திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       அறத்துப்பால்                       இல்லறவியல்

              அதிகாரம்: 14                   ஒழுக்கமுடைமை
131. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

மு.வ உரை:
ஒழுக்கமே எல்லோர்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரைவிடச் சிறந்ததாகப் போற்றப்படும்.

132. பரிந்துஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்துஓம்பித்
தேரினும் அஃதே துணை.

மு.வ உரை:
ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

133. ஒழுக்கம் உடமை குடிமை: இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.

மு.வ உரை:
ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.

134. மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்.

மு.வ உரை:
கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

135. அழுக்காறு உடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்கம் இலான்கண் உயர்வு.

மு.வ உரை:
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.

136. ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து.

மு.வ உரை:
ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை உடைய சான்றோர் ஒழுக்கத்தில் தவறாமல் காத்துக் கொள்வர்.

137. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை: இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.

மு.வ உரை:
ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுவதால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்: தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.

மு.வ உரை:
நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

139. ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்.

மு.வ உரை:
தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்.

140. உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

மு.வ உரை:
உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

------


Back to Top