திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard
       அறத்துப்பால்                       துறவறவியல்

              அதிகாரம்: 29                   கள்ளாமை
281. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்துஒன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

மு.வ உரை:
பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன், எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்கவேண்டும்.

282. உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

மு.வ உரை:
குற்றமானதை உள்ளத்தால் எண்ணுவதும் குற்றமே; அதனால் பி்றன் பொருளை அவன் அறியாத வகையால், `வஞ்சித்துக் கொள்வோம்’ என்று எண்ணாதிருக்க வேண்டும்.

283. களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து
ஆவது போலக் கெடும்.

மு.வ உரை:
களவு செய்து பொருள் கொள்வதால் உண்டாகிய ஆக்கம் பெருகுவதுபோல தோன்றி, இயல்பாக இருக்க வேண்டிய அளவையும் கடந்து கெட்டுவிடும்.

284. களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும்.

மு.வ உரை:
களவுசெய்து பிறர்பொருள் கொள்ளுதலின் ஒருவனுக்கு உள்ள மிகுந்த விருப்பம், பயன் விளையும்போது தொலையாத துன்பத்தைத் தரும்.

285. அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

மு.வ உரை:
அருளைப் பெரிதாகக் கருதி அன்பு உடையவராய் நடத்தல், பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை.

286. அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர்.

மு.வ உரை:
களவு செய்து பிறர்பொருள் கொள்ளுதலின் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.

287. களவுஎன்னும் காரறி வாண்மை அளவுஎன்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

மு.வ உரை:
களவு என்பதற்குக் காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.

288. அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்
களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.

மு.வ உரை:
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம்போல், களவுசெய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

289. அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர்.

மு.வ உரை:
களவு செய்தல் தவிர மற்ற நல்லவழிகளை நம்பித் தெளியாதவர், அளவு அல்லாத செயல்களைச் செய்து அப்போதே கெட்டழிவர்.

290. கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு.

மு.வ உரை:
களவு செய்வார்க்கு உடலில் உயிர்வாழும் வாழ்வும் தவறிப்போகும். களவு செய்யாமல் வாழ்வோர்க்குத் தேவருலகம் வாய்க்கத் தவறாது.

------


Back to Top