திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard
       அறத்துப்பால்                       துறவறவியல்

              அதிகாரம்: 27                   தவம்
261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.

மு.வ உரை:
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.

262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

மு.வ உரை:
தவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருத்தமாகும்; அக்கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.

263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்?

மு.வ உரை:
துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ வேண்டும் என விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்வதை மறந்தார்களோ?

264. ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

மு.வ உரை:
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும், நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.

265. வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

மு.வ உரை:
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

266. தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு.

மு.வ உரை:
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமைகளைச் செய்கின்றவர் ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண்முயற்சி செய்கின்றவரே.

267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடக்சுட நோற்கிற் பவர்க்கு.

மு.வ உரை:
புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல், தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.

268. தன்உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

மு.வ உரை:
தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும்.

269. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.

மு.வ உரை:
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) யமனை வெல்லுதலும் கைகூடும்.

270. இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

மு.வ உரை:
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம், தவம் செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர் பலராகவும் இருப்பதே ஆகும்.

------


Back to Top