.வ உரை:
ஒருவன் செய்யத்தகாத செயல்களைச் செய்வதனால் கெடுவான்; செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதனாலும் கெடுவான்.

467. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

மு.வ உரை:
(செய்யத் தகுந்த) செயலையும் வழிகளை எண்ணிய பிறகே துணிந்து தொடங்க வேண்டும். துணிந்தபின் எண்ணிப் பார்க்கலாம் என்பது குற்றமாகும்.

468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

மு.வ உரை:
தக்கவழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக நின்று (அதை முடிக்குமாறு) காத்த போதிலும் குறையாகி விடும்.

469. நன்றுஆற்ற லுள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்பறிந்து ஆற்றாக் கடை.

மு.வ உரை:
அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவர்க்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால் நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும்.

470. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.

மு.வ உரை:
தம் நிலைமையோடு பொருந்தாதவற்றை உலகம் ஏற்றுக் கொள்ளாது. ஆகையால் உலகம் இகழ்ந்து தள்ளாத செயல்களை ஆராய்ந்து செய்ய வேண்டும்..

------


Back to Top