திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard
       அறத்துப்பால்                       துறவறவியல்

              அதிகாரம்: 36                   மெய்யுணர்தல்
351. பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருளான்ஆம் மாணாப் பிறப்பு.

மு.வ உரை:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும்.

352. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசஅறு காட்சி யவர்க்கு.

மு.வ உரை:
மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும்.

353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய உடைத்து.

மு.வ உரை:
ஐயத்திலிருந்து நீங்கி மெய்யுணர்வு பெற்றவர்க்கு அடைந்துள்ள இவ்வுலகைவிட. அடையவேண்டிய மேலுலகம் அண்மையில் உள்ளதாகும்.

354. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயம்இன்றே
மெய்உணர்வு இல்லா தவர்க்கு.

மு.வ உரை:
மெய்யுணர்வு இல்லாதவர்க்கு ஐந்து புலன்களின் வேறுபாட்டால் வளர்ந்த ஐந்துவகை உணர்வும் முற்றப்பெற்ற போதிலும் பயன் இல்லை.

355. எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

மு.வ உரை:
எப்பொருள் எத்தன்மையதாய்த் தோன்றினாலும் (அத் தோற்றத்தை மட்டும் கண்டு மயங்காமல்) அப்பொருளின் உண்மையான இயல்பை அறிவதே மெய்யுணர்வாகும்.

356. கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி.

மு.வ உரை:
கற்க வேண்டியவற்றைக் கற்று, இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர்; மீண்டும் இப் பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்.

357. ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துஉள்ள வேண்டா பிறப்பு.

மு.வ உரை:
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ளதென எண்ண வேண்டா.

358. பிறப்புஎன்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

மு.வ உரை:
பிறவித் துன்பத்திற்குக் காரணமான அறியாமை நீங்குமாறு, முத்தி என்னும் சிறந்த நிலைக்குக் காரணமான செம்பொருளைக் காண்பதே மெய்யுணர்வு.

359. சார்புஉணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரும் நோய்.

மு.வ உரை:
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

360. காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.

மு.வ உரை:
விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயரும் கெடுமாறு ஒழுகினால் துன்பங்கள் வாராமற் கெடும்.

------


Back to Top