திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard
       அறத்துப்பால்                       துறவறவியல்

              அதிகாரம்: 32                   இன்னாசெய்யாமை
311. சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.

மு.வ உரை:
சிறப்பைத் தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

312. கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசுஅற்றார் கோள்.

மு.வ உரை:
ஒருவன் கறுவுகொண்டு துன்பம் செய்த போதிலும் அவனுக்குத் திரும்பத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.

313. செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமம் தரும்.

மு.வ உரை:
தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானவற்றைச் செய்தால், செய்த பிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.

314. இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

மு.வ உரை:
இன்னா செய்தவரைத் தண்டித்தல், அவரே நாணும் படியாக அவர்க்கு நல்லுதவி செய்து, அவருடைய தீமையையும் நன்மையயும் மறந்துவிடுதலாகும்.

315. அறிவினான் ஆகுவது உண்டோ பிறதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை?

மு.வ உரை:
மற்ற உயிரின் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதிக் காப்பாற்றாவிட்டால், பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ?

316. இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல்.

மு.வ உரை:
ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

317. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணாசெய் யாமை தலை.

மு.வ உரை:
எவ்வளவு சிறியதாயினும் எக்காலத்திலும் எவரிடத்திலும் மனத்தால் எண்ணி உண்டாகின்ற துன்பச் செயல்களைச் செய்யாதிருத்தலே சிறந்தது.

318. தன்உயிர்க்கு இன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல்?

மு.வ உரை:
தன் உயிர்க்குத் துன்பமானவை இவை என்று உணர்ந்தவன், மற்ற உயிர்களுக்கு அத்துன்பங்களைச் செய்தல் என்ன காரணத்தாலோ?

319. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.

மு.வ உரை:
முற்பகலில் மற்றவர்க்குத் துன்பமானவற்றைச் செய்தால் அவ்வாறு செய்தவர்க்கே பிற்பகலில் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும்.

320. நோய்எல்லாம் நோய்செய்தார் மேலவாம்: நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

மு.வ உரை:
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையே சார்வன. ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர், பிறர்க்குத் துன்பம் செய்யார்.

------


Back to Top